Motivation

சமீபத்தில் நடந்து முடிந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மின்டன்  ஒற்றையர் பிரிவில் வெள்ளி வென்று சரித்திர சாதனை படைத்திருந்தார் பி.வி சிந்து. அதன் பின்னர் சிந்துவின் பயிற்சியாளர் கொடுத்த ஒரு பேட்டி வைரல் ஹிட் அடித்தது. சிந்துவிடம் இனி அவரது  மொபைல் ஒப்படைத்துவிடுவேன், ஐஸ்க்ரீமும் சாப்பிட அனுமதி உண்டு  எனச்சொல்லியிருந்தார். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கும், மொபைல், ஐஸ்க்ரீமுக்கும் சம்பந்தம் இருக்கிறது. அது தான் கவனச்சிதறல். 
நாம் ஒரு இலக்கை நோக்கி பயணிக்கும்போது நிச்சயம் நம்மை நிலைகுலைய வைக்கும் விஷயங்கள் நடக்கும். அந்த விஷயங்களை ஒருவன் எப்படி கையாளுகிறார் என்பதை பொறுத்ததுதான் வெற்றி இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் கவனச்சிதறல் என்பது வெவ்வேறாக இருக்கும். எனினும் பொதுவாக தற்போதைய தலைமுறையை  பொறுத்தவரையில் கவனச்சிதறல்களை தடுக்க  மூன்று  விஷயங்களை செய்ய வேண்டும் என்கிறார்கள் மனோத்தத்துவ நிபுணர்கள். 
Advertisement

1. கேட்ஜெட் கவனம்  :- 
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் முதல் அத்தனை  பேரும்  மொபைலுக்கும், சமூக வலைத்தளங்களுக்கும் தான் அடிமையாகிக் கிடக்கிறார்கள். மொபைலை பயன்படுத்தாமல் இருப்பதோ, சமூக வலைத்தளங்களில் அக்கவுண்ட்டை மூடிவிடுவதோ இதற்கு தீர்வு கிடையாது.  எந்த நேரத்தில் எதைச்செய்ய வேண்டும் என தெளிவு இருந்தால் போதுமானது.  காலையில் எழுந்தவுடன் நீங்கள் மொபைலில் தான் கண்விழிக்கிறீர்களா? வாட்ஸப், பேஸ்புக்கில் என்ன நோட்டிபிக்கேஷன் வந்திருக்கிறது என பார்த்துவிட்டுத்தான் படுக்கையை விட்டு எழுகிறீர்களா? நீங்கள் கொஞ்சம் அபாயக்கட்டத்தில் தான் இருக்கிறீர்கள். உங்களது வேலைக்கு  அவசியமின்றி தகவல் தொழில்நுட்பத்தை எல்லை மீறி பயன்படுத்துவது சரியல்ல. நீங்கள்  மொபைல், சமூக வலைத்தளங்கள் போன்றவற்றுக்கு அடிமையாகி இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள்.  கேட்ஜெட் சாதனங்களை ஒட்டிக்கொண்டே வாழாமல் இயல்பாக இருக்க பழகுங்கள். மொபைல் மற்றும் சமூக வலைத்தளங்களை அளவாய் பயன்படுத்தும்போது உங்களது பெர்பார்மென்ஸ் உயர்த்துவதை நீங்கள் கண் கூட பார்க்க முடியும். தினமும் எக்கச்சக்க நேரம் உங்களுக்கு கிடைப்பதை நீங்களே உணர முடியும். கருவிகளுடன் உறவாடுவதை விட உங்களுக்கு பிடித்த உறவுகளுடன் நேரம் செலவழியுங்கள்.
உங்களுக்கு ஒரு சவால். 
இன்றில் இருந்து நீங்கள்  தினமும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் தொடர்ந்து பத்து மணி நேரமாவது மொபைலையும், சமூக வலைத்தளங்களையும் பார்ப்பதில்லை என முடிவு செய்துவிடுங்கள். படுக்கைக்கு செல்லும் ஒரு மணி நேரம் முன்னர் மொபைலில் நோண்டுவதை நிறுத்தி விடுங்கள். பின்னர் காலையில் எழுந்து காலை கடன்களை முடிக்கும் வரை அவசர, அவசியமின்றி  மொபைலையே பார்க்காதீர்கள்.
 
2. உணவு :-
உணவுக்கும் மூளைக்கும் நிறைய தொடர்பு உண்டு.  குறைவாகச் சாப்பிட்டாலும் பசி இருக்கும், நிறைவாகச் சாப்பிட்டாலும் வயிறு முழுக்க உணவு இருக்கும். எனவே எப்போதும் அளவாகச் சாப்பிடுங்கள். வார இறுதி நாட்களில், ஓய்வு நேரங்களில் விருப்பம் போல சாப்பிடுங்கள். அஜீரணம் ஏற்படுத்தும், உணவுப் பொருள்களை சாப்பிடுவதை முடிந்தவரை தவிருங்கள். அலர்ஜி ஏற்படுத்தும் உணவுகளை தொடாதீர்கள். உங்களது உடலுக்கு, வயிறுக்கு உபாதை ஏற்படுத்தாமல் எந்த உணவு செரிக்குமோ அதைச் சாப்பிடுங்கள். நாம் சரியாகச்  சாப்பிடாமல் போனாலோ, அதிகமாகச் சாப்பிட்டாலோ நாம் எந்தவொரு வேலையையும் ஒழுங்காகச் செய்ய முடியாது. இதெல்லாம் சின்ன விஷயம் என நினைத்து கடந்துவிடாதீர்கள். 
 
Advertisement

3. உறக்கம் : –
அளவுக்கு மீறிய உறக்கம், அளவுக்கு குறைவான உறக்கம், முறையற்ற நேரத்தில் உறக்கம் என எல்லாமே தவறு தான். இயற்கையோடு இயைந்தது நமது உடல். இயற்கைக்கு மாறாக நாம் உறங்கும்போது நமது உடலில் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படும். உடலை போட்டு படுத்தி எடுப்பதை தவிருங்கள்.  இரவு தான் வேலை செய்யப்பிடிக்கும் என்றால்  தவறில்லை, ஆனால் அதற்கு தகுந்தார் போல  மருத்துவர்களை கலந்தாலோசித்து உறங்கும் முறை,  வாழ்வியல் முறை எல்லாவற்றையும் மாற்றிக்கொள்வது அவசியம். ஏ.ஆர்.ரஹ்மான் இரவு நேரத்தில் கம்போஸிங் செய்வார் என்பதால் வலுக்கட்டாயமாக உங்கள் உடலில் உள்ள சர்காடியன் ரிதத்தை மாற்ற முயற்சிக்க வேண்டாம். பொதுவாக  இரவு 9-11 மணிக்குள் உறங்கி காலை 5-7 மணிக்குள் எழுந்திருப்பது நல்லது. உறக்கம் சரியாக இல்லையெனில் உடலில் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல விஷயங்கள் பாதிக்கப்படும், இதனால் மூளை செயல்பாட்டின் திறனும் குறையும். இதனால் எந்தவொரு விஷயத்திலும் முழு கவனத்தை செலுத்த முடியாது. எனவே ஓயாமல் உழைப்பதை விட நன்றாக சாப்பிட்டு, நன்றாக ஓய்வெடுத்து உழையுங்கள். வெற்றிகளை அனுபவியுங்கள்.  
 
– பு.விவேக் ஆனந்த்

Leave a Reply