30 ஆண்டுகளாக குடும்பத்துடன் சேர்ந்து போராட்டம் நடத்திவருகிறார் ஒரு விவசாயி

ரசு பறித்துக்கொண்ட 10 ஏக்கர் விவசாய நிலத்தை மீட்க 30 ஆண்டுகளாக குடும்பத்துடன் சேர்ந்து போராட்டம் நடத்திவருகிறார் ஒரு விவசாயி. சென்னைக்கு அருகிலுள்ள திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டைச் சேர்ந்த விவசாயி பக்கிரிசாமிதான் அந்த பரிதாபத்துக்குரிய விவசாயி. ‘உங்களை அரசாங்கம் ஏமாற்றியது எப்படி ?’ பக்கிரிசாமியிடமே கேட்டோம். “முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக – ஆந்திர எல்லையில் இஸ்ரோ ராக்கெட் தளம் உருவானபோது, ராக்கெட் தளம் அமைக்க நிறைய  இடம் அரசாங்கத்துக்குத் தேவைப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் வசித்துவந்த பல விவசாயிகள், ராக்கெட் தளத்துக்காக தங்கள் நிலத்தை காலி செய்துவிட்டு போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அப்படி வெளியேறிய கிராம விவசாயிகளுக்கு, ஏதாவது நிலம் வழங்க அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு முடிவுசெய்தது. அதன்படி, அருகிலிருந்த பழவேற்காடு-வைரங்குப்பம் பகுதியைப் பார்வையிட்டார்கள். எனக்கு வைரங்குப்பத்தில் இருந்த 13 ஏக்கர் விவசாய நிலத்தில், 3 ஏக்கரை மட்டும் விட்டு விட்டு, அந்த விவசாயிகளுக்காக 9 ஏக்கர் 18 சென்ட் விவசாய நிலத்தை அந்தக் குழு கையகப் படுத்தியது. விவசாயிகளுக்குக் கொடுக்கத்தானே என்று நானும் அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

30ஆண்டுகள் கழிந்துவிட்டன. இன்றுவரை அந்த இடத்தை அந்த விவசாயிகளுக்கும்கொடுக்கவில்லை. என்னிடமும் திரும்ப ஒப்படைக்கவில்லை. கடைசியில், என்னுடைய விவசாய நிலம் பயன்படுத்தாமலே கிடந்து பொட்டல் காடாகப் போய்விட்டது. இப்போது அந்த இடத்தை பட்டா போட்டு தனியார் நிறுவனத்துக்கு விற்றுவிட்டனர். இப்படி பட்டா போட்டு விற்கிற கொடுமையை இன்னும் யாரிடம் போய்ச் சொல்வது?

பொன்னேரி  கோட்டாட்சியர் முத்துசாமியிடம் இதுகுறித்துப் புகார் கொடுத்திருக்கிறேன். மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லியிடம் ‘ஜமாபந்தி’யில் முறையிட்டபோது, ‘உங்கள் பிரச்னை இன்னுமா முடியவில்லை, விரைந்து கவனித்து நடவடிக்கை எடுக்கிறேன்’ என்றார். என்னுடைய விவசாய நில விவகாரம் அவ்வளவு ஃபேமஸ் ஆகிவிட்டது. நான் விவசாயம் செய்துகொள்ள அந்த நிலத்தைத் திரும்ப ஒப்படைக்கும்படி நீதிமன்ற உத்தரவும் இருக்கிறது.

vikatan

Leave a Reply