கருப்பூர் அரசு மருத்துவமனை   “ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு”

ஏழ்மையான மக்கள் மட்டுமே அரசு மருத்துவமனைகளுக்கு வருவதாலோ என்னவோ, அங்கே எப்போதும் அலட்சியமும் கவனக்குறைவும் மருந்து வாசனைகளை மீறி வியாபித்திருக்கும். அப்படித்தான், சேலம் மாவட்டம், கருப்பூரில் மருத்துவர்களின் கவனக்குறைவால் நான்கு மாத பெண் குழந்தை, இந்த மண்ணைவிட்டு சென்றுவிட்டது. ஶ்ரீநிதி என்ற அந்தக் குழந்தைக்குப் போடப்பட்ட தடுப்பூசியே மரணத்துக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு மருத்துவமனை தரப்பில் இதுவரை எந்த ஒரு விளக்கமும் கொடுக்கப்படவில்லை என்பது மற்றொரு கொடுமை. குழந்தையின் தந்தை நம்மிடம் பேசினார்.

”என் பேரு மணி. கொத்தனார் வேலை செஞ்சுட்டிருக்கேன். ஒருநாளைக்கு 400 ரூபாய் கிடைக்கும். என் தாய்மாமன் மகள் கெளசல்யாவோடு எட்டு வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு. ஓமலூர் பக்கத்துல கருப்பூரில் அருந்ததியர் தெருவில் குடியிருக்கிறோம். கல்யாணமாகி மூணு வருஷமா குழந்தை இல்லை. பல கோவில்களுக்குப் போய் சாமிகளைக் கும்பிட்டு பிறந்தவன் முகேஷ். அவனுக்கு அஞ்சு வயதுசாகுது. இப்போ, நாலு மாசத்துக்கு முன்னாடி சேலம் கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் பெண் குழந்தைப் பிறந்துச்சு. ரொம்ப சந்தோஷப்பட்டோம். அஞ்சு நாளைக்கு முன்னாடிதான் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்தேன்.

சொந்தக்காரங்க, அக்கம்பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாம் வந்து பார்த்தாங்க. எல்லோருக்கும் சாக்லெட் வாங்கிக் கொடுத்தோம். ரொம்ப அழகா இருக்கான்னு சொன்னாங்க. குழந்தை ஆரோக்கியமாகவும் இருந்துச்சு. ஶ்ரீநிதின்னு பேரு வெச்சோம். நான் கூலி வேலை செஞ்சாலும் மனைவிக்கோ, குழந்தைக்கோ எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கிட்டிருக்கேன். வசதி இல்லாமல்தான் கவர்மென்ட் ஆஸ்பத்திரிக்குப் போறோம்” என்ற குழந்தையின் தந்தை, சற்றே அமைதியாகித் தொடர்கிறார்.

”கருப்பூர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடறதுக்காக, ஜூலை 26-ம் தேதி காலையில் ஒன்பது மணிக்கு என் மனைவியும் தாத்தாவும் குழந்தையோடு போனாங்க. குழந்தை நல்லா சிரிச்சுக்கிட்டே போனதைப் பார்த்தேன். ஆஸ்பத்திரியில் டாக்டர் யாருமில்லை. நர்ஸூங்க ரெண்டு பேரு குழந்தைக்கு ரெண்டு ஊசிகளைப் போட்டாங்க. ‘தடுப்பூசி போட்டிருக்கோம், காய்ச்சல் வரும். இந்த ஒரு மாத்திரையை நான்காக உடைச்சு ஒவ்வொரு வேளையும் கொடுங்க’னு சொல்லிக் கொடுத்திருக்காங்க. மதியம் ரெண்டு மணிக்கெல்லாம் குழந்தைக்குக் காய்ச்சல் வந்துடுச்சு. சொன்ன மாதிரி அந்த மாத்திரையை உடைச்சு பாலில் கலந்து கொடுத்தும், காய்ச்சல் குறையலை. தலையெல்லாம் சூடாகி, குழந்தை கதறி இருக்கு. என் மனைவி குழந்தையை மடியில்போட்டு தாலாட்டிட்டே இருந்திருக்கா. சாயந்திரம் நாலு மணிக்கு குழந்தை அழுதுட்டே உயிரை விட்டுருச்சு” என்று கண்ணீரை அடக்க முடியாமல் குலுங்கினார் மணி.
அழுது அழுது சோர்ந்திருந்த குழந்தையின் தாய் கெளசல்யா, ”என் குழந்தை இல்லாத வீட்டில் இருக்கவே பிடிக்கலை. பக்கத்துல எந்தக் குழந்தை அழுதாலும் என் குழந்தை அழுது கூப்பிடற மாதிரியே இருக்கு. என் பையன், ‘பாப்பா எங்கே? எப்போ வரும்?’னு கேட்கும்போது மனசு துடியா துடிக்குது. எங்களை மாதிரி வறுமையில் இருக்கிறவங்கதான் கவர்மென்ட் ஆஸ்பத்திருக்குப் போறாங்க.

கவர்மென்ட் ஆஸ்பத்திரியில் சரியா பார்க்க மாட்டோம்னு சொல்லியிருந்தால், கடனை வாங்கியாவது வேற ஆஸ்பத்திரிக்குப் போயிருப்போம். அநியாயமாக என் குழந்தையை ஊசி போட்டு கொன்னுட்டாங்க

. ஊர்ல எல்லோரும் சேர்ந்துபோய், போலீஸ் ஸ்டேஷன்ல கேஸ் கொடுத்தோம். இதுக்கு நடுவுல அந்த ஆஸ்பத்திரியிலிருந்து ஒரு நர்ஸ் வீட்டுக்கு வந்து குழந்தைக்குப் போட்ட தடுப்பூசி அட்டையை வாங்கிட்டு போயிடுச்சு. போலீஸ்காரங்க, ‘

கேஸ் வந்தால், உன் குழந்தையை அறுத்து போஸ்ட் மார்டம் பண்ணித்தான் கொடுப்போம். பிஞ்சு குழந்தையை அறுக்க சம்மதிக்கிறியா?னு கேட்டாங்க. வேணாம்னு கேஸை வாபஸ் வாங்கிட்டோம்’

‘ என்கிறார் வேதனையுடன்.
ஶ்ரீநிதி பிறந்ததும், இரண்டு குழந்தை போதும் என்று குடும்பக் கட்டுப்பாடும் செய்துகொண்டிருக்கிறார் கெளசல்யா. ”டாக்டரும் நர்ஸூங்களும் வீட்டுக்கு வந்து ‘குடும்பக் கட்டுப்பாடு ஆப்ரேஷனை நீக்கிடறோம்’னு சொல்லி இருக்காங்க. ஆனா, செத்த குழந்தை விஷயத்தில் எந்த நியாயமும் கிடைக்கலை. என் குழந்தையை என்கிட்டே இருந்து பிரிச்சுட்டாங்க. ஆஸ்பத்திக்குப் போகும்போதுகூட சிரிச்சுட்டே இருந்த குழந்தை இப்போ எங்களைவிட்டுப் போயிடுச்சு.” என்று தேம்பி தேம்பி அழுகிறார் கெளசல்யா.

கருப்பூர் அரசு மருத்துவமனை டாக்டர்களிடம் கேட்டதற்கு, ”இது விஷயமா நாங்க எந்தத் தகவலையும் பத்திரிகைகளுக்கு சொல்லக் கூடாது. எதுவாக இருந்தாலும், ஹெல்த் அதிகாரி பூங்கொடி மேடமிடம் கேட்டுக்கங்க” என்றார்கள். ஆனால், மாவட்ட ஹெல்த் அதிகாரியான பூங்கொடி எண்ணுக்குப் பலமுறை தொடர்புகொண்டும் பதில் இல்லை.

Vikatan

Leave a Reply

Your email address will not be published.