​பெங்களூரு நிலவரம்

பெங்களூருவில் ஆங்காங்கே 144 போட்டுவிட்டார்கள்; தமிழ்சங்கத்துக்குள் ஆட்கள் புகத் தயாராக இருக்கிறார்கள் என்றெல்லாம் வரிசையாகச் செய்திகள் வந்து கொண்டேயிருக்கின்றன. அலுவலகத்திற்குள் இருப்பவர்கள் பதறுகிறார்கள். தமிழ்நாட்டைச் சார்ந்தவர்களுக்குத் தொடர்ந்து அலைபேசி அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. ‘பத்திரமா இருக்கியா?’ என்று விசாரித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

நான்கரை மணியிலிருந்து ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்தேன். பிரச்சினைகள் எதுவுமில்லை என்றாலும் வெளியில் ஒருவிதமான பதற்றம் தெரிகிறது. வாகனங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது. எல்லோரும் அவசர அவசரமாக வீடுகளுக்கு விரைந்து கொண்டிருக்கிறார்கள். அலுவலங்களைப் பூட்டி வைத்திருக்கிறார்கள். அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும் சில வண்டிகள் ஓடிக் கொண்டுதான் இருக்கின்றன. மற்றபடி கல்லடி, தீ வைப்பு, வன்முறை என்று எதையும் பார்க்கவில்லை.
டிரினிட்டி மெட்ரோ நிலையத்திற்கு முன்பாக லிவிங் ஸ்மைல் வித்யா அமர்ந்திருந்தார். போக்குவரத்து வசதி இல்லாமல் அமர்ந்திருக்கிறாரோ என நினைத்துப் பேசினேன் ‘அய்யோ தமிழில் பேசாதீங்க’ என்று சிரித்தபடியே சொன்னார். அவருக்கு என்னை அடையாளம் தெரியவில்லை. அங்கு ஓரிடத்தில் ஒத்திகை பார்த்துக் கொண்டிருக்கிறாரக்ளாம். அதிகமாகப் பேசிக் கொள்ளாமல் நகர்ந்துவிட்டேன்.
வாகனங்களின் போக்குவரத்து இருந்தாலும் தமிழகத்தின் பதிவு எண் கொண்ட ஒரு வண்டியும் சாலையில் இல்லை. சில இடங்களில் தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட வண்டிகளைத் தாக்கியிருக்கிறார்கள். மெட்ரோ ரயில் சேவையை நிறுத்தி வைத்திருக்கிறார்கள். நகரின் பல கடைகள் அடைக்கப்பட்டிருக்கின்றன. வாசுதேவ் அடிகாஸ் மாதிரியான கன்னடத்தவரின் பிராண்ட் பெற்ற சில கடைகள் மட்டும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. ஒரு வண்டியில் கர்நாடகத்தின் கொடிகளைக் கட்டிக் கொண்டு ‘காவேரி எங்களுக்கே’ என்று கத்தியபடி சில இளைஞர்கள் சென்றார்கள். மற்றபடி அல்சூர், எம்.ஜி.ரோடு, பிரிகேட் ரோடு மாதிரியான பகுதிகளில் எந்தச் சம்பவங்களையும் காணவில்லை. காவலர்கள் ஆங்காங்கே தென்படுகிறார்கள். ரிசர்வ் படையினரும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.
(திருவள்ளுவர் சிலை)
(அல்சூர் தமிழ்ச்சங்கம்)
‘அங்கே அடித்தார்களாம்; இங்கே நொறுக்கினார்களாம்’ என்பதையெல்லாம் அப்படியே நம்ப வேண்டியதில்லை. ‘தமிழ்ச்சங்கம் கொளுத்தப்பட்டுவிட்டதாம்’ என்று கூடச் சொன்னார்கள். ‘ஆம்’ என்ற விகுதியில் முடிந்தாலே அது வதந்திதான் என்று முடிவு செய்து கொள்ளலாம் . திருவள்ளுவர் சிலைக்குத்தான் முதலில் சென்றேன். வள்ளுவரைச் சுற்றி ஏகப்பட்ட காவலர்கள் காவலுக்கு நிற்கிறார்கள். ஊடகவாசிகள் மைக்கைப் பிடித்தபடி முக்கிக் கொண்டிருந்தார்கள். ‘அல்சூர் ஏரியை வேடிக்கை பார்க்க விடுறானுகளா? ஆன்னா ஊன்னா துப்பாக்கியைத் தூக்கிட்டு வந்து சுத்தி நின்னுக்கிறானுக’ என்று வள்ளுவர் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும். அவர் முகத்தைப் பார்க்கவே பரிதாபமாக இருந்தது. தமிழ்ச்சங்கத்திலும் அப்படித்தான். இவையிரண்டும் மிகவும் சென்ஸிடிவான பகுதிகள் என்பதால் உச்சபட்ச பாதுகாப்பு போலிருக்கிறது. அல்சூர் மாதிரியான தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகள் கூட அமைதியாகத்தான் இருக்கின்றன.
(எம்.ஜி.ரோடு- பிரிகேட் சாலை சந்திப்பு)
நடந்துதான் சென்று வந்தேன். ‘போலீஸே அடிக்க விட்டுவிடுகிறது’ என்பது மாதிரியான டுபாக்கூர் வதந்திகளை யாரோ தொடர்ந்து பரப்பிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள், பேட்ரோல் வண்டிகள் என்று இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். மகாத்மா காந்தி சாலையிலும், பிரிகேட் சாலையிலும் 144 தடையுத்தரவும் எதுவுமில்லை. அங்கேயிருந்த காவலர் ஒருவரிடம் ‘இல்லி 144 இதியா சார்?’ என்றேன். தான் இருக்கும் இடத்தில் அப்படியெல்லாம் இல்லை என்றார். வேறு எங்காவது இருக்கிறதா என்று கேட்டால் ‘அப்படிச் சொல்லுறாங்க…ஆனா நிஜமா எனக்குத் தெரியவில்லை’ என்றார். எங்கே 144 என்பதே யாருக்கும் தெரியவில்லை. ஆனால் அங்கே 144, இங்கே 144 என்று அடித்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
நன்கு அறிமுகமமான காவல்துறை உயரதிகாரி ஒருவரை அழைத்துக் கேட்ட போது ‘நான்கு பேர் சேர்ந்து போராட்டம் நடத்துக் கூடாதுன்னு 144 இருக்கு..ஆனா வழக்கம் போல் சென்று வருவதற்கு எந்தத் தடையுமில்லை’ என்றார். இதுதான் உண்மை நிலவரம். 
இப்பொழுது மாலை 5.30 மணி. இதுவரைக்கும் நகரத்தின் மையப்பகுதிக்குள் எந்தப் பெரிய பிரச்சினையுமில்லை என்று சொல்ல முடியும். பிறகு ஏன் ஊடகங்கள் இவ்வளவு விஸ்தாரப்படுத்துகின்றன என்றுதான் புரியவேயில்லை. அப்பா அலைபேசியில் அழைத்து நேரங்காலமுமாக வீட்டுக்குச் செல்லச் சொல்கிறார். நண்பர்கள் தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். இப்படி ஊரில் இருப்பவர்களையெல்லாம் மிரட்டுவதுதான் கண்டபலன். அவர்கள் டிவியைப் பார்த்து அலறியபடி பெங்களூர்வாசியை அழைக்க பெங்களூர்வாசிகள் வெளி நிலவரம் தெரியாமல் ஏசி அறைக்குள் இருந்தபடியே பதறுகிறார்கள். 
எனது குடும்பத்தைப் போலவே சக சாமானியனின் குடும்பமும் சலனமில்லாமல் இருக்க வேண்டும் என்றுதான் பயப்படுகிறேன். அவன் தமிழனாக இருந்தாலும், கன்னடத்தவனாக இருந்தாலும், மலையாளியாக இருந்தாலும், தெலுங்கனாக இருந்தாலும் எளிய மனிதர்களை பெரும் பிரச்சினைகளின் குரூரக் கரங்கள் தாக்கிவிடக் கூடாது என்று தொடை நடுங்குகிறேன்தான். பயந்தாங்கொள்ளியென்றும், தொடை நடுங்கி என்றும் ஒத்துக் கொள்வதில் தயக்கம் எதுவுமில்லை. 
இதுவரைக்கும் அலைந்து திரிந்த வரையிலும் பெரிய அளவில் பயப்பட எதுவுமில்லை. எச்சரிக்கையாக இருந்து கொள்வது நல்லதுதான். அதில் தவறு எதுவுமில்லை. ஆனால் இனம்புரியாத பதற்றமும் பயமும் அவசியமற்றவை. ஊடகங்கள் ஊதிப்பெருக்குகின்றன. கையில் கேமிராவும் மைக்கும் வைத்திருக்கிறவர்கள் கலவரம் நடக்கும் ஒன்றிரண்டு பகுதிகளை மட்டுமே பூதாகரமாக்கிக் காட்டுகிறார்கள். அவை நகரத்திற்கு வெளியில் இருப்பவர்களுக்கும் உள்ளே இருப்பவர்களுக்கும் நடுக்கத்தை உண்டாக்குகின்றன. வதந்திகளையும் யாரோ சிலர் செய்யக் கூடிய விஷமச் செயல்களையும் அடிப்படையாக வைத்துக் கொண்டு பரஸ்பர வன்மத்தை வளர்த்தெடுப்பதை நிறுத்துவதுதான் நல்லது. 
கையில் கிடைத்திருக்கும் தொழில்நுட்பத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு வன்மத்தை வேண்டுமானாலும் வளர்த்துவிட முடிகிறது அல்லவா? எவ்வளவு புரளியை வேண்டுமானாலும் கிளப்பிவிட முடிகிறது. Technology is a curse என்பதற்கான உதாரணமாக வளர்த்துவிடப்படும் இத்தகைய பதற்றங்களைத் தயக்கமேயில்லாமல் சுட்டிக் காட்டலாம்.
@மணிகண்டன்

Leave a Reply