மரித்தது மாதிபுல் இல்லை… மனிதநேயம்தான்

டெல்லியில் மரித்தது மாதிபுல் இல்லை… மனிதநேயம்தான்!

டெல்லியில்,  சாலையில் சென்றவர் மீது நேற்று அதிகாலையில் டெம்போ வேன் ஒன்று மோதியது. சாலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்தவரை பார்த்து விட்டு உதவாமல், அந்த டெம்போ டிரைவர் தப்பி ஓடி விட்டார். சுமார் 90 நிமிடங்கள் வரை அந்த மனிதர் சாலையிலேயே உயிருக்கு போராடிக் கொண்டு கிடக்கிறார். அவரைக் கடந்து சென்ற யாருக்கும் உதவி செய்ய வேண்டுமென்ற மனம் வரவில்லை. ஏன் அருகே கூட யாரும் வரவில்லை. ஒரே ஒரு மனிதர் மட்டும் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பவரின் அருகில் வருகிறார். ‘இவராவது உதவ வருகிறாறே… ‘ என்று நினைத்தால், அவரோ, உயிருக்கு போராடிய மனிதரிடம் இருந்து செல்போனை திருடி விட்டு ஓடி விடுகிறார்.

இத்தகைய மனிதத் தன்மையற்ற செயல் டெல்லியில் நேற்று நடந்துள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவியில் பதிவான நிலையில், தற்போது இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகியுள்ளது.

டெல்லி சுபாஷ் நகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மாதிபுல்லுக்குதான் இந்த அவலம் நிகழ்ந்துள்ளது. மாதிபுல் காயமடைந்து ஒன்றரை மணி நேரமாக உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, 140 கார்கள், 82 இரு சக்கர வாகனங்கள், 182 மோட்டார் சைக்கிள்கள், 45 பாதசாரிகள் அவரை பார்த்துவிட்டு, கடந்து சென்றுள்ளனர். குறைந்த பட்சம் ஆம்புலன்சுக்கு  தகவல் தெரிவிக்கக் கூட அவர்களுக்கு மனம் வரவில்லை. கடைசியில் அதே இடத்தில் மாதிபுல் மரித்தும் போய் விட்டார்.

உயிரிழந்த மாதிபுல், 4 குழந்தைகளின் தந்தை. கஷ்டப்பட்டு குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளார். இரவில் ஒரு வேலை. பகலில் ஒரு வேலை பார்த்து வந்துள்ளார். காலையில் ஆட்டோ ஓட்டியும் இரவில் வாட்ச்மேன் பணியும் பார்த்து வந்துள்ளார். வாட்ச்மேன் பணி முடிந்து நேற்று அதிகாலை 5.40 மணியளவில் வீட்டுக்கு போய்க் கொண்டிருக்கும்போதுதான் அவர் மீது டெம்போ மோதி உள்ளது. அந்த இடத்திலேயே சாலையில் சரிந்து விழுகிறார். டெம்போ டிரைவர், இறங்கி சற்று தூரமாகவே அவரை பார்த்துவிட்டு, தனது வாகனத்தில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை பார்த்துவிட்டு, வாகனத்தைக் கிளப்பிக் கொண்டு போய் விடுகிறார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு, போலீசார் தகவல் தெரிந்து சம்பவ இடத்துக்கு வந்து அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அதற்கு முன்னரே, மாதிபுல் இறந்து விட்டார். மரித்தது மாதிபுல் இல்லை… மனித நேயம்தான்

Leave a Reply