நாட்டிற்காக தன் தாய்மையை துறந்த பெண்

இந்தியாவின் ஒரே பெண் கமாண்டோ பயிற்சியாளர், தீயணைப்பு வீரர், படத் தயாரிப்பாளர், ஸ்கூபா டைவர் மற்றும் மாடல் போன்ற பன்முகத் திறமைக்குச் சொந்தக்காரர் டாக்டர் சீமாராவ்.

மிகத் தைரியசாலியும், மாறுபட்ட திற மைகளை கொண்ட சீமாராவ், எந்தவித பிரதிபலனுமின்றி கடந்த 20 வருடங்களாக கமாண்டோ படை வீரர்களுக்கு பயிற்சி அளித்துவரும் ஒரே பெண் பயிற்சியாளர்.இதோடு முடியவில்லை

இவரது திறமைகளின் பட்டியல்.

ராணுவ தற்காப்புக் கலையில் 7வது நிலை பிளாக் பெல்ட் வைத்திருப்பவர், போர் துப்பாக்கிச்சூடு பயிற்சியாளர், பாறை ஏற்றத்தில் பதக்கம் வென்றவர் மற்றும் மிஸஸ் இந்தியா, மிஸஸ் வேர்ல்டின் இறுதிப் போட்டியாளர் என பட்டியல் நீள்கிறது.

பலசாலியான சீமா, உலகின் ஜீத் குனேடோ என்னும் தற்காப்புக் கலையில் தேர்ந்தவர்களில் ஒருவரும், அந்தக் கலையை பயிற்றுவிக்கும் அதிகாரத்தையும் பெற்றவர். மரபுவழி மருத்துவம் மற்றும் மேலாண்மை பட்டதாரியான தான் படிப்பிலும் சளைத்த வரில்லை என்பதை நிரூபித்தவர். சுதந்திரப் போராட்ட வீரரான தனது தந்தை ராமாகந்த் சினாரி மற்றும் தனது கணவர் மேஜர் தீபக் ராவ் இருவரும் நாட்டுக்காக சேவை புரிவதை கண்ட சீமா தானும் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில் தேர்ந்தெடுத்ததுதான் இந்த கமாண்டோ பயிற்சியாளர் பணி.

குழந்தை பெற்றுக் கொண்டால் தன்னுடைய கர்ப்ப காலம், தங்களது பணிக்கு இடையூறு ஏற்படும் என்று எண்ணி ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டார்கள் இத்தம்பதியர். பணியின்போது சீமா சந்தித்த விபத்துகளும், காயங்களும் எண்ணி லடங்காதவை. அவையெல்லாம் ஒரு போதும் சீமாவை தடுத்து நிறுத்தவில்லை. தன்னுடைய திறமைகளுக்கு மதிப்புமிக்க பல விருதுகள் பெற்ற போதிலும், தான் எழுதிய பயங்கரவாதத்திற்கு எதிரான ‘என்சைக்ளோபீடியா’விற்காக மலேசிய பிரதம மந்திரியால் கொடுக்கப்பட்ட உலக அமைதிக்கான விருதை இவர் மிகவும் பெருமையாக கருதுகிறார்.

சீமாவின் தன்னலமற்ற சேவையைப் பாராட்டி, இந்திய முப்படை தலைவர்களின் பாராட்டுரைகள் மற்றும் இந்திய உளவுத்துறை அமைச்சரின் 1000 பாராட்டுரைகள் கொண்ட கடிதத்தை ராணு வத்திடமிருந்து சீமா பெற்றது சிறப்பு வாய்ந்தது. நாட்டிற்காக தன் தாய்மையையே விட்டுத்தந்து நமக்கெல்லாம் ஒரு முன்னுதாரண மனுஷியாகிறார் சீமா.

– உஷா நாராயணன்

Leave a Reply