​செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போதே கண் கலங்கிய செய்தியாளர்

seria

செய்தி வாசித்துக் கொண்டிருக்கும் போதே கண் கலங்கிய செய்தியாளர்…! #KateBolduan #OmranDaqneesh

துயர்மிகு வரிகளை இன்று வாசிக்கக் கூடும் என்று அவர் நினைத்துப் பார்த்து இருக்கமாட்டார். காட்டே போல்டான், உறுதியான ஊடகவியலாளர். சி.என்.என் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வாசிப்பாளராக,  குண்டுவெடிப்புகளை, இரக்கமற்ற கொலைகளை சரளமான ஆங்கிலத்தில் தொகுத்து வழங்கியவர். ஆனால், அந்தச் செய்தியை  வாசித்தபோது, அவரால் அதை வெறும் செய்தியாக மட்டும் கடந்துச் செல்ல முடியவில்லை.

“This is Omran. He’s alive. We wanted you to Know”  (இவர்தான் ஒம்ரான். உயிரோடுதான் இருக்கிறார். நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்று  விரும்புகிறோம்) என்று ரத்தம் தொய்ந்த ஒரு குழந்தையின்  முகத்தைத் திரையில் காட்டி, அவர் செய்தி வாசித்தபோது, அவர் குரல் தழுதழுத்துவிட்டது. அவரால் மட்டும அல்ல… குருதி வழியும் முகத்துடன், எனக்கு வேறு என்ன செய்யப் போகிறீர்கள் என்ற கேள்வியை கடத்தும் ஒரு வெறித்த பார்வையுடன் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனை, வெறும் செய்தியாக எவராலும் கடந்துச் செல்ல முடியாது.

யார் இந்த ஒம்ரான்..? அவனுக்கு என்ன ஆனது என்று தெரியவேண்டும் என்றால், அதற்கு  முன் கொஞ்சம் சிரியாவைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.

உள்நாட்டுப் போர்:

கடந்த பல வருடங்களாகவே சிரியாவில் உள்நாட்டுப் போர் நடந்துகொண்டிருக்கிறது. அதிபர் பஷர் அல் ஆசாத், பதவி விலககோரி சிரிய நாட்டில் சில குழுக்கள் கிளர்ச்சியில் ஈடுப்பட்டு வருகின்றன. கிளர்ச்சியில் ஈடுபடும் குழுக்களை அழிக்க அதிபர் பஷர் ராணுவத்தைப் பயன்படுத்தி வருகிறார். மேலும் ராணுவத்தை எதிர்த்துக் கிளர்ச்சிக் குழுவினர் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்தனர். இந்தப் போரில் லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிரியாவின் உள்நாட்டுக் கலவரத்தில் இறந்திருக்கிறார்கள். பல லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த தாக்குதலில் துருக்கியிலிருந்து கிரீஸை நோக்கிச் சென்ற சிரிய அகதிகளின் படகு மூழ்கி அய்லான் குர்தி என்ற மூன்று வயது சிறுவன் உயிரிழந்தான். கடற்கரையில் முகம் புதைந்து இறந்துகிடந்த அந்தச் சிறுவனின் புகைப்படம் உலக மக்களிடையே ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியது.
இப்படியாகத்தான் ஒம்ரான் தாக்கப்பட்டான்

இன்னும் இந்தச் சம்பவமே நம்மைவிட்டு நீங்காத நிலையில் கடந்த 17-ம் தேதி ரஷ்யா நடத்திய விமானத் தாக்குதலில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அந்தத் தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். 12-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். பலத்த காயமடைந்த உமரான் டாக்னீஷ் என்ற ஐந்து வயது சிறுவன் தன்னார்வலர்களால் ஆம்புலன்ஸில் கொண்டுவந்து சேர்க்கப்பட்டான். முகம் முழுவதும் ரத்தம் வழிய, செய்வதறியாமல் அந்தச் சிறுவன் அமர்ந்திருந்த நாற்காலியில் தன் கைகளைத் துடைத்தபடி அமைதியாய் உட்கார்ந்திருந்தான். ஆனால், அந்தச் சிறுவனின் கண்களில் அச்சமோ, அழுகையோ இல்லை.

எத்தனை கேள்விகள் அவன் பார்வையில்? கடந்த சில வருடங்களாகப் படிப்பையோ, விளையாட்டையோ பார்க்காத அவனுக்கு வேறு என்ன தோன்றும்? வெறுமை படிந்த முகத்துடன் உமரான் டாக்னீஷ் அமர்ந்திருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வைரலாக சமூக வலைதளங்கள் முழுவதும் பகிரப்பட்டு வருகின்றன.

அரசாங்கத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் நடக்கும் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர்.  இந்த நேரத்தில் அந்த நாட்டு மக்களுக்குத் தேவை கருணையோ, பிரார்த்தனையோ இல்லை. இப்போது அவர்களுக்கு அரவணைப்பும், உதவியும்தான் தேவை.

– சு.நந்தினி

Leave a Reply