கேவலம் ஒரு டிரைவர்

கேவலம் ஒரு டிரைவர்.!

********$&**********
இந்த தலைப்பை தற்போது படிக்க வேண்டாம். 

————————————————
        என்னிடம் சில நண்பர்கள் இப்படி கேட்டதுண்டு. 

“நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்க மாட்டீங்களே”.?

     “அட பராவல கேளுங்க”

“இல்ல… நீங்க டிரைவர் தானே”.?

      “ஆமாம்”

“இல்ல.. டிரைவர்னாவே அந்த மாதிரிலாம் போவாங்கலாமே”?

      “எந்த மாதிரி”.?

“அட தெரியாத மாதிரி பேசாதீங்க

அதாங்க பொண்ணுங்க கிட்ட”

“இல்லங்க எனக்கு அப்படிலாம் பழக்கம்  இல்ல”..

 “அட சும்மா சொல்லுங்க”…

இதுக்கு மேல நான் சொல்லி அவங்களுக்கு

புரியவைப்பதற்கு பெரிய பாடா ஆகிடும். 
இப்படி கேட்பவர்கள் மீது தப்பில்லை

ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தை மட்டும் இப்படியாக காணவே இந்த சமூகம் கட்டமைத்திருக்கிறது. 

நான் கேட்கிறேன்… 

ஏன் ஒரு அரசியல்வாதி அந்த தப்பை செய்வதில்லையா?

ஒரு நடிகர்,நடிகை செய்யவில்லையா?

ஒரு அரசு ஊழியர் செய்யவில்லையா?

எல்லாத்துறைகளிலும் இதுமாதிரி தவறுகளும்,தவறானவர்களும் இருக்கத்தானே செய்கின்றனர்.?

பிறகு ஏன் டிரைவர்களை மட்டும் இப்படியாக பார்க்கிறார்கள்.?

இதற்கு சினிமாத்துறையும் ஒரு காரணம் என்றே நான் சொல்லுவேன். 

கடந்த சில வருடங்களுக்கு முன் சென்னையில் இருக்கும் ஒரு ஐடி நிறுவனத்தில் கூட மூடை மூடையாக ஆணுறை கழிவுகளை அகற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது. 
சரி போகட்டும். இதனால் சில வருடங்களாக 

என்ன மாற்றம் நிகழ்ந்திருக்கிறது தெரியுமா.?

ஓட்டுனர் என்றாலே அவன் தப்பானவன் மட்டுமே 

(கார் முதல் கண்டெய்னர் வரை) 

அதனால் என்ன என்கிறீர்களா.?

அதனால் ஒரு ஓட்டுனனுக்கு யாரும் பெண் கொடுக்க முன்வருவதில்லை (அரசுப்பணி என்றால் கூட) 

கல்யாணம் ஆகாமல் பலர் இருக்கின்றனர் முதிர்கண்ணன்களாக. 

இதன்காரணமாக   

கிளீனர் வேலைக்கு யாரும் செல்வதில்லை. 

ஒரு காலத்தில் டிரைவர் என்றால் போலீஸ் வேலைக்கு நிகரான மதிப்பு இருந்தது. 

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்பே தமிழகத்தில் மட்டும் குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் டிரைவர்கள் பற்றாக்குறை.

அப்படியே இந்த தொழிலை விரும்பும் ஒரு சிலரும் ஓட்டுனர் பயிற்சிபள்ளிக்கு சென்று பத்தே நாட்களில் அரைகுறையாக கற்றுக்கொண்டு வந்துவிடுகிறார்கள்.

நீண்ட பயணத்தில் கண்விழிக்கும் பயிற்சியும் கிடைப்பதில்லை,

வழியில் ஏதேனும் சிறு கோளாறு என்றாலும் தானாகவே சரிசெய்யவும் தெரிவதில்லை. முடிவு விபத்துகள் அதிகரிப்பு. 

தொழிலாளர்கள் பற்றாக்குறையினால் ஒன்றிரண்டு லாரி வைத்திருந்த முதலாளிகளெல்லாம் விற்றுவிட்டு அடையாளம் காணாமல் போய்விட்டனர். 

ஒரு சிலர் மட்டும் லாரியை ஆட்டோவாக (குட்டி யானை) மாற்றி சொந்த ஊரிலேயே தொழில் செய்கிறார்கள்.
எல்லாம் கார்ப்பரேட் மயமாகிக்கொண்டே வருவதால் இருக்கும் வாகனங்களுக்கு பாரம் கிடைப்பது கூட மிகுந்த சிரமமாகிவிட்டது ஓரிடத்தில் இருந்து ஓரிடம் சென்றால் அடுத்த லோடு கிடைக்க குறைந்த பட்சம் மூன்று நாட்களாவது காத்திருக்கும் நிலை.

பத்தாயிரம் ரூபாய் வாடகைக்கு சென்றால் ஓட்டுனர் ஊதியம் 600 முதல் 1000 வரையில் (வண்டியை பொறுத்து) ஆனால் அடுத்த லோடுக்கான காத்திருப்பில் மூன்று நாளின் சாப்பாடு செலவே அதையும் கரைத்துவிடும்.

ஒரு வேளை உண்டும் உண்ணாமலும் தற்போது வரை

ஒவ்வொரு ஓட்டுனனும் பயணிக்கிறான்.
ஒரு லாரிக்குப்பின் எத்தனை பேருடைய வாழ்வு அடங்குகிறது தெரியுமா.?

லாரியை தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 

உதிரிபாகங்கள் செய்து கொடுக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்கள் 

பாடி கட்டுபவர்கள்,மெக்கானிக், டயர்கடை, பஞ்சர் போடுபவர்கள், டயரை மறுசுழற்சி செய்து தருபவர்கள். இதுபோல ஒரு பெருங்கூட்டம் லாரியை நம்பி வாழ்பவர்களே நம் நாட்டில். 

சரி அப்படியாவது இருக்கும் சில ஓட்டுனர்களுக்காவது பாதுகாப்பு கிடைக்கிறதா என்றால் அதுவுமில்லை.
வழியெங்கும் திருட்டு பயம்.! 

தூக்கம் வரும் சிலமணி நேரம் எங்கேனும் ஓரம்கட்டி நிம்மதியாக தூங்க முடிவதில்லை. 

நின்று கொண்டிருக்கும் லாரியில் டீசல் திருடுவது 

தூங்கும் டிரைவர்களை அடித்து உதைத்து பணம் செல்போன் ஆகியவற்றை பிடுங்குவது,

அல்லது டிரைவரை கொன்றுவிட்டு லாரியவே பாரத்தோடு திருடுவது என்று தினமும் வாடிக்கையாகி விட்டது. அயர்ந்து தூங்கி கொண்டிருப்பவன் சுதாரிக்கவே சில நிமிடம் பிடிக்கும். 

இந்தியா முழுக்க பத்து (ஆராய்ந்து பார்த்தால் அதிகமாக இருக்கும்)  ஓட்டுனர்களாவது திருடர்களால் தினம் இறக்கின்றனர். 

அப்படி இறப்பவர்களின்  குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்ல கூட ஆளில்லை. அதுமாதிரியான ஒரு செய்தி கூட அரசின் காதுகளுக்கு எட்டுவதேயில்லை.
நாடுமுழுவதுமான வர்த்தகத்தில் போக்குவரத்து துறையின் பங்கு அளப்பரியது. 

இப்படியானவர்களை எப்படி கையாள்கிறது சமூகம் தெரியுமா.?

பல்வேறு தொழிற்சாலைகளில் ஓட்டுனர்களுக்கு உணவு கிடையாது,

ஓட்டுனர்கள் மட்டும் அங்கிருக்கும்  கழிவறையை கூட உபயோகிக்க கூடாது. அங்கே பணிபுரியும் தொழிலாளர்களுக்கும், ஓட்டுனனுக்கும் வருவது மலம் தானே.?

இரவு,பகல் கண்விழித்து பனியோ,வெயிலோ, மழையோ எப்போதும் சராசரி 80° வெப்பத்தோடே வாழ்பவர்களை இப்படி தான் கையாள்கிறார்கள். 

இந்த அரசாவது இவர்களின் நலனுக்காக எதாவது செய்திருக்கிறதா என்றால் 

பதிலே கிடைக்காது. 

இதேநிலை தொடர்ந்தால் வரும் காலத்தில் ரோபோவை கொண்டு தான் வாகனங்கள் இயங்கப்போகிறது.

எல்லோரும் மனிதர்களே 

எல்லா துறைகளிலும் தவறானவர்கள் இருக்கவே செய்கிறார்கள். 

இவர்களை நீங்கள் உயர்த்திப்பிடிக்க வேண்டாம் 

தாழ்த்திப்பேசாதிருங்கள் போதும்.!

இப்போது இதன் தலைப்பை படியுங்கள்.

Leave a Reply