​காவல் நிலைய மரணங்கள்

இந்தியாவில் காவல் மரணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மனித உரிமை அமைப்புகள் தீவிரமாக செயல்பட்டு வரும் சூழ்நிலையிலும் காவல் மரணங்கள் அதிகரிப்பது கவலைக் குரிய ஒன்றாகும்.

இந்த காவல் மரணங்களுக்கு ஏழை கைதிகள் தாம் அதிகம் பலியாகின்றனர். ஆனால் அரசும், காவல்துறையும் ஒரு காவல்நிலையத்தில் மரணம் ஏற்பட்டால் அது காவல் மரணம் என்று ஒத்துக்கொள்வதில்லை. கைதி உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார் அல்லது தற்கொலை செய்துகொண்டார் என்று மிக சர்வ சாதாரணமாகக் கூறிவிடுகின்றனர்.
ஒரு கைதியை காவலர்கள் கைது செய்வதும் அவரை விசாரணை என்ற பெயரில் அடித்துத் துன்புறுத்துவதும் காவல்துறையில் சர்வ சாதாரணம்.
விசாரணை செய்வதற்கு கடுமையான வன்முறை வழிகள் மட்டும்தான் இருக்கின்றதா? விஞ்ஞானம் அதிவேகத்தில் வளர்ந்து வரும் சூழ்நிலையில் விசாரணைக்கு அறிவியல்பூர்வமான வழிகளைப் பின்பற்றக் கூடாதா? என்ற கேள்வி அறிவுப்பூர்வமானது.
நாடு முழுவதும் காவல் மரணங்கள் அதிக அளவில் நடைபெறுவதாக தேசிய குற்றப்பிரிவு அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையின்படி அசாம் மாநிலத்தில் தான் காவல் மரணம் அதிகம் நடைபெற்றுள்ளது.
 2013 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, காவல் மரணங்களில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 
2013ஆம் ஆண்டில் நிகழ்ந்த காவல் மரணங்கள் எண்ணிக்கை 15 என்று தமிழக காவல்துறை அறிவித்துள்ளது.
இதே காவல்துறை, 2012 ஆம் ஆண்டு நிகழ்ந்த காவல் மரணங்கள் 6 என்று அறிவித்திருந்தது. காவல் மரணங்கள் ஒரே ஆண்டில் இரு மடங்காக உயர்ந்துள்ளன. இவை எல்லாம் கணக்கில் வந்தவை மட்டுமே.  கடந்த பதிமூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் சுமார் 120 காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக ‘ஏசியன் மனித உரிமை மய்யம்’ தெரிவிக்கிறது.
இந்தக் காவல் மரணங்கள் பெரும்பாலும் ஒரு நபர் கைது செய்யப்படுவதற்கும், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படுவதற்கும் இடையேதான் நிகழ்கின்றன.  அதே போல் நீதிமன்ற காவலில் இருக்கும் சிலரும் மரணமடைகின்றனர். இவர்களது மரணங்கள் பெரும்பாலும் தற்கொலை என்றே முடித்து வைக்கப்படுகின்றன.  
ஒரு கைதி காவலில் இறந்துவிட்டால் அந்தக் காவல் நிலைய அதிகாரி வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அந்த வழக்கை துணை ஆட்சியர் விசாரிப்பார்.
உடற்கூறு ஆய்வு அறிக்கை, மருத்துவ அறிக்கை ஆகியவற்றை வைத்து அவர்கள் ஆய்ந்து விசாரிப்பார்கள். விசாரணையில் இயற்கை மரணம், கொலை, விபத்து என்று ஏதேனும் ஒரு முடிவுக்கு வந்து, அதை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைப்பார்கள். அதன் பிறகு அந்த வழக்கு சிபிசிஅய்டி போன்ற சிறப்புப் பிரிவினருக்கு மாற்றப்படும். அவர்கள் விசாரித்த பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து தீர்ப்பு வழங்கப்படும். 
தீர்ப்பின் மீது உடன்பாடு இல்லை என்றாலோ, விசாரணை சரியாக நடைபெறவில்லை என்றாலோ பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தார் நீதிமன்றம் செல்லலாம்.
காவல்துறை அதிகாரிகளைப் பொருத்தவரை வழக்குக்கு ஒரு குற்றவாளி வேண்டும். அதற்காகக் கிடைத்த ஒருவன் நிரபராதியாக இருந்தாலும் அடித்து அவனை ஒப்புக்கொள்ள வைக்கின்றனர்.
இதில் காவல்துறை அரசியல்வாதிகள், பணக்காரர்கள் ஆகிய மூன்று பேரும் ஒரே அணி. வேறு விஷயங்களில் அரசியல்வாதி களுக்கும், பணக்காரர்களுக்கும் காவல்துறை  செய்யும் உதவிக்கு மாற்றாக இந்த காவல்நிலைய கொலைவிவகாரத்தில் பிரச்சினை வெளியே தெரியாமல் இருக்க அரசியல்வாதிகள் உதவுகிறார்கள். அதனால்தான் காவல் மரணத்திற்காக  இதுவரை ஒரு கைது கூட நடக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
காவல்நிலைய மரணங்களில் உண்மை நிலைநாட்டப்படுவது,  மனிதநேயம், மனித உரிமை குறித்த புரிதல் உள்ள தலைமையினால் மட்டுமே சாத்தியப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக காவல் நிலைய மரணங்கள் மற்றும் காவலர் தற்கொலைகளில் அரசு தொடர்ந்து மவுனம் காப்பது இந்த கொலைகளுக்குப் பின்னால் உண்மைகளை மறைக்க இதுபோன்ற தொடர் கொலைகள் நடைபெறுகின்றதோ என்றும் சந்தேகம் கொள்ளவருகிறது.
2015 ஆம் ஆண்டு இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில் செய்யது முஹம்மது என்ற இளைஞரை, விசாரணைக்கு அழைத்து சென்று, காவல் நிலையத்தில் வைத்து அவர்  துப்பாக்கியால் சுடப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பெரிய மாயாகுளம் என்ற ஊரைச் சேர்ந்த ஹாஜா நஜ்முதீன் என்பவரின் மகன் சேவுலா (எ) சேக் அலாவுதீன் என்பவர் காவல்நிலையத்தில் அடித்துக் கொல்லப்பட்டார்.
திருவள்ளூர் மாவட்டம் ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான செல்வம் என்பவரை வழக்கு ஒன்றிற்காக அழைத்துச் சென்ற சோழவரம் காவல்துறையினர் அவரை நீதிமன்ற காவலுக்காக பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். ஆனால், பொன்னேரி கிளைச் சிறையில் செல்வம் திடீரென உயிரிழந்துள்ளார்.
இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால், சிறையில் ஒருவர் அடைக்கப்படுவதற்குப் பெயர் நீதிமன்ற பாதுகாப்பு ஆகும் (Judicial Custody) அப்படியானால், ஒரு கைதி சிறையில் மரணம் என்றால், நீதித்துறைக்குத்தான் முக்கியப் பொறுப்பாகி விடுகிறது.
புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை என்ற செய்தி பெரும் பரபரப்பையும், விவாத அலைகளையும் எழுப்பி விட்டது. மின் கம்பியைக் கடித்துத் தற்கொலை செய்கிறார் என்றால், சிறையில் மின் பாதுகாப்பு முறை எந்த இலட்சணத்தில் இருக்கிறது என்ற கேள்வி எழத்தானே செய்யும்.
அரைஞாண் கயிறு இருந்தால்கூட, அதனைச் சாவுக்கு ஒரு கருவியாக எங்கே பயன்படுத்திக் கொள்வார்களோ என்று அஞ்சி, அரைஞாண் கயிறைத் துண்டித்து விடுகிற சிறை நிருவாகம், மின் கம்பியைக் கடித்து ஒரு கைதி தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு மின் கம்பிகள் பராமரிப்பு இருக்கிறதா என்ற கேள்வி எழாதா?

ராம்குமாருக்குப் பிணை கோரி இன்று (19.9.2016) உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது என்ற நிலையில், நேற்று (18.9.2016) இந்தத் தற்கொலை என்றால், யாருக்கும் சந்தேகம் எழத்தான் செய்யும்!
தொடக்கம் முதல் ராம்குமார் பிரச்சினை என்பது தமிழ்நாட்டில் பெருஞ்சூட்டை எழுப்பி இருக்கும் நிலையில், ராம்குமாரை அணுக்கமாகக் கண்காணித்துக் கொண்டுதானே இருக்கவேண்டும்.
வேலூர் சிறையில் பேரறிவாளன் தாக்கப்பட்டபோது தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தார் (14.9.2016). சிறையில் உள்ள கைதிக்குக்கூட பாதுகாப்பு இல்லையெனறால், எப்படி சட்டம் ஒழுங்கு பாது காக்கப்படும் என்பதுதான் அந்த வினா!அந்த வினாவின் ஈரம் காய்வதற்குமுன்பாகவே ராம்குமார் புழல் சிறையில் தற்கொலை என்ற செய்தி வந்துள்ளது – முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒரு துறைக்கு இது அழகல்ல!
ராம் குமார் மரணத்தின்மீது உரிய வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டியது அவசியம், மிகமிக அவசியமே!

விடுதலை நாளிதழ்

Leave a Reply