பினாமிகள் பெயரில் ரூ.2,000 கோடிக்கு சொத்து! சிக்குகிறார் அ.தி.மு.க.,வின் சேலம் வி.ஐ.பி.,

Dinamalar

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 2,000 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்களை கைப்பற்றினர். விசாரணையின் முடிவில், அ.தி.மு.க., முக்கிய புள்ளி சிக்குவார் என, தகவல் வெளியாகி உள்ளது.

சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில், டிச., 21, 22ல், வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில், நபார்டு உட்பட, பல்வேறு வங்கிகளில் இருந்து வந்த, புதிய ரூபாய் நோட்டுகள் வரவு வைக்கப்பட்ட வாடிக்கையாளர்களின் பட்டியல் பெறப்பட்டு, அதை வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

சந்தேகம் எழுந்தது

வங்கியின் நிர்வாக பொறுப்பில் உள்ள ஒருவருக்கு நெருக்கமான, இரண்டு சேகோ பேக்டரி நடத்தி வருபவர், அவரின் பங்குதாரர் உட்பட, மூன்று வி.ஐ.பி.,க்களுக்கு, வங்கி பணம் முறைகேடாக பரிமாற்றம் செய்யப்பட்டதில், தொடர்பு இருப்பதாக வருமான வரித்துறையினருக்கு சந்தேகம் எழுந்தது. இதனால், டிச., 22ல் சேகோ பேக்டரி அதிபரின் லாக்கர், பங்குதாரர் ஒருவரின் லாக்கர், சீலநாயக்கன்பட்டியில், 25 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ள ஆளுங்கட்சி பிரமுகரின் லாக்கரை, வருமான வரித்துறையினர் திறந்து சோதனை நடத்தினர்.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: சேலம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு, நபார்டு வங்கியில் இருந்து வழங்கப்பட்ட, புதிய ரூபாய் நோட்டுகளின் சீரியல் வரிசை எண்கள், சேகர் ரெட்டியின் வீட்டில் நடந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட ரூபாய் நோட்டுகளின் வரிசை எண்களும் ஒன்றாக இருந்ததால் தான், சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் சோதனை நடத்தப்பட்டது.

விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’

நாங்களே எதிர்பார்க்காத வகையில், மூன்று பேரின் வங்கி லாக்கர்களில், 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள, 225 பேரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட சொத்து ஆவணங்களை கைப்பற்றி உள்ளோம்.அதன் உரிமையாளர்களுக்கு விளக்கம் கேட்டு, ‘நோட்டீஸ்’ அனுப்பப்பட்டுள்ளது. அந்தவிளக்கத்தின் அடிப்படையில், விசாரணை நடத்த உள்ளோம்.

விசாரணையில், சொத்து வாங்கியதற்கான வருவாய் வரவு விபரங்கள், சொத்தின் உண்மையான உரிமையாளர் குறித்த விபரங்களை தெரிவித்தால் தப்பிக்கலாம். எங்களின் சந்தேக பார்வை, வங்கி நிர்வாகத்தில் பொறுப்பில் இல்லாத, ஆளுங்கட்சி பிரமுகர் மீது தான் உள்ளது.

அதற்கான ஆதாரங்கள் சிக்கும் பட்சத்தில், மேல் நடவடிக்கை இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் புறநகர் மாவட்ட ஜெ., பேரவை செயலர் இளங்கோவன், தற்போது, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடவடிக்கைக்கு முன்பே ‘குஷி’

சேலம் மாவட்ட, அ.தி.மு.க., முக்கிய புள்ளியின் பினாமி சொத்து ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றி இருப்பதால், அவர் கைதாக அதிக வாய்ப்புள்ளதாக, மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது. தேர்தலின் போது, முக்கிய பிரமுகரால் ஓரம் கட்டப்பட்ட, ‘மாஜி’ எம்.எல்.ஏ.,க்கள், நிர்வாகிகள், ‘குஷி’ அடைந்துள்ளனர்.

– தினமலர்

Leave a Reply