கடலில் எண்ணெய் கொட்டியது விபத்து அல்ல- ஐஐடி அறிக்கை

சென்னை: சென்னை துறைமுகத்துக்கு அருகே 2 கப்பல்கள் மோதிக் கொண்டதால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு மிக மோசமான (தீவிரமான) விளைவுகளை ஏற்படுத்தும் என்று சென்னை ஐஐடி அறிக்கை தெரிவிக்கிறது.

கடலில் எண்ணெய் கொட்டியது விபத்து அல்ல என்றும், அது சுற்றுச்சூழலுக்கு எதிரான பேரிடர் என்றும் ஐஐடி சென்னை கூறியுள்ளது.

சென்னை துறைமுகத்துக்கு அருகே கடந்த ஜனவரி 28ம் தேதி இரண்டு கப்பல்கள் மோதிக் கொண்டதில் கடலில்  எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதனை அகற்றும் பணிகள் தற்போது நிறைவடைந்துவிட்டாலும், எண்ணெய் கசிவு காரணமாக மிக மோசமான (தீவிரமான) விளைவுகள் ஏற்படும் என்று சம்பவம் நடந்த 3வது நாளே சென்னை ஐஐடி அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீண்ட நாள் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தமிழ்நாடு சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடியின் சுற்றுச் சூழல் மற்றும் நீர் மேலாண்மை பொறியியல் துறையின் பேராசிரியர் டாக்டர் எஸ். மோகன் தாக்கல் செய்த அறிக்கையில், காமராஜர் துறைமுகத்துக்கு அருகே நடந்த இந்த சம்பவம் சுற்றுச்சூழலுக்கு எதிராக நடந்த பேரிடர் என்றும், இதனால், மிகத் தீவிரமாக பின்விளைவுகள் ஏற்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

டாக்ஸிக் பாலி அரோமாடிக் ஹைட்ரோகார்பன் என்ற விஷத் தன்மை கொண்ட எண்ணெய் கடலில், கடற்கரையில், மீன்களில், கடல் ஆழத்தில் கலந்துள்ளது. இது நீண்ட நெடுங்காலத்துக்கு கண்காணிக்கப்பட வேண்டிய மிக முக்கியமான விஷயமாகும்.

கப்பல் எஞ்ஜின்களில் பயன்படுத்தப்பட்ட 6ம் தர எண்ணெயே கடலில் கொட்டப்பட்டிருப்பதாகவும், இதனால், கடற்கரைப் பகுதியில் நீண்ட நெடுங்காலத்துக்கு பின்விளைவுகள் இருந்து கொண்டே இருக்கும் என்றும், இது கடலின் சுற்றுச்சூழலையே சீரழித்துவிடும் அபாயம் இருப்பதகாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீன் உணவை சாப்பிடலாமா?
மீன் உணவை சாப்பிடலாமா என்ற பொதுமக்களின் அச்சத்தைப் போக்க, தமிழக அரசு, மீன் உணவில் எந்த பாதிப்பும் இல்லை என்றும், மீன் உணவில் ஏதேனும் அசாதாரண வாசனை வந்தால் மட்டும் அதனை தவிர்த்துவிடுமாறு கூறியிருந்தது.

ஆனால், சென்னை ஐஐடி அளித்த அறிக்கையில் கூறியிருப்பது வேறு வகையில் உள்ளது. அதாவது, சென்னை கடற்கரையைச் சுற்றியுள்ள பகுதியில் பிடிபடும் மீன்களை பல மாதங்களுக்கு சோதனை செய்ய வேண்டியது அவசியம் என்றும், மீனின் தசைப் பகுதியை பரிசோதித்து அதன் அடிப்படையில் மீன் உணவை சாப்பிட பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

நிலத்தடி நீர் பாதிக்குமா

மேலும், கடலில் இருந்து எடுக்கப்பட்ட எண்ணெய் கழிவுகளை எடுத்துச் சென்றுள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், அதனை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டியதும் அவசியம். ஒருவேளை அதனை ஆழ்துளைக் கிணறுகளில் கொட்டுவதாக இருந்தால், அதன் மூலம் நிலத்தடி நீர் பாதிக்கப்படாதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம் என்றும் கூறியுள்ளது.

-dinamani

Leave a Reply