36 நாள் பேரவை… தலை சுற்ற வைக்கும் செலவுகள்… ஜெனரேட்டர் வாடகை மட்டும் ரூ.5.24 லட்சமாம்

36 நாள் பேரவை… தலை சுற்ற வைக்கும் செலவுகள்… ஜெனரேட்டர் வாடகை மட்டும் ரூ.5.24 லட்சமாம் !

தமிழக சட்டப்பேரவையில் ஒரு நாளைக்கு எவ்வளவு செலவாகும் என யூகித்தது உண்டா? மின்சார கட்டணம், பணியாளர்கள் ஊதியம், பராமரிப்புக்கான செலவு, அடிப்படை வசதிகள் இப்படி எத்தனை செலவுகள் இருக்கும்? அதற்கு எவ்வளவு செலவாகும் என்பதெல்லாம் கணிக்க முடியுமா?. இதில் பேரவைக்கு என தனியாக செலவிடப்படும் ஜெனரேட்டர் வாடகையும், எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கப்படும் மினரல் வாட்டர் செலவு மட்டுமே தலை சுற்ற வைக்கிறது.

பேரவைக்கு என தனியாக செலவிடப்படுவதில் முக்கியமானவை ஜெனரேட்டர் வாடகையும், எம்.எல்.ஏ.க்களுக்கு தண்ணீர் பாட்டில்கள் பெறும் செலவும் தான். இந்த செலவு கணக்கு விவரங்களை, கோவையைச் சேர்ந்த டேனியல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார். இவ்வாறு சட்டமன்றத்தில் மன்ற கூட்டம் நடக்கும் நாட்களில் ஜெனரேட்டர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொடுக்கும் வாட்டர் பாட்டில்களுக்கான செலவு கணக்கே தலை சுற்ற வைக்கிறது.

பொதுத் தகவல் அலுவலர் கருணாநிதி அளித்த தகவலின் அடிப்படையில், சட்டமன்றத்தில் ஜெனரேட்டருக்கான செலவினம் மட்டும் ஒரு நாளைக்கு 14,550 ரூபாய். அதாவது இந்த ஆட்சியில் கடந்த மே மாதம் துவங்கி இன்று வரை 36 நாட்கள் சட்டமன்றம் நடந்திருக்கிறது. இதன் செலவு 5 லட்சத்து 23 ஆயிரத்து 800 ரூபாய்.இது போக எம்.எல்.ஏ.க்கள் பயன்பாட்டுக்கான மினரல் வாட்டருக்கான செலவு ஒரு நாளைக்கு 1,800 ரூபாய். 36 நாட்களுக்கு 64 ஆயிரத்து 800 ரூபாய்.

இந்த செலவினங்கள் தலை சுற்ற வைக்கும் நிலையில், கடந்த ஆட்சி காலத்தோடு ஒப்பிடுகையில், இதன் செலவினம் 3 மடங்கு வரை உயர்ந்திருப்பதாக சொல்கிறார் சமூக ஆர்வலர் டேனியல். இதுதொடர்பாக டேனியலிடம் பேசினோம். “கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ஜெனரேட்டர், குடிநீருக்காக சட்டப்பேரவையில் செலவிடப்பட்ட தொகை குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பெற்றிருந்தேன். இந்த மூன்றரை ஆண்டுகளில் ஜெனரேட்டருக்கு 5.04 லட்சமும், குடிநீருக்கு 1.21 லட்சமும் செலவிடப்பட்டிருந்தது.

நடப்பு ஆண்டில், அதாவது 15-வது சட்டப்பேரவையில், பேரவை நடந்த 36 நாட்களில் மட்டும் ஜெனரேட்டருக்கு 5.24 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. இது கடந்த பேரவை, அதாவது 14-வது சட்டப்பேரவையில் 2011 மே மாதம் முதல் 2014 டிசம்பர் மாதம் வரையிலான மூன்றரை மாதத்தில் ஆன செலவை விட அதிகம். ஒட்டுமொத்தமாக கடந்த சட்டப்பேரவையோடு ஒப்பிடுகையில் 2 முதல் 3 மடங்கு வரை அதிகரித்திருக்கிறது.

தினமும் 6 ஆயிரம் ரூபாயாக இருந்த ஜெனரேட்டர் செலவு, இப்போது 15 ஆயிரம் வரை அதிகரித்திருக்கிறது. 504 ரூபாயாக இருந்த கட்டணம் 1,800 ரூபாயாக உயர்ந்திருக்கிறது. மக்கள் பணம் வீணாக செலவிடப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. மக்களின் வரிப்பணம் முறையாக செலவிடப்பட வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர திட்டமிட்டுள்ளேன்,” என்றார்.

ஜெனரேட்டர், குடிநீர் கட்டணமே இவ்வளவு என்றால், ஒட்டு மொத்த செலவுத்தொகை எவ்வளவாக இருக்கும்

விகடன்

Leave a Reply