தமிழக ஊடகங்கள்

கூட்டு மனசாட்சியின் குரல் – தமிழக ஊடகங்கள்

2015 இறுதியில் எழுந்த விஜயகாந்த் மற்றும் இளையராஜா விவகாரங்களில் அவர்களிடம் மீடியா நடந்து கொண்ட விதமும் மீடியாவிடம் அவர்கள் நடந்து கொண்ட விதமும் சர்ச்சைக்கு உள்ளாகின. யார் சரி யார் தவறு என்று இருபக்கமும் பிரிந்து வாதிட்டார்கள். இதில் விஜயகாந்த் விவகாரத்தின் போது சமூக வலைதளங்களில் அவருக்கு எழுந்த ஆதரவு சற்று ஆச்சரியப்பட வைத்தது. இவர்கள்தான் விஜயகாந்த் ஏதாவது பொது வெளியில் சொதப்பும்போது வரிந்து கட்டி அவரைத் தாக்கியவர்கள். அவரது அந்த செயல்பாடு பொது இடத்தில் ஒப்புக் கொள்ள முடியாததாக இருந்தபோதும் அந்த உணர்வைப் பலர் பிரதிபலித்தனர். தமிழகத்தில் மீடியாக்கள் தங்களைப் பற்றி மக்களிடம் கேட்டு ஒரு சுய பிரதிபலிப்பு செய்கிறார்களா என்ற கேள்வி எழுந்தது.

கட்சிகளைப் பற்றியும் சினிமாக்கள் பற்றியும் நடிகர்கள் பற்றியும் குற்றங்கள் பற்றியும் சிந்தித்து எழுதி சர்வே எடுத்து வெளியிடுபவர்கள் தங்களைப் பற்றி ஒரு சர்வே எடுத்து அலசலாமே என்று தோன்றியது. அதே நேரத்தில் அதில் ஒரு நடைமுறைச் சிக்கலும் இருப்பதை உணர முடிந்தது. ஒரு குறிப்பிட்ட மீடியா நிறுவனம் இதில் ஈடுபட்டால் அவர்கள் தங்களுக்கு சாதகமாக முடிவுகளைத் திரித்து எழுதுகிறார்கள் என்று சர்ச்சை எழும். அரசாங்கம் இப்படி ஒரு செயலை முன்னெடுப்பது இப்போதைக்கு நடவாத காரியம். யாராவது தொழில்முறை நிறுவனங்கள் முன்வரலாம். அப்படியே முன்வந்தாலும் அந்த சர்வேக்களின் மீது மக்களுக்கு நம்பிக்கை இருக்குமா என்று தெரியவில்லை. தேர்தல் கணிப்புகளின் சொதப்பல் நாடறிந்த விஷயம்.

இந்த நிலையில் இதற்கு ஒரே தீர்வு சமூக வலைத்தளங்கள் என்று தோன்றியது. சுதந்திரமான கருத்தையும் மக்கள் எண்ணங்களையும் பதிவு செய்ய இது நல்ல ஊடகம். ஒரு கூட்டு மனசாட்சியாக மக்களைப் பிரதிபலிக்கும் இந்த ஊடகம் ஒரு அபார சக்தி. இங்கே உண்மையான செய்திகளைத் தேடினால் கிடைக்காது. ஆனால் உண்மையான உணர்வுகள் கிடைக்கும். எனவே இதில் புழங்கும் நாமே ஒரு சர்வே எடுத்தால் என்ன என்று தோன்றியது. இது தொழில் முறை வல்லுனர்கள் வடிவமைத்த சர்வே அல்ல. மிக எளிதான சில கேள்விகள் மக்களிடம் கேட்கப்பட்டது. அதற்கான பதில்களை விரைந்து அளிக்கும்படியும் சர்வேயை நண்பர்களிடம் பகிரும்படியும் கோரப்பட்டது. இதன் நோக்கம் பொது மக்களின் எண்ண ஓட்டத்தை உணர்ந்து கொள்வதே இதை தீவிரமாக எடுத்துக் கொண்டு செயல்படுவதும் விலக்குவதும் நமது  விருப்பம். தங்கள் நுகர்வோரின் மனதை அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பாக மீடியாக்களுக்கு இருக்கும் என்ற நோக்கத்தில் நடத்தப்பட்டதே இந்த சர்வே.

31-12-2015 தொடங்கி 04-01-2016 வரை நடந்த சர்வேயில் 940 பேர் பதிலளித்திருக்கிறார்கள். பெரிய எண்ணிக்கை இல்லை என்றாலும் இவர்கள் வெவ்வேறு பகுதிகளில் வாழும் வெவ்வேறு பின்புலங்களுடன் கூடிய மக்கள். இது போன்ற மாதிரிக் குழுவை மனிதர்கள் கொண்டு நிகழ்த்தப்படும் சர்வேக்களில் பெறுவது இயலாத காரியம். ஒரு வலைப்பின்னலைப் போல் விரிந்த பங்கேற்பாளர்கள் கருத்து கூறியிருப்பதால் இதை நாம் ஓரளவு நம்பகமானதாகவே கருதலாம். இனி வரும் காலங்களிலும் இது போன்ற வேறு சில சர்வேக்களை நிகழ்த்தும் எண்ணம் உள்ளது. இது ஒன்றும் முழுமையான சர்வே இல்லை. அதை நடத்தும் பண பலமும் ஆள் பலமும் நம்மிடம் இல்லை. இணையத்தின் பலமே இதன் பலம். இணையத்தின் வெளிப்படையான தன்மையே இதன் வெளிப்படையான தன்மை.

முதல் கேள்வி மிகவும் எளிமையானது. “தமிழக ஊடகங்கள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுகின்றன” என்ற கூற்றை எத்தனை பேர் ஆமோதிக்கிறார்கள் என்ற நோக்கத்தில் கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்தவர்களில் 875 (93.1%) பேர் இல்லை என்ற பதிலை அளித்துள்ளார்கள். மருத்துவம், கல்வி, அரசியல் என்று எந்தத் துறை சார்பில் இக்கேள்வி கேட்கப்பட்டிருந்தாலும் இந்த மாதிரியான பதில்தான் இருந்திருக்கும். அதே நேரத்தில் மக்களின் ஒட்டு மொத்த என்ன ஓட்டத்தை அறிவது முக்கியமென்று நினைத்ததால் இந்தக் கேள்வி. 46 (4.9%) பேர் தெரியவில்லை என்ற பதிலை அளித்துள்ளார்கள். 19(2%) பேர் மட்டுமே தமிழக ஊடகங்கள் மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படுவதாக கூறி இருக்கிறார்கள்.

Tamilmedia1

இரண்டாவது கேள்வியும் அதே ரகம்தான். மிகவும் பொதுவான மக்கள் மனமறியும் கேள்வி. “தமிழகத்தின் ஊடகங்கள் நடுநிலையாக செயல்படுகின்றன” என்ற கூற்று சரியானதா என்று கேட்டிருந்தோம். இதற்கு பதில் அளித்தவர்களில் 915 (97.5%) பேர் இல்லை என்று பதில் அளித்திருந்தார்கள். இப்படி ஒரு ஒருமித்த குரலை நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. மீடியாக்களின் சார்பு நிலைப்பாடு என்பது கடந்த பல வருடங்களாக அனைவரும் கவனித்து வருவதே என்றாலும் அந்த சார்பு நிலையை மக்கள் உணர்ந்திருக்கிறார்களா என்ற கேள்வி இருந்தது. ஆனால் மக்கள் எல்லாவற்றையும் உணர்ந்தே இருக்கிறார்கள். அதன் பிறகும் குறிப்பிட்ட சார்பு ஊடகத்தைப் பார்ப்பது அந்த சார்பு நிலையின் செய்தியை அறிவதற்காகக் கூட இருக்கலாம். 16 (1.9%) பேர் தெரியவில்லை என்றும் 9 (1%) பேர் ஆமாம் என்றும் சொல்லி இருந்தார்கள்.

Tamilmedia2

அடுத்தபடியாக தமிழக ஊடகங்கள் பெரிதும் முன்னிறுத்துவது எந்த மாதிரியான செய்திகளை என்று கேட்டிருந்தோம். கீழ்க்கண்ட வாய்ப்புகளில் எத்தனை வேண்டுமானாலும் தேர்வு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டிருந்தது. தமிழக மீடியாக்களின் செய்திகளில் முதலிடம் சினிமா செய்திகளுக்கே என்று மக்கள் கருதுகிறார்கள். அதை அடுத்து பொழுதுபோக்கு செய்திகளுக்கும் ஆதாரமில்லா அரசியல் வம்புகளுக்கும். வெறும் 11.9% மக்கள் மட்டுமே மீடியாக்கள் சமுதாயத்தைப் பாதிக்கும் பிரச்னைகளை முன்னிருத்துவதாகக் கருதுகிறார்கள்.

 • சினிமா செய்திகள் – 64.1%
 • ஆதாரமில்லா அரசியல் வம்புகள் – 51%
 • அர்த்தமில்லா பொழுதுபோக்கு சமாச்சாரங்கள் – 57.8%
 • சமுதாயத்தை பாதிக்கும் பிரச்சனைகள் – 11.9%
 • Others – 4.1%

Tamilmedia3

அதற்கு எதிர்மறையாக “தமிழ் ஊடகங்கள் எதில் கொஞ்சமும் கவனம் செலுத்தவில்லை என்று எண்ணுகிறீர்கள்?” என்ற கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதில்கள் வந்திருந்தன.

 • அதிமுக அரசை விமர்சிப்பதில் – 498 (53.1%)
 • தமிழக முன்னேற்றத்துக்கான பிரச்சனைகளில் – 659 (70.3%)
 • விவசாயிகள் பிரச்னைகளில் – 467 (49.8%)
 • தமிழகத்தின் நீர் நிலைகள், சுற்றுச்சூழல் பிரச்னைகளில் – 428 (45.6%)
 • தெரியவில்லை – 13 (1.4%)
 • Others – 31 (3.3%)

அதாவது விஜயகாந்த் நினைத்தது போல அதிமுக அரசை விமர்சிப்பதில் தமிழக மீடியாக்கள் கவனம் செலுத்தவில்லை என்பது ஓரளவு உண்மை என்றாலும் பொதுவாகவே கட்சி பேதமின்றி தமிழக முன்னேற்றம் குறித்த விஷயங்களில் ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை என்று 70% கருதுகிறார்கள். சினிமா, பொழுதுபோக்கு செய்திகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்படுவதாக அவர்கள் கருதுவதால் இப்படி சொல்லியிருக்கலாம்.
Tamilmedia4

பிறகு ஒரு சுவாரசியமான கேள்வி. “நடுநிலையான செய்தி தொலைக்காட்சி என்று எதைக் கூறுவீர்கள்” என்று கேட்கப்பட்ட கேள்வி கொஞ்சம் விவகாரமானது. எங்கள் பெயரை விட்டு விட்டீர்கள் என்று சிலர் சண்டைக்கு வருவார்கள் என்பதால் பிற பெயர்களை யாரும் குறிப்பிட்டால் சேர்த்துக்கொள்ளும் வசதியும் தரப்பட்டிருந்தது. இதில் செய்தி தொலைக்காட்சி என்று மட்டும் குறிப்பிடக் காரணம் பிற தொலைக்காட்சிகள் பொழுதுபோக்கிற்காக இருப்பதில் தவறில்லை என்று நாம் கருதியதால்தான்.

ஆரம்ப நிமிடங்களில் விடுபட்ட பாலிமர், பொதிகை, எதுவும் இல்லை போன்ற பெயர்களை சிலர் குறிப்பிட்டதால் மீண்டும் சேர்த்தோம்.

Tamilmedia5ஊடகங்கள் நடுநிலையாக இல்லை என்ற பொதுவான கருத்தை மக்கள் கூறியிருந்தாலும் இருப்பனவற்றில் புதிய தலைமுறைக்கு முதல் இடம் கிடைத்திருந்தது. அடுத்த நிலையில் பொதிகை தொலைக்காட்சி (?) வந்திருந்தன. அதைத் தொடர்ந்து நியூஸ் 7 சேனலும் நான்காவது இடத்தில் பாலிமர் சேனலும் இருந்தன. ஜெயா, கலைஞர் போன்ற தொலைக்காட்சிகளை யாரும் கணக்கில் கொள்ளவே இல்லை.

இதே போலவே தினசரி செய்தித்தாள்களுக்கும் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. சர்வேயின் நீளம் கருதி வார இதழ்கள் பற்றியெல்லாம் கேட்கவில்லை. நடுநிலையான செய்தித்தாள் என்று எதைக் கூறுவீர்கள் என்ற கேள்விக்கு வழக்கம் போல பெரும்பான்மையானவர்கள் எதுவும் இல்லை என்று சொல்லியிருந்தாலும் கிட்டத்தட்ட 25% பேர் தமிழ் இந்துவை சொல்லி இருந்தார்கள். மேலே இருக்கும் பொதுவான டிரெண்டை வைத்துப் பார்க்கும்போது இது ஒரு நல்ல மதிப்பீடுதான். அதை அடுத்து தினமணி இருக்கிறது. விற்பனையில் கோலோச்சுவதாக கூறிக்கொள்ளும் தினமலர், தினத்தந்தி ஆகியவை நடுநிலை மதிப்பீட்டில் பாதாளத்தில் இருக்கின்றன.

Tamilmedia6

பொதுவாகவே மீடியா அல்லது சினிமா எடுப்பவர்களிடம் எதற்காக இப்படி படம் எடுக்கிறீர்கள் அல்லது பத்திரிக்கை வெளியிடுகிறீர்கள் என்ற கேள்விக்கு மக்களுக்குப் பிடிப்பதால்தான் கொடுக்கிறோம் என்ற பதில் வரும். அதில் உண்மை இல்லை என்று ஒதுக்கிவிட முடியாது. எனவே இவ்வளவு பேசுகிறீர்களே “சினிமா, பொழுது போக்கு செய்திகளைத் தவிர்க்கும் ஒரு பத்திரிகையை நீங்கள் வாங்கத் தயாரா?” என்று மக்களிடமே கேட்டோம். 84.4% பேர் ஆமாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நம்புவோமாக.

Tamilmedia7அது தவிர இறுதியில் தங்கள் சொந்தக் கருத்துகளை 219 பேர் பதிவு செய்திருக்கிறார்கள். த்தூ என்ற பின்னூட்டத்தையும் வசவுகளையும்  விடுத்தால் பெரும்பாலானவர்கள் சார்பற்ற உண்மையை வேண்டுகிறார்கள். வெற்று விளம்பரம், பரபரப்புக்காக மக்களுக்குப் பயனில்லாத செய்திகளை வெளியிடாதீர்கள் என்று கெஞ்சுகிறார்கள். ஊடக நண்பர்கள் விரும்பினால் இவற்றைத் தொகுத்துத் தரமுடியும்.

இந்த சர்வே யாரையும் குறை கூறவோ குத்திக்காட்டவோ எடுக்கப்படவில்லை. ஊடகங்கள் ஒரு தேசத்தின் இதயத்துடிப்பு போன்றவை. அவர்களின் ஆரோக்கியமான செயல்பாட்டை உறுதிப்படுத்தவேண்டியது தேசத்திற்கு அவசியம். இந்த முயற்சி அடுத்த படியை நோக்கிய முன்நகர்வுக்கு என்ன செய்யலாம் என்ற சிந்தனையின் வெளிப்பாடு. நுட்பமோ பிரமாண்டமோ இல்லாமல் இருக்கலாம். நேர்மை மட்டுமே இதன் நோக்கம். மீடியா நண்பர்கள் தங்கள் எதிர்கால திட்டங்களுக்கு ஒரு சிட்டிகை உப்பைப் போல இந்தக் கூட்டு மனசாட்சியின் குரலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பமுள்ள மீடியா நண்பர்களுக்கு விரிவான சர்வே முடிவுகளை பதிவிறக்கித் தர தயாராக உள்ளேன்.

– ஷான்.

kanavudesam.com

Leave a Reply