லஞ்சம் தராததால் சிகிச்சை தாமதம்

உ.பி.யில் 10 மாத குழந்தை பலியான அவலம்!

 

லக்னோ: உத்தரபிரதேசத்தில் தாமதமான சிகிச்சையால் 10 மாத குழந்தை உயிரிழந்த விவகாரத்தில்  அம்மாநில அரசுக்கு, தேசிய மனித உரிமை ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் கிராமத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சுமிதா-ஷிவ் தத் தம்பதி. இவர்களின் 10 மாத ஆண் குழந்தைக்கு, திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. உடனே குழந்தை கிருஷ்ணாவை பஹ்ரைச் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கின்றனர். அங்கு, குழந்தையை பரிசோதித்த மருத்துவர், உடனடியாக குழந்தையை உள்நோயாளியாக அனுமதிக்கும்படி கூறி இருக்கிறார்.

ஆனால், குழந்தைக்கு மருத்துவமனையில் படுக்கை வசதி செய்துதர அங்கிருந்த நர்ஸ் மற்றும் துப்புரவு தொழிலாளியும், சுமிதா-ஷிவ் தத் தம்பதியிடம் லஞ்சம் கேட்டுள்ளனர். அதேபோல், முக்கியமான ஊசி ஒன்று போடுவதற்கு மருத்துவ உதவியாளர் ஒருவரும் லஞ்சம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அவர்கள் கேட்ட தொகையை கொடுக்க சுமிதா-ஷிவ் தத் தம்பதியிடம் பணம் இல்லாததால் பணத்தை உடனடியாக தங்களால் தர இயலவில்லை, ஆனால் தருகிறோம் என்று கூறி இருக்கின்றனர். ஆனால் அதை ஏற்காத மருத்துவ உதவியாளர், குழந்தைக்கு போடவேண்டிய அவசியமான  ஊசியை தாமதமாகத்தான் போட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாகதான் குழந்தை கிருஷ்ணா பரிதாபமாக உயிரிழந்ததாக சுமிதா-ஷிவ் தத் தம்பதியினர் கண்ணீர் மல்க குற்றஞ்சாட்டி உள்ளனர்.

”நீங்கள் கேட்கும் பணத்தை தர இப்போது எங்களிடம் பணம் இல்லை. ஆனால் நீங்கள் கேட்ட லஞ்ச பணத்தை நாங்கள் தந்துவிடுகிறோம் என்று எவ்வளவே கெஞ்சியும் கேட்கவில்லை. அதனால்தான் அவர் தாமதமாக என் குழந்தைக்கு அந்த முக்கிய ஊசியை போட்டார். உரிய நேரத்தில் அந்த ஊசியை போட்டு இருந்தால் எங்கள் குழந்தையை காப்பாற்றி இருக்க முடியும். தவறு செய்தவர்கள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும்” என்று கண்ணீர்விடுகின்றனர் சுமிதா-ஷிவ் தத் தம்பதி .

இந்த சம்பவம் குறித்து பேசிய மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவர் கூறும்போது, ”குழந்தைக்கு தாமதமாக ஊசி போடப்பட்டதால்தான் உயிரிழந்தது என்று கூறுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் லஞ்சம் கேட்டதாக கூறப்பட்ட துப்புரவு தொழிலாளி உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அந்த நர்சும் வேறு மருத்துவமனைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது” என்றார்.

இந்நிலையில், தாமதமான சிகிச்சையால் 10 மாத குழந்தை உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உத்தரபிரதேச அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 4 வாரத்திற்குள் விளக்கம் அளிக்குமாறு, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், உரிய நேரத்தில் சிகிச்சை அளித்தால் பல மனித உயிர்கள் காக்கப்படும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவம் பார்க்க வழியில்லாத ஏழைகளின் நிலைமையை கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

லஞ்ச விவகாரத்தால் குழந்தை இறந்துபோன சம்பவம், உத்தரப்பிரதேச மக்களிடம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

vikadan

Leave a Reply