மனிதர்கள் மட்டுமல்ல… நகரங்களில் மரங்கள் கூட உறங்குவதில்லை.

மனிதர்கள் மட்டுமல்ல… நகரங்களில் மரங்கள் கூட உறங்குவதில்லை..!

 இரா.கலைச் செல்வன்
மரங்கள்… “மரம் நடுவோம்”, ” மரம் காப்போம்” என மரங்களைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு செய்தியை நாம் கேட்டுக் கொண்டேதானிருக்கிறோம். ஒரு நிமிடம்… என்றாவது ஒரு நாள், சில நிமிடங்களை ஒதுக்கி ஒரு மரத்தை உற்றுக் கவனித்திருக்கிறீர்களா…  என்றாவது ஒரு மரத்தின் நெருக்கத்தில் நின்று அதைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? ஏதாவது மரத்தோடு உரையாடி இருக்கிறீர்களா?… அந்த இலைகளை, கிளைகளை, வேர்களை, விழுதுகளை நின்று ரசித்திருக்கிறீகளா?…. நம்மில் பெரும்பாலானோர் இதற்கு “இல்லை” என்பதைத்தான் பதிலாக வைத்திருப்போம். ஆனால், நாம் மரங்களோடு உரையாட வேண்டும், அவைகளோடு உறவாட வேண்டும். மரங்கள் ஓர் அற்புத ஆன்மா… 

இப்படியாக மரத்தின்மீது பேரன்பு கொண்ட ஒரு மனிதர்தான் ஜெர்மனியைச் சேர்ந்த பீட்டர் வொல்லிபென் என்ற காட்டுயிர் ஆராய்ச்சியாளர். கடந்த 20 வருடங்களாக மரங்களின் மத்தியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர், சமீபத்தில் நகரச் சூழல்களில் வளரும் மரங்கள் என்ன மாதிரியான பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்பது குறித்த ஓர் ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அந்த முடிவு அனுதினமும் சாலைகளில் நாம் சாதாரணமாகக் கடக்கும் மரங்களை ஒரு நிமிடம் நின்று பார்க்க வைக்கிறது… 
காட்டுயிர் ஆராய்ச்சியாளர் பீட்டர் வொல்லிபென்…
” நகரங்களின் இரவுகளைப் பகலாக்கும் தெரு விளக்குகளால், மரங்கள் வெகு விரையில் மரணித்துவிடுகின்றன. ” இதுதான் அந்த அறிக்கையின் அடிநாதம். மரங்கள் வெளிச்சத்தைதான் தனக்கான உயிர் நாடியாகக்கொண்டு வாழ்கின்றன. இரவுகளில் எரியும் விளக்குகள், மரங்களின் வாழ்க்கைச் சுழற்சியில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்திவிடுகின்றன. 2016ம் ஆண்டில், ஐரோப்பிய கமிஷனின் நிதியுதவியோடு ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ” இரவுகளில் எரியும் விளக்குகளால் இலை துளிர்விடும் காலம், இலையுதிர் காலம் ஆகியவற்றில் நிறைய மாற்றங்கள் நிகழ்கின்றன. மேலும், இலைகளின் நிறங்களில்கூட மாற்றம் ஏற்படுகின்றன… “ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவின் பிரச்னையோ, ஐரோப்பாவின் பிரச்னையோ மட்டுமல்ல. ஒட்டுமொத்த உலகின் பிரச்னை. இதற்கு ஒரே தீர்வாக ஆராய்ச்சியாளர்கள் முன்வைப்பது இரவு நேரங்களில்… குறைந்தது நள்ளிரவு 1 மணிக்கு மேல் நகர விளக்குகளை அணைத்திட வேண்டும் என்பதுதான். இது மின்சாரத்தைச் சேமிப்பதோடு மட்டுமல்லாமல், மரங்களின் ஆரோக்கியத்தை உறுதிசெய்து, ஆயுட்காலத்தையும் அதிகரிக்கச் செய்யும். 
இந்திய நகரங்களில் இருக்கும் மரங்களின் நிலை என்ன ?, இந்தியாவில் நகர மரங்களைக் காக்க இரவு தெருவிளக்குகளை அணைப்பது சாத்தியம் தானா? என்ற கேள்விகளோடு ஓய்வு பெற்ற உதவி வனப்பாதுகாவலர் ராஜசேகரன் எனப்படும் வனதாசனைத் தொடர்பு கொண்டோம்…
இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் முற்றிலும் உண்மையானவையே. ஒளியும், வெப்பமும்தான் மரம், செடிகளுக்கு முக்கிய வாழ்வாதாரம். இரவு முழுக்க எரியும் விளக்குகளால் மரங்களில் நிச்சயம் ஒளிச்சேர்க்கை எனப்படும் “ போட்டோ சிந்தஸிஸ் “ ( Photosynthesis ) சுழற்சியில் பெரும் குழப்பம் ஏற்படும். இன்று உலகில் பல இடங்களில், செயற்கை விளக்குகளைக் கொண்டே மரம், செடிகளை வளர்க்கும் நிலை இருக்கிறது. அப்படியிருக்கும் போது, பகலில் வரும் சூரிய வெளிச்சம், வெப்பத்திற்கும், இரவில் அவைகளின் மீது விளக்குகளின் வெளிச்சம் மற்றும் வெப்பத்திற்கும் எப்படி வினை புரிவது எனத் தெரியாமல் மரங்கள் குழப்பமடையும். 
அது மட்டுமல்லாமல், அந்த மரங்களில் வாழும் பறவை மற்றும் பிற உயிரினங்களின் வாழ்க்கைச் சுழற்சியும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்திய நகரங்களில் இரவு 1 மணிக்கு மேல் தெரு விளக்குகளை அணைக்கும் திட்டம் அமல்படுத்தப்பட வேண்டும். மக்களின் பாதுகாப்பிற்காக இரவு முழுவதும் விளக்குகள் எரிகின்றன என்பதை ஏற்க முடியாது.
மனிதர்களால் மனிதர்களுக்கு ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல்களுக்கு விலையாக நாம் மரங்களையும், பறவைகளையும் காவு கொடுக்க முடியாது. இதே நிலை தொடர்ந்து நகர மரங்கள் தங்களின் சில இயல்புகளை இழந்துவிட்டால்… அது பேரழிவை நோக்கித்தான் போகும். அதிக வெப்பம், சூழலியல் சீர்கேடுகள் அதிகரிக்கத் தொடங்கிடும். இது குறித்து நல்லதோர் முடிவை அரசாங்கங்கள் நிச்சயம் எடுத்தாக வேண்டும்…” என்று சொல்லி முடிக்கிறார். 
ஆராய்ச்சியாளர் பீட்டர் வொல்லிபென் இதுகுறித்து மிக முக்கியமான  ஒரு விஷயத்தையும் முன்வைக்கிறார். அவர் நகர மரங்களை “ கைவிடப்பட்ட அனாதைகள் “ என்று குறிப்பிடுகிறார். பொதுவாக, காடுகளில் மரங்களுக்கிடையே நிறைய உரையாடல்கள் நடக்கும். இதற்கு “ உட் வைட் வெப் “ ( Wood Wide Web ) என்று பெயர். ஆனால், இந்த உரையாடல் நிகழ இரவுகளில் மரங்களின் வேர்கள் குளிர்ச்சியடைய வேண்டும். ஆனால், விடாமல் எரியும் விளக்குகளோ இதற்கான சாத்தியங்களை விடுவதில்லை. இதனால், ஒவ்வொரு மரமும் தனிமைப்பட்டு போய்விடுகின்றன. 
மரங்களின் மகத்துவத்தை எழுதித்தான் தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை… ஒவ்வொரு நாளும் மனிதர்களுக்கும், இயற்கைக்குமான முரண்பாடுகள் அதிகமாகிக் கொண்டேதானிருக்கின்றன. அதன் ஒரு நிலைதான் இந்தச் செய்தி… 
நன்றி; விகடன்

Leave a Reply