​*”ஜல்லிக்கட்டு” அரசியல்…. விழித்துக் கொள்ளுமா (இந்தியா) தமிழகம்…?*

நமது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் காளைகளை சேர்த்து கடந்த 2011ம் ஆண்டு காங்கிரஸ் தலைமையில் இருந்த மத்திய அரசு உத்தரவிட்டதும், அதனைத் தொடர்ந்து பீட்டா அமைப்பு உச்சநீதிமன்றத்தை அணுகி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை பெற்றதும் நாம் அனைவரும் அறிந்த விசயம் தான்.
பணக்காரர்கள் விளையாடும், பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வர காரணமாக இருக்கும் குதிரைகளை காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் சேர்க்க அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு முன் வராததும், குதிரை பந்தயத்தில் தோற்கும் குதிரைகள் சுட்டு கொல்லப்பட்டு வரும் நிலையில் விலங்குகள் மீது அக்கறை இருப்பதாக காட்டிக் கொண்டிருக்கும் பீட்டா அமைப்பு குதிரை பந்தயத்தை தடை செய்ய முன் வராததும் பின்னணியில் மிகப்பெரிய சதி இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஏனெனில் இன்று பால் உற்பத்தியில் உலகளவில் சுமார் 17% பால் உற்பத்தியை தன்னகத்தே கொண்டு இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. அது மட்டுமின்றி நமது இந்தியாவில் தான் பால் கொள்முதல் விலை மிகவும் குறைவாக இருக்கிறது. ஏற்கனவே காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு அன்னிய முதலீடு எனும் பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பளித்து வந்ததை பயன்படுத்திக் கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் நமது இந்திய பால் வளத்தை குறி வைக்க தொடங்கின. அதன் முதற்கட்டமாக நமது சுதேசி பால் நிறுவனங்களின் பங்குகளை அதிக விலை கொடுத்து வாங்கி குறிப்பிட்ட காலகட்டத்தில் அந்த சுதேசி பால் நிறுவனங்களை முற்றிலும் தங்கள் உடமைகளாக மாற்றி விட்டன.
ஏற்கனவே குளிர்பான சந்தையில் பன்னாட்டு நிறுவனங்கள் செய்த சதி வலைக்கு ஈடு கொடுக்க முடியாமல் சுதேசி நிறுவனங்கள் எல்லாம் அழிந்து போனதும், அதன் காரணமாக லட்சக்கணக்கானவர்கள் பன்னாட்டு நிறுவனங்கள் தரும் வேலை வாய்ப்பை நம்பி இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். இதை தடுக்க வேண்டிய ஆட்சியாளர்களோ தங்களின் கஜானா நிரம்பினால் போதும் என அமைதிக்கு வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனரே தவிர நமது சுதேசி குளிர்பான நிறுவனங்களை காத்திட எந்த ஒரு நடவடிக்கைகளையும் செய்யவில்லை.
சரி இதற்கும் ஜல்லிக்கட்டு தடைக்கும் என்ன சம்மந்தம்? என நீங்கள் கேட்கலாம்.
பொதுவாகவே பசுக்கள் மற்றும் பெண் மாடுகளின் இனப்பெருக்கம் என்பது மாடுகளின் உடல்ரீதியான இணைப்பு மூலமே நடைபெற்று வந்தது. நாளடைவில் பன்னாட்டு நிறுவனங்களின் படையெடுப்பு காரணமாக பசுக்கள் செயற்கை முறை கருத்தரிப்பிற்கு தள்ளப்பட்டன. இதனால் காளைகளின் தேவைகள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வரத் தொடங்கின. பால் தரும் மாடுகள் செயற்கை முறை கருத்தரிப்பின் காரணமாக நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும் நமது இந்தியாவில் அதிகரிக்க தொடங்கின.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் பீட்டா போன்ற பன்னாட்டு கைக்கூலி அமைப்புகளுக்கு சாதகமாக அமைந்து ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை பெற வசதியாக அமைந்து விட்டது. மேலும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை பெற்ற பீட்டா அமைப்பிற்காக பிரபலமான வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரான போது நமது தமிழக அரசோ கடமைக்காக மட்டுமே வழக்கறிஞரை நியமித்து வாதாடியது. எப்படியெனில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதலில் தடை விதித்த உச்சநீதிமன்றம் ஒரு சில நிபந்தனைகளோடு மீண்டும் அனுமதி அளித்தது. அந்த நிபந்தனைகளில் ஒன்று தான் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கேட்ட விலங்குகள் நல வாரியத்தையே போட்டிகளை கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யச் சொன்னது. இது திருடன் கையில் பணம் இருக்கும் லாக்கர் சாவியை கொடுத்து பத்திரமாக பார்த்துக் கொள் என்று சொன்னதைப் போன்று இருந்தது. இந்த உத்தரவை தமிழக அரசு அப்போத கடுமையாக எதிர்த்து நடுநிலையான வேறு ஒரு பார்வையாளர் மூலம் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யச் சொல்லி கேட்டிருக்கலாம். ஆனால் தமிழக அரசு தனது ஆட்சேபத்தை, எதிர்ப்பை தெரிவிக்காதது ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான தடைக்கு தமிழக அரசும் மறைமுகமாக ஆதரவளித்துள்ளதோ எனும் சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
இந்த சூழ்நிலையில் பன்னாட்டு குளிர்பான நிறுவனம் ஒன்று பால் வணிகத்தில் கால் பதிக்கும் நோக்கில் நறுமணப் பால் உற்பத்தியை துவக்கி அதற்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது நமது இந்திய பால் வளத்தையும், அதன் மிகப்பெரிய வணிக சந்தையையும் கைப்பற்றுவதோடு, மாடுகளின் இயற்கையான இனவிருத்தியை தடுத்து, செயற்கை முறை கருத்தரிப்பின் மூலமும், நாட்டு மாடுகளை அழித்து கலப்பின மாடுகளை இந்தியாவில் அதிக அளவில் இறக்குமதி செய்து அதன் மூலமும் நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களை இந்தியாவில் பரப்பி மருந்து பொருட்கள் விற்பனை மூலம் பணம் சம்பாதிப்பது மட்டுமே பன்னாட்டு நிறுவனங்களின் நோக்கமாக தெரிகிறது.
விலங்குகள் மீது உண்மையிலேயே இந்த பீட்டா போன்ற கைக்கூலி அமைப்புகளுக்கு அக்கறை இருக்குமானால் முதலில் குதிரை பந்தயத்தை தடை செய்யவும், மாடுகளின் இறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதையும் தடுப்பதோடு, குழந்தைகள் உண்ணும் பல்வேறு உணவு பொருட்களில் மாடுகளின் எலும்புகள் பயன்படுத்துவதையும் தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கட்டும்.
அதேபோல் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் வந்தால் மட்டும் ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பாக பேசி அரசியல் செய்யும் அரசியல் கட்சிகள் காட்சி படுத்தும் விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கவும், இந்திய பால் வளத்தை சுரண்டி, அதன் மூலம் பல்வேறு நோய்களை இந்தியாவில் பரப்பி மருந்து பொருட்கள் விற்பனை மூலம் ஆதாயம் அடைய முயற்சி செய்யும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும், பீட்டா போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி அமைப்புகளுக்கு இந்தியாவில் முற்றிலும் தடை விதிக்கவும் பாராளுமன்றத்தில் உடனடியாக அவசர சட்டம் இயற்றிட மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அரசியல் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் திரள வேண்டும். மத்திய அரசு செவி சாய்க்காதபட்சத்தில் தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள ஆளுங்கட்சி எம்.பி.க்களும், எதிர்க்கட்சி எம்.பி.க்களும் ஒட்டுமொத்தமாக ஓரணியில் திரண்டு தங்களின் பதவிகளை ராஜினாமா செய்திட முன் வர வேண்டும்.
*”ஜல்லிக்கட்டு போட்டி தடைக்கு பின் மிகப்பெரிய சூழ்ச்சியும், சதியும், அரசியலும் இருக்கிறது”* என்பது மட்டும் புலனாகிறது.
அன்புடன்

*சு.ஆ.பொன்னுசாமி*

(நிறுவனர் & மாநில தலைவர்)

*தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்.*

*9566121277 / 9600131725.*

Leave a Reply