நாம் நிச்சயம் ‘கபாலி’ ஆகலாம்

கபாலி என்ற வார்த்தைக்கு பின்னால், ‘வைரல்’ என்ற வார்த்தை ஒளிந்தே இருக்கிறது போல. ஒரு மாதமாக இணையத்தை ட்ரெண்டாக்கும் ஒரே விஷயம் கபாலியாக மட்டுமே இருக்கும். இதற்கெல்லாம் காரணம் ரஜினி எனும் ஒரு பிராண்ட்.
ஒருவேளை ரஜினி இல்லாமல் இந்த படத்தை பார்த்தால் இவ்வளவு ட்ரெண்டில் இந்த படம் இருந்திருக்குமா என்பது சந்தேகம்தான். ரஜினி எனும் தனி மனிதனால் தன்னை இவ்வளவு பெரிய பிராண்டாக வளர்த்துக் கொள்ள சில குணங்களை தன் இயல்பாக ஆக்கிக் கொண்டிருப்பார். அந்தக் குணங்களை நாமும் பழகிக் கொண்டால், நம் துறையில் நாம் நிச்சயம் ‘கபாலி’ ஆகலாம்.
ஆனால், அதற்காக சினிமாக்களில் வருவது போல திடீரென ஒரு நபர், ஒரே பாடலில் பிரபலமாகிவிட முடியாது. அதற்கு மிகப் பெரிய செயல்முறை இருக்கிறது. உங்கள் துறையில், உங்களைச் சுற்றியுள்ள சமூகத்தில் உங்களை ஒரு பிரபலமாகக் காட்ட பின்வரும் இந்த விஷயங்கள் கைகொடுக்கும்.

மாற்றம்!

முதலில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் வைத்திருக்கும் டெம்ப்ளேட் விஷயங்களை மாற்றுங்கள். ‘நீங்கள் எதையும் தாமதமாக செய்பவர்’ என்று உங்கள் அலுவலகம் நினைத்தால், அதனை உடைத்து வேகமாக செய்யப் பழகுங்கள். நீங்கள் எப்போதும் சாதாரண உடையில் வருபவர் என்றால்’ கொஞ்சம் ஃபார்மலாக மாறுங்கள். நீங்கள் சில விஷயங்களுக்கு சரிப்பட மாட்டீர்கள் என்று சொல்லி வைத்திருந்தால், அதனை தனியாக செய்தாவது, உங்களை அந்த வேலைக்கு நீங்கள் சரியானவர் என நிரூபியுங்கள். இப்படி எல்லாம் மாறியபின், உங்கள் அலுவலகம் உங்களை உற்றுநோக்கத் துவங்கும். மாற்றம்தான் இந்த செயல்முறையின் முதல் படி.

வேகம்!

நீங்கள் பார்க்கும் வேலையில் உங்களுக்கு ஒரு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும். அதனைச் செய்ய உங்களுக்கு சாதாரணமாக ஆகும் நேரத்தை 10 சதவிகிதமாவது குறைத்து, வேகமாக இலக்கை எட்டுங்கள். உதாரணமாக, உங்கள் நிறுவனம் உங்களிடம் 30 நாட்களில் தரும் இலக்கை 25 நாட்களில் முடித்தால், மீதமுள்ள 5 நாட்களில், உங்கள் உழைப்பு அனைத்தையுமே உங்களை பிராண்டிங் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களுக்கு பிடித்த, நாட்டமுள்ள விஷயங்களை செய்யத் துவங்குங்கள் அது உங்களின் மற்றொரு முகத்தை பிரதிபலிப்பதாக இருக்க வேண்டும்.

தாக்கம்!

உங்களைப் பற்றிய விஷயங்கள் யாருக்கும் தெரியாமல் அப்படியே இருந்தாலோ அல்லது உங்களது துறையை நிர்வகிப்பவருக்கு மட்டும் தெரிந்தாலோ, அது உங்களை நீங்களே ஒரு பிராண்டாக மாற்ற உதவாது. உங்களைச் சுற்றியுள்ள இடங்களில் ஏற்கெனவே பிரபலமாகவோ அல்லது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்ற நிலையிலோ இருப்பவர், உங்களைப் பற்றிய ஒரு நல்ல விஷயத்தை பிரபலப்படுத்துமாறு சில வேலைகளை செய்யுங்கள். அது உங்கள் திறமையைத் தாண்டிய, பாராட்டுப் பெற தகுதியான வேலையாக இருக்க வேண்டியது அவசியம். இவர்களால் உங்கள் பிராண்ட் வேல்யூ உயரும் வகையில் அந்த வேலைகள் அமைந்தால், தானாகவே உங்கள் மீது ஒரு பிரபலம் என்ற இமேஜ் உருவாகும்.

உங்களை மறந்துவிடுங்கள்!

இந்த மாற்றத்துக்கான செயல் முறையில், நான் என்ற வார்த்தையை கிட்டத்தட்ட மறந்துவிடுங்கள். நாம் என்ற‌ வார்த்தையை அடிக்கடி பயன்படுத்துங்கள். உங்கள் வேலை வெற்றி அடைந்தால் அதனை செய்த அனைவருக்கும் இடமளியுங்கள். அதில் பணிபுரிந்த அனைவரையும் தனித்தனியே பாராட்டுங்கள். தோனி எந்த ஒரு வெற்றி பேட்டியிலும் ”நான்” என்ற வார்த்தையை பயன்படுத்தியதே இல்லை.

தொடர்ச்சி!

செல்ஃப் பிராண்டிங் என்பது ஒரு தொடர்ச்சியான செயல் முறை. இதனை ஒரு மாதம் செய்வோம் என்று செய்துவிட்டு, விட்டுவிடக் கூடாது. சில தகுதிகளை ஒருவர் வளர்த்துக் கொள்ள, அவர் அதனைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால்தான் நீங்கள் ‘இன்ஃப்ளுயென்ஸ்’ செய்யும் மனிதனாக மாற முடியும்.

இப்படி செய்தால் உங்களைப் பற்றிய ‘பிராண்ட் இமேஜ்’ தானாகவே உயரும். உங்கள் துறையில் நீங்கள் தான் கபாலி. நீங்கள் சொல்லும் விஷயங்கள் இணையத்தில் வைரலாகிறதோ இல்லையோ, உங்கள் குழுவில் வைரல் ஹிட் அடிக்கும். உங்கள் கருத்துகள் செயல்முறைக்கு வரும் என்பதில் சந்தேகமில்லை.
இப்போது சொல்லுங்கள் நீங்களும் கபாலிதானே! இனிமேல் உங்களை யாராவது பிரபலம் என்றால் கெத்தாக கூறுங்கள்… ‘மகிழ்ச்சி!’

நன்றி விகடன்

Leave a Reply