​தனியார் பள்ளியின் அடாவடித்தனம்

​தனியார் பள்ளியின் அடாவடித்தனம் மற்றும் மனித உரிமை மீறல்
சென்னை சிட்லபாக்கத்தில் NSN annexe பள்ளி இருக்கிறது. கடந்த காலாண்டுத் தேர்வில் ஓரிரு பாடங்களில் தோல்வியடைந்த 38 மாணவர்கள் ( பத்து பன்னிரண்டாம் வகுப்பைச் சேர்ந்த  பிள்ளைகள்) 14 அக்டோபர் வெள்ளிக்கிழமை அன்று, ஆசிரியர்களால் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.  அதாவது திங்கள் கிழமையன்று யாரும் பள்ளிக்கு வர வேண்டாமென்றும், டி.சி.யை வீட்டுக்கு அனுப்பி வைப்போம் என்றும் கடும் போக்கில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் சொல்லியிருக்கிறார்கள். சனிக்கிழமை பெற்றோர் சந்திப்பின் போது ஒரு சில பெற்றோர்களுக்கு மட்டும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த மிரட்டலை முழுமையாக நம்ப முடியாத மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் பெருந்தயக்கத்துடன் திங்கள் கிழமை ,17 ஆம் தேதி வழக்கம் போல‌ பள்ளிக்கு தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர் ஆனால் . அவர்கள் யாரும் வகுப்பறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் அரை நாள் முழுவதும் வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றனர்.  மீதம் அரை நாள், பள்ளியின் நூலகத்துக்குள் அமர வைக்கப்பட்டிருக்கின்றனர்.  அன்று மாலை ஒவ்வொரு பெற்றோருக்கும் பள்ளி நிர்வாகம் தொலைபேசியில் அழைத்து, வெள்ளிக்கிழமையே உங்கள் குழந்தைகளை வர வேண்டாமென்று சொன்னோமே.. ஏன் அனுப்புகிறீர்கள் என்று பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியிருக்கிறார்கள்.  இதனால் கொதிப்படைந்த பெற்றோர் மறுநாள்,  பள்ளி துணை முதல்வரை  இன்று (18.10.2016) சந்திக்கச் சென்றிருக்கிறார்கள்.  ஒரு மணி நேரத்துக்கு மேல் எந்த விபரமும் இல்லாமல் பெற்றோர்களும் அலுவலகத்துக்கு வெளியே காக்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். பொறுமையிழந்த ஒரு சில பெற்றோர் ஏன் எங்களை காக்க வைக்கிறீர்கள். எப்போது எங்களை சந்திப்பீர்கள் என்று கூச்சல் போடவே , அடுத்த அரை மணி நேரத்துக்குப் பிறகு பள்ளி துணை முதல்வரான  டிம்பிள் , பெற்றோர்களை சந்திக்க இசைந்திருக்கிறார்.
“உங்கள் பிள்ளைகள் எங்கள் பள்ளிக்கு வேண்டாம். எவ்வளவு பணம் கட்டினீர்கள் என்று சொல்லுங்கள். அதற்கான காசோலையையும் டி.சி.யையும் உங்கள் வீட்டிற்கு அனுப்புகிறோம்” என்று மிரட்டல் தொனியுடன் பெற்றோர்களிடம் டிம்பிள் பேசியிருக்கிறார். ( தகுந்த வீடியோ ஆதாரங்களும் இருக்கின்றன ) இதனை ஏற்றுக் கொள்ளவியலாத பெற்றோர்கள்,  குழந்தைகள் பாடங்களில் தோல்வியடைந்தால் யார் பொறுப்பு எனக் கேட்டு கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். “பள்ளியில் ஓரளவு தான் நாங்கள் பார்த்துக் கொள்ள முடியும்.  ஃபெயிலான மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்களே பொறுப்பு..பள்ளி பொறுப்பல்ல” என்றும் பொறுப்பில்லாமல் பதிலளித்திருக்கிறார். மேலும் பெற்றோர்கள் வீட்டில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வீட்டில் நீங்கள் தான் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றும் பேசியிருக்கிறார் டிம்பிள். 
பெற்றோர்கள் குறைவாக படித்தவர்களாக இருந்தால் என்ன செய்ய முடியும் என ஒரு பெற்றோர் கேட்ட கேள்விக்கு, அப்படியான குழந்தைகளை இங்கு படிக்க வைக்காதீர்கள்” என்றும் திமிராக பதிலளித்திருக்கிறார் டிம்பிள்.  வாதங்கள் அதிகமாகவே, அங்கிருந்து வெளியேறி மீண்டும் தனது அறைக்குள் போய் அமர்ந்து கொண்டாராம். மீண்டும் போய் பெற்றோர் கேட்க, இது சரி வராது.  எல்லோரும் டி.சி வாங்கிக் கொள்ளுங்கள் எனத் தொடர்ந்து திமிராக பேசியிருக்கிறார். ஒவ்வொருவராக என்னிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு,  தவறுக்கு நீங்கள் தான் பொறுப்பு என கையெழுத்துப் போட்டு விட்டுச் செல்லுமாறு மிரட்டியிருக்கிறார். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு கையெழுத்தும் போட்டு விட்டு மன்னிப்பு கேட்டு விட்டு சென்ற பிறகே அக்குழந்தைகள் இன்று வகுப்பறைக்குள் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
மேலோட்டமாக பார்ப்பதற்கு சாதாரண பிரச்சனையாக இது தோன்றலாம். ஆனால் நடந்திருப்பது தனியார் கல்வி நிறுவனங்களின் அடாவடித்தனத்தின் உச்சம்.  அதாவது படிக்கும் பிள்ளைகள் மட்டும் தான் இங்கு படிக்க முடியும். சுமாராக படிக்கும் மாணவர்கள் எங்களுக்கு வேண்டாம் என்று சொல்வது அப்பட்டமான லாபவெறி. அதாவது நூறு விழுக்காடு தேர்ச்சி என்கிற விளம்பரமே அவர்களுக்கு முக்கியம். அதன் மூலம் இந்த பள்ளிகள் அடிக்கப் போகும் கட்டணக் கொள்ளையே முக்கியம். அதற்காக சுமாராக படிக்கும் மாணவர்களை கல்வியாண்டின் எந்த நேரத்திலும் கழட்டி விடத் தயாராக இருக்கிறார்கள். அதற்காக கட்டிய பணத்தைக் கூட திருப்பித் தர தயாராக இருக்கிறார்கள்.  
ஒரு மாணவன் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தால் அதற்கு அந்த பள்ளியும் ஆசிரியர்களும் தான் முழு பொறுப்பு. இதை வசதியாக மறைத்து விட்டு, பெற்றோர்களின் தலையில் பழியை சுமத்தி, அடுத்த ஆண்டு தங்கள் விளம்பரம், லாபவெறிக்காக,  ஓரிரு பாடங்களில் தோல்வியடையும் மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க விரும்புகிறார்கள். மேலும் மாணவர்கள் மட்டுமல்ல.. பெற்றோர்களை  வெளியில் நிறுத்தி காக்க வைப்பது, அவர்களை இந்த ஆசிரியரின் முன் மண்டியிட வைப்பது என்பது சர்வாதிகார, மேட்டடிமை  தன அடாவடிகளின் உச்சம். கடந்த சில காலங்களில் சில பெற்றோர்கள் காலில் விழுந்து கெஞ்சுவதைக் கூட ரசித்திருக்கிறார் இந்த பள்ளிமுதல்வர் . ஒரு நாள் முழுக்க குழந்தைகளை வகுப்பறைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்தது,  அப்பட்டமான மனித உரிமை மீறல். அது மட்டுமின்றி மற்ற மாணவர்களின் முன் தோல்வியடைந்த மாணவர்களை அவமானப்படுத்துவது, பெற்றோர்களையும் அவமானப்படுத்தி, தங்கள் காலடியில் விழ வைப்பது போன்ற அருவருத்தக்கச் செயல்களை இந்த பள்ளி நிர்வாகம் தொடர்ந்து செய்தும் வருகிறது. இந்நடவடிக்கைகளால்  குழந்தைகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி தகாத முடிவுகளை எடுக்கும் பட்சத்தில், இவற்றுக்கு யார் பொறுப்பேற்பது?
கண் கூடாக நம் முன் எதிர் வர விருக்கும் ஆபத்துகளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம் ?  யாருக்காக இந்த கல்விக் கூடங்கள் செயல்படுகின்றன ?   90 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை 100 மதிப்பெண் வாங்க வைப்பதற்கு மட்டும் தான் பள்ளிக் கூடங்கள் இருக்கின்றதாம் . 40 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை மேம்படுத்தி 60 மதிப்பெண்கள் இவர்களால் வாங்க வைக்க முடியாது என்றால், NSN போன்ற‌ இத்தனியார் பள்ளிகளின் கையாலாகாத தனத்தையும் கட்டணக் கொள்ளை லாபவெறியையும் எதிர்த்து போராட வேண்டியது யாருடைய பொறுப்பு ?
 தேர்ச்சி மதிப்பெண் அரசாங்கம் நிர்ணயித்துஇருப்பது 35 மதிப்பெண்கள் ஆனால் இந்த பள்ளியில் தேர்ச்சி மதிப்பெண்கள் 40 இதுவே பிள்ளைகளை மன அழுத்தத்திற்கு ஆளாக நேரிடும் .
 இதற்கு இன்று 18.10.2016 உடனடியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது உடனடியாக நிர்வாகம் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளபடுகிறது .

Leave a Reply