​குடியை மறந்தால் குடும்பம் நினைவுக்கு வரும்

​குடியை மறந்தால் குடும்பம் நினைவுக்கு வரும்! – ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி

பீகாரில் முடியும் தமிழகத்தில் முடியாதா?

#BanTasmac

கோவை சூலூரில் ஒரு டாஸ்மாக் பார் உரிமையாளர், நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்குள் தன் கடை வருவதைத் தவிர்க்க, ஒரு பொது சாலையையே தடுப்புப் போட்டு மூடிவிட்டார். அந்தப் பகுதி மக்கள் தவிக்கிறார்கள்.
திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் ஒரு டாஸ்மாக் கடையைத் திறந்து, அந்தக் கடைக்கு வரும் `குடிமகன்’களின் வசதிக்காக சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் போலீஸார்.
கோவை மலுமிச்சம்பட்டியில் ஒரு குடியிருப்புவாசிகள், தங்கள் பகுதியில் வந்திருக்கும் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அந்தக் கடைக்கு யாரும் போக முடியாதபடி ஐந்து அடி ஆழத்தில் பள்ளம் தோண்டி விட்டார்கள்.
– டாஸ்மாக் தொடர்பாக கடந்த சில நாட்களில் வந்த வித்தியாசமான செய்திகள் இவை. ஓர் அரசாங்கமே மது ஊற்றிக்கொடுக்கும் சேவகனாக தன்னைக் கருதிக்கொள்ளும் மாநிலத்தில், இதுபோன்ற செய்திகள் தவிர்க்க முடியாதவை. நெடுஞ்சாலை மதுக்கடைகளை நீதிமன்ற உத்தரவால் மூடும் அரசாங்கம், அவற்றை குடியிருப்புப் பகுதிகளில் புதிதாகத் திறப்பது ஆச்சர்யம் இல்லை. வீடுகளின் மத்தியில் வரும் ஒரு டாஸ்மாக் கடை, என்ன மாதிரியான விளைவுகளைத் தரும் என்ற மக்களின் பயம், அரசாங்கத் துக்குப் புரியவில்லை.
இங்கே ஒட்டுமொத்த அரசாங் கமே புதிய மதுக்கடைகளைத் திறக்க இடம் தேடிக்கொண்டி ருந்தபோது, ஒரு மாநில அரசு சத்தமில்லாமல் ‘மதுவிலக்கை அமல்படுத்திய ஓராண்டு’ சாதனையைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. அது, பீகார். அழுக்கானவர்கள், மோசமான வர்கள், கல்வி அறிவு இல்லாத வர்கள், ஊழல் பேர்வழிகள், வளர்ச்சிபெறாத பின்தங்கிய பகுதி மக்கள் என இங்கு பலருக்கும் பீகார் பற்றிய ஒரு நினைப்பு உண்டு. அதை சுக்குநூறாக உடைத்திருக்கிறது பீகார். 
பீகார் அப்படி என்ன சாதித்திருக்கிறது? கடந்த  ஆண்டு ஏப்ரல் ஐந்தாம் தேதி மதுவிலக்கை அறிவித்தார், முதல்வர் நிதிஷ் குமார். மாநில அரசுக்கு இதனால் 5,000 கோடி ரூபாய் இழப்பு. ஆனால், இந்த இழப்பைப் பற்றி அவர் கவலைப்படவில்லை.மதுக்கடைகள் பலவும் பால் விற்பனை மையங்களாக மாற்றப்பட்டன. ‘‘இதன்மூலம் ஓரளவு வருமானம் வந்தாலும் போதும்’’ என்றார் நிதிஷ் குமார்.
‘‘பீகாரில் ஒன்று, நான் இருக்க வேண்டும். அல்லது, மது அடிமைகள் இருக்க வேண்டும்’’ என்று தீர்மானமாகச் சொன்னார். தினம் தினம் ரெய்டுகள் நடந்தன. சராசரியாக ஒருநாளில் சுமார் 600 இடங்களில் சோதனை நடக்கும். போலீஸாரும் கலால் துறையினரும் இதே வேலையாக அலைந்தார்கள். ‘‘பீகார் அரசில் மதுவிலக்குச் சோதனையைத் தவிர வேறு எதுவுமே நடக்க வில்லை’’ என எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்யும் அளவுக்குச் சோதனைகள் நடைபெற்றன. ஆனால், தன் மதுவிலக்கு முழக் கத்துக்கு மக்கள் ஆதரவைப் பெற, மூன்று கோடி மக்களைத் திரட்டி மனிதச் சங்கிலி நடத்தினார் நிதிஷ் குமார். எதிர்க்கட்சியான பி.ஜே.பி-கூட இதில் பங்கேற்றது அவரின் சாதனை. ‘‘சமூக மாற்றத்தைக் கொண்டுவருவதுதான் மிகக் கடினமான விஷயம். நிதிஷ், அதற்கான முயற்சியில் உறுதியாக இருந்து சாதனை புரிகிறார்’’ எனப் பிரதமர் நரேந்திர மோடி மனம் திறந்து பாராட்டி இருக்கிறார்.
‘மதுபானங்கள் கிடைக்காத தால் பலர் போதை மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள்’, ‘கள்ள மார்க்கெட்டில் இரண்டு, மூன்று மடங்கு விலைக்கு மது பாட்டில்கள் விற்கப்படுகின்றன’ என மதுவிலக்கு இருக்கும் இடங்களில் எழும் எல்லா புகார்களும் பீகாரிலும் உண்டு. 
ஆனால், மூன்று தகவல்களை இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும்…
‘‘மதுவிலக்கை அமல் படுத்தும்போது பீகாரில் 44 லட்சம் மது அடிமைகள் இருந்தார்கள். அவர்களின் எண்ணிக்கை இப்போது கணிசமாகக் குறைந்திருக்கிறது. `குடிக்காவிட்டால் செத்துப் போய்விடுவேன்’ எனச் சொல்பவர்களை, பீகாரில் விரல்விட்டு எண்ணிவிடலாம். முன்பு மதுக்கடையில் பணத்தை அழித்தவர்கள், இப்போது பால், பால் பொருட் கள் என வாங்குகிறார்கள். இவற்றின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது’’ என்கிறார், பீகார் கலால் துறை கமிஷனர் ஆதித்ய குமார் தாஸ்.

Asian Development Research Institute (ADRI) என்ற அமைப்பு, மதுவிலக்கால் பீகார் பொருளா தாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இவர்கள் தந்த தகவல்கள், ஆச்சர்ய பொக்கிஷம். மது விலக்கு அமலான பிறகு, பால் விற்பனை 11 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. இதர பால் பொருட்களின் விற்பனை 17.5 சதவிகிதம் அதிகரித்து இருந்தது. அது மட்டுமல்ல, ஸ்டேஷனரி பொருட்களின் விற்பனை 30 சதவிகிதமும், எலெக்ட்ரிகல் பொருட்களின் விற்பனை 51 சதவிகிதமும், ஆட்டோமொபைல் விற்பனை 30 சதவிகிதமும் அதிகரித்து இருந்தன.  இது உணர்த்தும் நேரடி உண்மை… குடியை மறந்த பிறகுதான்  குடும்ப நினைவு வந்து, பலர் தங்கள் பிள்ளைகளுக்குப் புத்தகங்கள் வாங்கிக்கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பியிருக்கிறார்கள். வீட்டின் மின்சாரத் தேவைகளை உணர்ந்திருக் கிறார்கள். தங்களுக்கோ, பிள்ளைகளுக்கோ வாகனம் வாங்க வேண்டிய அவசியத்தைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இத்தனை நாளும் இவ்வளவு பணமும் மதுபான முதலாளி களின் பாக்கெட்டுக்குப் போயிருக்கிறது.
இது உணர்த்தும் மறைமுக உண்மை… மது விற்பனை இல்லாததால் பீகார் அரசு இழந்த 5,000 கோடி ரூபாய் வருமானம், வாகனம், மின் பொருள் என வேறுவிதமான பொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வரியால் எப்படியும் கிடைத்துவிடுகிறது. எனவே, மதுவிலக்கை அமல் படுத்துவதால் அரசாங்கத் துக்குப் பெரும் இழப்பு என்ற வாதம், செவ்வாய்க் கிரகத்தில் கூட உண்மையாக இருக்க முடியாது.
Jagjivan Ram Institute of Parliamentary Studies and Political Research (JRIPSPR) என்ற நிறுவனம், பீகார் தலைநகரம் பாட்னாவில், குடிசைப் பகுதி களில் வாழும் 600 குடும்பங்கள் மத்தியில் ஓர் ஆய்வு நடத்தியது. இந்தக் குடும்பங்களில் எல்லாம் மதுவிலக்கு அமலாவதற்கு முன்பு, ஒருவரோ, பலரோ குடித்துக்கொண்டிருந்தவர்கள். இப்போது அவர்கள் குடியை விட்டுவிட்டதால், இனிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. ‘குடும்பத்தில் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் நடக்கும் சண்டைகள் 87 சதவிகிதம் குறைந்திருக்கின்றன. வீதியில் நின்று வேறு நபர்களுடன் சண்டை போட்டுக்கொள்வது 93 சதவிகிதம் குறைந்திருக்கிறது’ என்கிறது அந்த ஆய்வு. ‘‘இதனால் கிடைக்கும் மன நிம்மதியை வாழ்க்கையில் முதல்முறையாக உணர்ந்திருக் கிறோம்” என்கிறார்கள் பலரும்.
எனவே, நிஜமான மதுவிலக்கு என்பது குடும்பங் களை வளம் பெறச் செய்கிறது; நிம்மதியான வாழ்க்கையும் கிடைக்கச் செய்கிறது. இதைத்தானே ஓர் அரசு செய்ய வேண்டும். ஆனால், தமிழகத்தில் இதைச் செய்யும் துணிச்சல் ஏன் அரசாங்கத்துக்கு இல்லை?
இரண்டே காரணங்கள் தான்… ஒன்று, மதுபான ஆலை களை நடத்துபவர்களும் இங்கே ஆட்சி செய்பவர்களும் வேறு வேறு நபர்கள் அல்ல! இரண்டு, பல ஆயிரம் கட்சிக்காரர்கள், டாஸ்மாக் பார்கள் மூலம் கிடைக்கும் நிழல் வருமானத் தையே நம்பியிருக்கிறார்கள்.
பீகாரைப் பார்த்து நம் ஆட்சியாளர்கள் வெட்கப்பட வேண்டும்!

Leave a Reply