சேகர் ரெட்டியின் வலதுகரமான சர்வேயர் ரத்னம், கோடீஸ்வரரானது இப்படித்தான்!

சேகர் ரெட்டியின் வலதுகரமாக இருந்த திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சர்வேயர் ரத்னம், எப்படி கோடீஸ்வரரானார் என்ற திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தொழிலதிபர் சேகர் ரெட்டி கைது படலத்துக்குப்பிறகு அவரது கூட்டாளிகளை சி.பி.ஐ கைது செய்து வருகிறது. அதில் சேகர் ரெட்டியின் வலதுகரமாக இருந்த திண்டுக்கல் மாவட்டம் சர்வேயர் ரத்னமும் ஒருவர். சாதாரண சர்வேயராக இருந்த ரத்னம், இன்று பல கோடி ரூபாய் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர் என்று சொல்லப்படுகிறது.

யார் இந்த சர்வேயர் ரத்னம்?

திண்டுக்கல் மாவட்டம், எம்.எஸ்.பி ரவுண்ட் ரோட்டை சேர்ந்தவர் ரத்னம். இவர் அரசு சர்வேயராக பணியாற்றினார். 2000ம் ஆண்டில் அவர், வேலையை ராஜினாமா செய்து விட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் கால்பதித்தார். அப்போது வில்லங்க சொத்துக்களை விரும்பி வாங்கி அதில் அபார வளர்ச்சி அடைந்ததாகச் சொல்கிறார்கள். இந்த காலகட்டத்தில் மணல் பிசினஸில் கோலோச்சிய புதுக்கோட்டை ராமச்சந்திரனுடன், ரத்னத்துக்கு தொடர்பு கிடைத்தது. இருவரும் சேர்ந்து மணல் பிசினஸில் களமிறங்கினர். அந்த சமயத்தில் மணல் பிசினஸில் கொடிகட்டி பறந்த இருவரை பின்னுக்குத் தள்ளியது இந்த அண்ட் கோ. அரசியலும், அதிகார பலமும் தங்களுக்கு வேண்டும் என்று கருதியபோது திண்டுக்கல்லைச் சேர்ந்த தி.மு.க முன்னாள் மூத்த அமைச்சர் ஒருவரின் நட்பு கிடைத்தது. அந்த நட்பு மூலம் பிசினஸை விரிவுப்படுத்தினர்.

சேகர் ரெட்டியின் நட்பு!

இந்த சூழ்நிலையில் தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நட்பு கிடைக்க தரணி குழுமம் என்ற பெயரில் அனைத்து பிசினஸையும் தொடங்கினர். அமைச்சரின் ஆசியோடு பிசினஸ் கொடிகட்டி பறந்தது. லாட்டரி தொழிலில் கொடி கட்டி பறந்த ஒருவரும் இந்த
அன்-கோவுடன் சேர்ந்து கொண்டார். லாட்டரி நபருக்கு திண்டுக்கல்லில் கல்லூரி ஒன்றை விலைக்கு முடித்துக் கொடுத்தது இந்த
அன்-கோ. வேலூர் மாவட்டத்தில் உள்ள எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஒருவரையும் இந்த அன்-கோ தங்களுடைய பிசினஸில் சேர்த்துக் கொண்டது. இவ்வாறு நான்கு திசையிலும் பிசினஸ் வழியாக சர்வேயர் ரத்னத்துக்கு பணம் மழை கொட்டத் தொடங்கியது. பொதுப்பணித்துறை ஒப்பந்தங்களை சேகர் ரெட்டி கவனித்துக் கொள்ள மணல் பிசினஸை ராமசந்திரனும், ரத்னமும் பார்த்துக் கொண்டனர்.

4 ஆடி கார்கள், பங்களா வீடுகள்

இதனால் சாதாரண நபராக இருந்த சர்வேயர் ரத்னம், பல கோடிகளுக்கு அதிபதியானார். ஆடம்பர பங்களா வீடு, வணிக வளாகங்களை சென்னை, புதுச்சேரி, திண்டுக்கல் ஆகிய இடங்களில் வாங்கினார். இவரிடம் மட்டுமே 4 ஆடி கார்கள் இருப்பதாகவும், அவரது மகனுக்கு மட்டுமே 12 லட்சம் மதிப்பிலான பைக் வாங்கி கொடுத்திருப்பதாகவும் விவரம் தெரிந்தவர்கள் சொல்கின்றனர். இந்த சமயத்தில் சேகர் ரெட்டியிடம் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் ரத்னம், ராமசந்திரன் ஆகியோரின் ஜாதகங்களும் வருமான வரித்துறையினருக்கு கிடைத்தது. உடனடியாக களத்தில் இறங்கிய வருமான வரித்துறை, ரத்னத்தை விசாரணைக்கு அழைத்து 100 கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்தது. அதிகாரிகளின் கிடுக்கிப்பிடி கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் அவர் திணறினார். சேகர் ரெட்டியை கைது செய்த பிறகு அவரது கூட்டாளிகள் ராமசந்திரன், ரத்னத்தை கைது செய்தது சி.பி.ஐ.

ரத்னம், ராமசந்திரன் ஆகியோரிடம் தொடர்பில் இருந்தவர்கள் இப்போது கலக்கத்தில் இருக்கின்றனர். அடுத்து அவர்களது வீடுகளில் ரெய்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. புற்றீசல் போல வெளிவரும் இந்த சேகர் ரெட்டியின் விவகாரம் நிச்சயம் தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது!

– VIKATAN

Leave a Reply