தொடரும் ரெய்டு:எடப்பாடிக்கு நெருக்கடி!

சேகர் ரெட்டி வீட்டில் வருமானவரித்துறை நடத்திய ரெய்டும் அதைத் தொடர்ந்து தலைமைச் செயலாளர் ராமமோகன்ராவைக் குறிவைத்து நடத்தப்பட்ட ரெய்டுகள் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சேலம் செரி ரோட்டில் உள்ள மாவட்ட வங்கிக்குள் சேலம், திருச்சியைச் சேர்ந்த வருமான வரித்துறை அதிகாரிகள் 18 பேர் கொண்ட குழுவினர் அமலாக்கப் பிரிவு உதவி இயக்குநர் சுரேஷ் தலைமையில் நேற்று முன் தினம் (21/12/2016) மாலை துவங்கி இப்போது வரை ரெய்டு நடத்தி வருகிறார்கள். இந்த கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் 64 கிளைகள் இயங்கி வருகின்றன.

இந்த கூட்டுறவு வங்கியின் தலைவர் இளங்கோவன் இவர் சேலம் பகுதி அதிமுக பிரமுகராக இருப்பதோடு ஜெயலலிதா பேரவைச் செயலாளராகவும் இருக்கிறார். அமைச்சர் எடப்பாடிக்கு வேண்டியவரான இவரும் அந்த ரெய்டில் இருந்து தப்பவில்லை. சோதனைக்கு வந்த வருமானவரித்துறை அதிகாரிகள் நவம்பர் 8ஆம் தேதி துவங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரையில் கூட்டுறவு வங்கியில் துவங்கப்பட்ட புதிய கணக்குகள், அதில் நடந்த அனைத்து பணப்பரிவர்த்தனைகள் தொடர்பான விபரங்களையும் கேட்டு துளைத்தெடுத்தனர். அத்தனை ஆவணங்களையும் மொத்தமாகப் போட்டு ஆய்வு செய்ததில் அதிர்ந்து போயிருக்கிறார்கள் அதிகாரிகள். காரணம் கிராமங்கள் தோறும் திடீரென முளைத்த வங்கிக் கணக்குகளும் அதில் போடப்பட்ட வரம்புக்குட்பட்ட லட்சங்களும். இதனால் தங்களின் விசாரணை வளையத்தினுள் கொண்டு வந்திருக்கிறார்கள் இளங்கோவனை

யார் இந்த இளங்கோவன்?

சேலம் பகுதி அதிமுக பிரமுகரான இவர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர். பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டுகளை யாருக்குக் கொடுப்பது என்பதை முடிவு செய்யும் இடத்தில் செல்வாக்கோடு இருந்த இளங்கோவன் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவரான பின்னர் கட்சியினரே இவரது வளர்ச்சியைக் கண்டு மூக்கில் விரலை வைத்திருக்கிறார்கள்.

பழைய நோட்டுகளை மாற்ற புதிய அக்கவுண்ட்

நவம்பர் 8ஆம் தேதி ரூபாய் நோட்டு செல்லாது என்று மோடி அறிவித்த உடன் இருக்கும் பணத்தை வங்கிகளில் சென்று மாற்றுவது சிரமம் என்பதை உணர்ந்தவர்கள். கூட்டுறவு வங்கியில் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி பணத்தைப் போட முடிவு செய்திருக்கிறார்கள். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் 64 கிளைகளும் பெரும்பாலும் கிராமங்களில் உள்ள கிளைகள் ஒவ்வொரு கிளையில் அப்பாவி கிராம மக்களை பயன்படுத்தி 5 அக்கவுண்டகளை துவங்கி அதில் சில அக்கவுண்ட்களில் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயும் சில அக்கவுண்ட்களில் இரண்டரை லட்ச ரூபாயுமாக 64 கிளைகளிலும் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்திருக்கிறார்கள். 64 கிளைகளின் மேலாளர்களும் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் புதிதாக துவங்கப்பட்ட கணக்குகளின் விபரங்களைக் கொடுத்த போது இப்படி டெபாசிட் செய்யப்பட்ட தொகையே 150 கோடியைத் தொட்டது.

எங்கிருந்து வந்த பணம்?

நவம்பர் 19ஆம் தேதி தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தல் நடந்தது. அதில் அரவக்குறிச்சி தேர்தல் பொருப்பாளராக நியமிக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. தாராளமான பணப்புழக்கம் அரவக்குறிச்சியில் இருந்த நிலையில் இப்படி துண்டு துண்டாக தொகைகள் பல கோடி அளவுக்கு கூட்டுறவு வங்கிக் கிளைகளில் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதால் இளங்கோவனை தங்கள் வளையத்திற்குள் கொண்டு வந்திருக்கும் வருமான வரித்துறை ஒவ்வொரு கிராமம் கிராமமாக யாருடைய பெயரில் இந்த கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன அவர்களுடைய பின்னணி என்ன? அல்லது அவர்கள் அப்பாவிகளா என்கிற கோணத்திலும் விசாரணையை துவங்கியிருக்கிறார்கள்.

Leave a Reply