​உனக்கெல்லாம் தட்டு எதுக்கு.. நோயாளிக்கு தரையில் சாப்பாடு போட்ட மருத்துவமனை

​உனக்கெல்லாம் தட்டு எதுக்கு.. நோயாளிக்கு தரையில் சாப்பாடு போட்ட மருத்துவமனை!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவர் தரையில் சாப்பாட்டை போட்டு சாப்பிடுவது போன்ற புகைப்படம் அனைவரையும் அதிர வைத்துள்ளது. மருத்துவமனை கொடுத்த சாப்பாடுதான் அது. ஆனால் தட்டு இல்லை என்று கூறி இப்படி தரையில் போட்டு சாப்பிட வைத்துள்ளது அந்த மருத்துவமனை.

ராஞ்சியில் உள்ளது ராஜேந்திரா மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை. அரசு மருத்துவமனையான இங்கு தேவி என்ற பெண் எலும்பு முறிவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். இவர் ஏழை என்பதாலோ என்னவோ சரிவர கவனிக்கவில்லை மருத்துவமனை நிர்வாகம். ஊழியர்கள் இவரிடம் அலட்சியமாகவே நடந்துள்ளனர்.

இந்த நிலையில் சாப்பாடு சாப்பிட கைவசம் தட்டு இல்லாததால் தட்டு தருமாறு மருத்துவமனை ஊழியர்களிடம் கோரியுள்ளார் தேவி. ஆனால் தட்டைத் தராத ஊழியர்கள் தரையில் போட்டு சாப்பிடு என்று கூறி தரையில் சாப்பாட்டைப் போட்டுள்ளனர். வேறு வழியில்லாமல் தரையிலேயே தண்ணீரை ஊற்றி தரையைத் துடைத்து விட்டு அங்கு சாப்பாட்டைப் போட்டு சாப்பிட்டுள்ளார் தேவி.

கையில் போடப்பட்ட கட்டுடன் தரையில் அமர்ந்து அவர் சாப்பிடும் காட்சி தொடர்பான புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மருத்துவமனை நிர்வாகம் தற்போது உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply