சுய ஒழுக்கம்

மறைந்துபோகும் சக்தி உங்களுக்கு கிடைத்தால் என்ன செய்வீர்கள்?’

என்று ஒரு இணைய இதழ் பலரிடமும் வாக்கெடுப்பு நடத்தியிருக்கிறது. 90 சதவீதம் பேர் சொன்ன பதில் திகைப்பூட்டுகிறது. ‘வங்கியைக் கொள்ளையடிப்பேன்’, ‘பாரில் போய் மூக்கு முட்டக் குடிப்பேன்’, ‘நண்பனின் மனைவியை அடைவேன்’, சூதாட்ட விடுதிக்குள் போய் பணத்தை அள்ளுவேன்’, ‘பெண்கள் ஹாஸ்டலுக்குள் போய் இளம்பெண்களிடம் தகாது நடப்பேன்’, ‘அதிகாரத்தைக் கைப்பற்ற கொலை செய்வேன்’ என தவறான வழிகளில் ஈடுபடவே விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வயது வேறுபாடின்றி, ஆண் பெண் பேதமின்றி, தாங்கள் அரூபமாக முடிந்தால் அடக்கிவைக்கப்பட்ட ஆசையை வெளிப்படுத்துவேன் என்றுதான் பதில் கூறியுள்ளனர். குற்றம் செய்யத் தயாராகவே மக்கள் இருக்கிறார்கள்.

கடவுள் மீதான பயம், சட்டம் மீதான பயம், தண்டனை மீதான பயம் என, பயம்தான் அவர்களைத் தடுத்து வைத்திருக்கிறது என்பதுதான் நிஜமா?

அதிநவீன தொழில்நுட்பச் சாதனங்களின் வளர்ச்சி சகலரையும் எளிதாக குற்றங்களில் ஈடுபட வைக்கிறது. செல்போன்களால் இவ்வளவு குற்றங்கள் உருவாகும் என யாராவது கற்பனை செய்திருப்பார்களா, என்ன?

‘சுய ஒழுக்கம் என்ற ஒன்றே இன்று தேவையற்றதாகிவிட்டதா?’ என்ற கேள்வி எழுகிறது. சுய ஒழுக்கத்துடன் வாழ்பவனை உலகம் பரிகாசம் செய்கிறது. அசடு என அடையாளப்படுத்துகிறது. ஆனால், சுய ஒழுக்கத்தைத் தவிர வேறு என்ன கவசம் ஒரு மனிதனைக் காப்பாற்றிவிட முடியும், சொல்லுங்கள்!

Leave a Reply