ஐந்திணைப் படை

மரம் வளர்க்க கரம் நீட்டும் இளைஞர்களின் ஐந்திணைப் படை

உங்களிடம் நேரம் இருக்க வேண்டுமென்று அவசியமில்லை; இதயம் இருந்தால் போதும்.

ஐந்திணை என்ற அமைப்பு, தமிழக வனத்துறையுடன் இணைந்து ‘மரக்கன்றுகள் நடும் திட்ட’த்தின் கீழ் கிட்டத்தட்ட 1500 மரக்கன்றுகளை வெற்றிகரமாக நட்டிருக்கிறது.

சென்னை தாம்பரத்துக்கு அருகில், படப்பை சிறுவாஞ்சூரில் 350-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், நேற்று ஆர்வத்துடன் மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் இலுப்பை, கருவேலம், மருதம், வில்வம், ஆலம், அரசமரம், நாவல் மரம், புங்கை, வேம்பு மற்றும் பனை உள்ளிட்ட மரங்களின் கன்றுகள் நடப்பட்டன.

சென்னை மலையேற்றக் குழுவின் (CTC), ஓர் அங்கம் ஐந்திணை. இயற்கை பாதுகாப்புக்கான அமைப்பான ஐந்திணை மூலம், மக்களிடம் பசுமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மரம் நடுவிழாக்கள் நடத்தப்படுகின்றன. ஐந்திணை அமைப்பின் செயல்பாடுகள் குறித்து, அமைப்பின் ஒருங்கிணப்பாளர்களில் ஒருவரான சிவா நம்மிடம் பேசியது:

சென்னை மலையேற்றக் குழு, முழுக்க முழுக்க இயற்கை நேசிப்பாளர்களுக்காகத் தொடங்கப்பட்டது. பெல்ஜியத்தில் பிறந்து சென்னையில் குடியேறிவிட்ட பீட்டர் வேன் கெயித் என்பவரால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு இது. ஏழு வருடங்களுக்கு முன்னால் தொடங்கப்பட்ட இக்குழுவில் பதிவு செய்யப்பட்ட 25,000 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

சிடிசி நிகழ்வுகள்

சென்னை மலையேற்றக் குழுவின் மூலம் பறவை நோக்குதல், புகைப்படக்கலை, பாம்புகளுடன் பயணம், உள்ளிட்ட நிகழ்வுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்க சென்னை மலையேற்றக் குழுவின் வலைத்தளத்தில் இருக்கும் படிவத்தைப் பூர்த்தி செய்து மெயில் அனுப்ப வேண்டும்.

இதன் மூலம் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியின் விவரங்கள் நமக்கு அனுப்படுகின்றது. ஆர்வம் கொண்டவர்கள் தங்களுக்கு வசதிப்படும் நாட்களில், சென்னை மலையேற்றக் குழுவுடன் இணைந்துகொள்கின்றனர். சிடிசி மலையேற்றத்துக்காக, சென்னையின் அறியப்படாத பல பக்கங்களுக்கு, ஆர்வமுள்ளவர்களை அழைத்துச் செல்கிறது.

உடல் நலனைப் பேணும் பொருட்டு, வார இறுதிகளில் முத்தரப்பு போட்டிகளும் நடத்தப்படுகின்றன. நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஓட்டப்பந்தயம் முதலியவை நடத்தப்பட்டு, விருதுகள் அளிக்கப்படுகின்றன. அத்துடன் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த எச்சரிக்கையும்,மரங்களின் தேவை குறித்த விழிப்புணர்வும் ஊட்டப்படுகிறது.

லாப நோக்கமற்று செயல்படும் இந்த அமைப்பில் நீண்ட பயணங்களுக்கான செலவு உறுப்பினர்களிடம் திரட்டப்படும். போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகள் போக மீதமிருக்கும் பணம், நிகழ்ச்சியின் முடிவில் அங்கேயே சமமாகப் பிரிக்கப்பட்டு, பகிர்ந்தளிக்கப்படும்.

ஐந்திணை அமைப்பு

சென்னை மலையேற்றக் குழுவின் ஓர் அங்கமான ஐந்திணை 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. மரம் வளர்ப்பே ஐந்திணையின் முக்கிய இலக்காக இருக்கிறது. மரம் நடுதலோடு மட்டுமல்லாமல், அதை முறையாகப் பராமரிக்கவும் செய்கிறோம். மழைக் காலங்களில் நட்ட மரக்கன்றுகளைச் சுற்றி வேலியிடுவது, கோடைக்காலங்களில் ஏற்படும் தண்ணீர்ப் பிரச்சனைகளை சமாளிப்பது உள்ளிட்ட பணிகளும் இதில் அடக்கம்.

ஒரு முறை தண்ணீர்ப்பற்றாக்குறையால் குறிப்பிட்ட பகுதியில் நட்ட கன்றுகள் அனைத்தும் காய்ந்துவிடும் தறுவாயில் இருந்தன. அப்போது தண்ணீர்த்தொட்டியில் வாடகைக்கு தண்ணீர் வாங்கி நிரப்பி எடுத்துச் சென்று, தண்ணீர் விட்டோம். தண்ணீர் ஆவியாகி விடாமல் இருக்க தேங்காய் நார் கழிவுகளையும் இட்டோம். இப்போது அவை வளர்ந்த நிலையில் செழித்து நிற்கின்றன.

இதுவரைக்கும் சுமார் 6,000 மரக்கன்றுகளை நட்டிருக்கிறோம். இதில் 70 சதவீத மரக்கன்றுகள் உயிர் பெற்று வளர்ந்துவிட்டன. கடந்த வருடம், தமிழக வனத்துறையோடு இணைந்து, தென்னேரியில் 1100 மரக்கன்றுகளை நட்டோம், 200-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இதில் கலந்துகொண்டனர். வருடத்துக்குப் பதினைந்து முறையாவது, நட்ட மரக்கன்றுகளின் நிலையை நேரில் சென்று பார்க்கிறோம். மரம் நடுவதை விட முக்கியமானது அதை முறையாகப் பராமரிப்பது. அதில் தவறிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறோம்.

ஐந்திணையின் குழுவில் மருத்துவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள் ஆகியோர் பொறுப்புப் பணிகளில் உள்ளனர். இதன் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், மென்பொருள் ஊழியர்களே. தங்களின் அலுவலக பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்கவும், இயற்கையின் மீதான அக்கறையாலும், தங்களின் விடுமுறை நாட்களை ஐந்திணை அமைப்போடேயே கழிக்கின்றனர். கல்லூரி மாணவர்களும், மற்ற அலுவலக ஊழியர்களும் பசுமையைப் பேணுவதில் ஆர்வத்துடன் இருக்கின்றனர். தமிழ்நாடு தவிர்த்து, ஆந்திரா, கேரளா, கர்நாடக மக்களும் எங்களோடு இணைந்து செயல்படுகின்றனர்.

இத்துடன், இயற்கை விளைநிலங்களைச் சென்று பார்ப்பது, மொட்டை மாடித் தோட்டம், ஏரி, குளங்களைச் சுத்தப்படுவது ஆகிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறோம். கழிவுகள் நிறைந்திருந்த பெரும்பாக்கம் ஏரியொன்று சமீபத்தில் புனரமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு மரம் நடும் நிகழ்ச்சி, திரிசூலம் மலைப்பகுதியில் மரம் நடும் விழா உள்ளிட்ட நிகழ்வுகள் வரும் வார இறுதிகளில் நடக்க இருக்கின்றன.

-The Hindu

 

Leave a Reply