பல நூறு கோடி ரூபாயை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று ஜெயலலிதா மரணமடைந்த நாளில் சேகர் ரெட்டியும், ராம மோகன் ராவும் பேசியதாக தகவல்

ஜெ., இறந்த நாளில் பணத்தை பாதுகாக்க சேகர் ரெட்டியிடம் பேசிய ராம மோகன் ராவ் பல நூறு கோடி ரூபாயை பாதுகாப்பாக வைத்துக்கொள்வது எப்படி என்று ஜெயலலிதா மரணமடைந்த நாளில் சேகர் ரெட்டியும், ராம மோகன் ராவும் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. By: Mayura Akilan

சென்னை: ஜெயலலிதாவின் மரண செய்தி கேட்டு உலக தமிழர்களே துக்கத்தில் ஆழ்ந்திருக்க, அவரது முதன்மை செயலாளராக இருந்து தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்ற ராம மோகன் ராவ், தான் பதுக்கி வைத்த பல நூறு கோடி ரூபாயை எப்படி பாதுகாப்பது என்பது பற்றி பேசிக்கொண்டிருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. மணல் குவாரி அதிபர் சேகர் ரெட்டியை சமீபத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுற்றி வளைத்த போது அவரிடம் இருந்த பல நூறு கோடி ரூபாய் , தங்கக் கட்டிகள், சொத்து ஆவணங்கள் கிடைத்தன. அப்போதே அதிகாரிகளுக்கு, சேகர் ரெட்டி பல விஐபிகளுக்கு பினாமியாக இருப்பார் என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து சேகர்ரெட்டியிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தங்கள் பாணியில் விசாரணை நடத்தினர், அந்த விசாரணையின் போது தமிழகத்தில் எந்தெந்த முக்கிய புள்ளிகளுக்கு தாம் உதவியாகவும், பினாமியாகவும் இருக்கும் தகவலை தெரிவித்தார். அப்போதுதான் தலைமை செயலாளரைக இருந்த ராமமோகன ராவுக்கும், சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பது வருமான வரித்துறையினருக்கும் தெரிய வந்தது. சேகர்ரெட்டி வாய் வழியாக சொன்னாலும் அதற்கான ஆதாரம் வேண்டும் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருந்தனர். ஆதாரம் இருந்தால்தான் ராம மோகன் ராவை நெருங்க முடியும், அவர் வீடுகளில் சோதனை நடத்த முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆதாரங்கள் சேகரிப்பு

வருமான வரித்துறை அதிகாரிகள் ராமமோகன் ராவ் முறைகேடு செய்ததற்கான ஆதாரங்களைத் தேடினர். பல்வேறு கோணங்களில், பல்வேறு துறைகளில் இதற்காக ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. அப்போது சேகர்ரெட்டி நடத்தி வரும் மணல் குவாரிகளில் தலைமை செயலாளர் ராமமோகன் ராவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

மணல் குவாரிகளுக்கு சலுகை

தமிழ்நாட்டில் மணல் குவாரிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கும் வி‌ஷயத்தில் சலுகைகள் காட்டப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இது பற்றி மணல் குவாரிகளுக்கு உரிய அனுமதி வழங்கும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது ராமமோகன் ராவுக்கும்,சேகர்ரெட்டிக்கும் உள்ள தொழில் ரீதியான நட்பை சுற்றுச்சூழல் ஆணைய அதிகாரிகள் உறுதிப்படுத்தினார்கள். அதற்கான ஆவணங்களையும் அவர்கள் வருமான வரித்துறையினரிடம் கொடுத்ததாக தெரிகிறது.

செல்போனில் பேச்சு

வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய மற்றொரு விசாரணையில் ராமமோகன் ராவும், சேகர்ரெட்டியும் செல்போனில் நீண்ட நேரம் பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. ஜெயலலிதா மரணம் அடைந்த தினத்தன்று அவர்கள் இருவரும் போனில் பேசியுள்ளனர்.

பணத்தை பதுக்க பேச்சு

அந்த போன் உரையாடலை வருமான வரித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், பல நூறு கோடி ரூபாயை எப்படி பாதுகாப்பாக வைத்துக் கொள்வது? என்று ராம மோகனராவும், சேகர் ரெட்டியும் பேசியதும் தெரியவந்துள்ளது. ஜெயலலிதா மரணம் அடைந்து பரபரப்பான சூழ்நிலை உருவான நேரத்தில் தலைமை செயலாளர் பணத்தை பதுக்குவது பற்றி பேசி இருப்பதை கேட்டதும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

உறுதி செய்த அதிகாரிகள்

டிசம்பர் 6ம் தேதி ஜெயலலிதாவிற்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, சேகர்ரெட்டியிடம் பல தடவை ராமமோகனராவ் பேசி இருப்பது வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதை ஆய்வு செய்த போதுதான் அவர்களது முறைகேடு உறுதியானது. சேகர் ரெட்டியின் போனை தொடர்ந்து கண்காணித்த அதிகாரிகள், அதன் மூலம் ராமமோகன் ராவை மடக்கினர்.

அதிரடி ரெய்டு

ராமமோகன்ராவ் வீட்டில் எப்போது சோதனை நடத்துவது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் திட்டமிட்டபடி இருந்தனர். புதன்கிழமையன்று அவர்கள் வீட்டிற்குள் நுழைந்து அத்தனையையும் அள்ளினர். அதேபோல தலைமை செயலகத்திற்குள், ராம மோகன் ராவின் அறையில் இருந்து முக்கிய ஆவணங்களை அள்ளிக்கொண்டு சென்றுள்ளனர். என்னென்ன பூதம் கிளம்ப போகிறதோ?

oneindia

Leave a Reply