சினிமாவை மிஞ்சும் நூறு நாள் வேலைத் திட்டம்

சினிமாவை மிஞ்சும் நூறு நாள் வேலைத் திட்டம்…
ரஜினிகாந்த் நடித்த அருணாச்சலம் படம் பார்த்திருப்பீர்கள். அதில் கதாநாயகனின் மிகப் பெரிய பணக்கார அப்பா, ஒரு டிரஸ்ட் ஏற்படுத்தி, அவர்களிடம் மூவாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தன் மகனை கண்டுபிடித்து ஒப்படைக்க வேண்டும் என்றும், அப்படி ஒப்படைக்க ஒரு விநோத நிபந்தனையும் விதித்திருப்பார். அந்த நிபந்தனைப்படி தன் மகனிடம் முப்பது கோடி ரூபாயை கொடுத்து அதை அவர் முப்பது நாட்களில் செலவழித்து முடிக்க வேண்டும், அதே சமயம் அந்த பணத்தில் தானம் கொடுக்கவோ, கடன் கொடுக்கவோ, குண்டூசி அளவு சொத்தோ அவருக்கு சொந்தமாகிவிடக் கூடாது என்பதாகும். அதற்கு சொல்லபட்ட காரணம், பணத்தை செலவழித்து அலுத்து, தன் மகனுக்கு பணத்தின் மீது விருப்பமே இல்லாமல் போக வேண்டும் என்பதாகும்.
அதன்படி முப்பது கோடி ரூபாய் பணத்தை வீணாக செலவழிக்க கதாநாயகன், ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை அப்படியே வாடகைக்கு எடுத்து தன் கிராமத்தில் இருக்கும் சொந்தக்காரர்களையெல்லாம் அதில் தங்க வைப்பார், ரேஸில் பணம் கட்டுவார், தேர்தலில் தன் நண்பனை நிற்க வைத்து தாறுமாறாக செலவழித்து தோற்கடிக்க முயற்சி செய்வார். ஆனால், வில்லன்கள் சூழ்ச்சி செய்து கதாநாயகனுக்கு மேலும் மேலும் பணம் சேரும்படி செய்து, அவரை பணம் முழுவதையும் செலவழிக்க விடாமல் செய்வார்கள்.
கதாநாயகன் எல்லா சூழ்ச்சிகளையும் முறியடித்து குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்திற்குள் பணம் முழுவதையும் எதையும் சொந்தமாக்காமல் பணத்தை வீணாக செலவழித்து முடித்து தன் தந்தையின் சொத்துக்கு சொந்தக்காரர் ஆகி விடுவார்.
படம் பார்த்த யாரும் பல கோடி ரூபாய்களை எதையும் சொந்தமாக்காமல் விரயம் செய்யவேண்டும் என்ற கதாநாயகனின் அப்பாவின் நிபந்தனையை பைத்தியக்காரத் தனமானது. இது சினிமாவுக்குத்தான் லாயக்கு என்று புரிந்து கொண்டிருப்பார்கள்.
ஆனால் நிஜத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணிக் காலத்தில் ஆரம்பிக்ப்பட்டு தற்போது தேசீய முற்போக்கு கூட்டணியிலும் தொடரும் நூறு நாள் வேலைத் திட்டம் அருணாசலம் படத்தின் கதாநாயகனின் தந்தையின் நிபந்தனையை உண்மையிலேயே செயலாக்கிக் கொண்டிருக்கிறது‚
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி முடியும் தருவாயில் அதன் தலைவர் சோனியா காந்தி தன் அறிக்கையில் நூறுநாள் வேலை திட்டத்தின் மூலம் 8 கோடி பேருக்கு வேலை கொடுத்திருக்கிறோம் என்று சொல்லியிருக்கிறார். 
தற்போது தேசீய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இன்னும் சில கோடி பேர்களுக்கு வேலை கொடுத்திருப்பார்கள். நூறு நாள் வேலை திட்டத்தில், ஒருவருக்கு ஒரு நாளைக்கு சராசரியாக 150 ரூபாய் சம்பளம் என்றாலும் இதுவரை நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு 11லட்சம் கோடி ரூபாய்கள் செலவாகியிருக்க வேண்டும். 
வாஜ்பாய் காலத்தில் கங்கை காவிரி நதிநீர் இனைப்புத் திட்டத்திற்கே 4லட்சம் கோடி ரூபாய்தான் செலவாகும் என்று மதிப்பீடு செய்யப்பட்டது. அப்படியானால் இந்த 11 லட்சம் கோடி ரூபாயில் என்னவெல்லாம் செய்திருக்கலாம் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
ஆனால் ஏறக்குறைய 10 கோடி பேருக்கு வேலை கொடுத்து, 11 லட்சம் கோடி ரூபாய் செலவழித்து நாட்டில் ஒரு அடி கால்வாயோ, அல்லது ஒரு அடி சாலையோ, ஒரு குளமோ வெட்டப்படவில்லை, ஒரு தடுப்பனையோ அல்லது ஒரே ஒரு பொதுக் கழிப்பிடமோ கட்டப்படவில்லை என்பதுதான் பரிதாபகரமான உண்மை. இங்கே அருணாச்சலம் பட கதை உண்மையாகிவிட்டது. சினிமாவை மிஞ்சும் உண்மை சம்பவம் என்பது இதுதானோ? .
ஏன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் தேசீய முற்போக்கு கூட்டணி என்று ஆட்சி வித்தியாசம் இல்லாமல் லட்சக்கணக்கான கோடி ரூபாய்களை வீணடிக்கிறார்கள் என்று யாராவது மக்களுக்கு விளக்கினால் நல்லது.
“என் மக்கள்” 

கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம்…

Leave a Reply