​வெயிலும் கால்நடைகளும்

கால்நடைகள் வெயிலின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதைக் ஒருசிலஅறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

1.நிழலான இடங்களைத் தேடி அலைந்து நின்று கொள்ளும்.

2. மூச்சுவிடுதல் அதிகமாகும், அதிகமாக மூச்சிறைக்கும்.

3. அளவுக்கு அதிகமான நீர் உட்கொள்ளும்

4. பசியின்மை ஏற்பட்டு உணவு உட்கொள்ளுதல் குறையும்.

5. மேய்யச்சலின்போது சோம்பல் ஏற்பட்டு கால்நடைகள் மந்தமாக அலையும்.

6. மாடுகளில் உமிழ்நீரானது அதிகரிக்கும்.

7. எப்போதும் சிறிய நடுக்கத்துடன் காணப்படும்.

8. வெயிலின் தாக்கத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்டால் உணர்வு இழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு.
பராமரிக்கும் முறைகள்:
கால்நடைகளுக்குக் கோடையில் அதிகமான காற்றோட்டமுள்ள இடங்கள் அவசியம். கால்நடைகள் இருக்கும் கொட்டகைக்குள் சூரிய ஒளிபடாதவறும் இடம் அமைய வேண்டும். கால்நடை கொட்டகை அமைக்கும்போது அகலம் குறைவாக இருக்க வேண்டும். அதாவது 20 முதல் 25 அடி வரை அகலம் இருக்கலாம். மேலும் கொட்டகையின் உயரத்தை அதிகப்படுத்த வேண்டும். கூரையின் நடுவில் 10-15 அடி உயரமாகவும், பக்கவாட்டில் 5-8 அடி வரை உரமாகவும் அமைக்க வேண்டும். கூரையின் இருபக்கமும் சாய்வை சற்று நீளமாக அமைக்க வேண்டும். இவ்வாறு கொட்டகை அமைப்பதால் வெயிலின் தாக்கம் குறையும். 
கொட்டகையின் கூரையை தென்னங்கீற்று, பனை ஓலை, வைக்கோல் போன்றவற்றை கொண்டு அமைத்தால் கொட்டகையின் உள்ளே வெப்பம் வெகுவாக குறையும். ஆஸ்பெட்டாஸ், அலுமினியம் ஆகியவற்றால் கொட்டகை அமைக்கப்பட்டால் வெயில் நேரங்களில் கொட்டகையின் மேற்புறம் தண்ணீர் பீய்ச்சி அடிப்பதன் மூலம் வெப்பத்தைக் குறைக்கலாம். அல்லது ஆஸ்பெட்டாஸ் கூரையின் மேற்புறம் நனைந்த ஓலை, வைக்கோல் ஆகியவற்றைப் பரப்பி அதன் மேல் தண்ணீர் ஊற்றினால் வெயிலின் தாக்கத்தை மிகவும் கட்டுப்படுத்தலாம்.
வெயில் நேரத்தில் மரநிழல் உள்ள இடங்களில் கால்நடைகளை கட்டலாம். வெயில் மிகவும் அதிகமாக இருக்கும்போது கால்நடைகளைக் குளிப்பாட்ட வேண்டும். கொட்டகையின்மீது நீர்த்தெளிப்பான் அமைப்பது மூலமும் வெயிலின் தாக்கத்தை குறைக்கலாம். எருமை மற்றும் பன்றிகள் வெயிலின் தாக்கத்தை குறைத்துக் கொள்ள குளிர்ச்சியான இடங்களில் படுத்தோ அல்லது நீர் நிலைகளில் தனது உடலை நனைத்தோ உஷ்ணத்தை தணித்துக் கொள்ளும். கூண்டுகளில் வளர்க்கப்படும் கோழிகள் கோடையில் அதிகமாகப் பாதிக்கப்படும். இதற்கும் மேற்சொன்னபடி கொட்டகை உயரமாகவும், தென்னை கீற்றுகளிலும், கூண்டினை சுற்றிலும் ஈரச் சாக்குகள் கட்டப்பட்டிருக்க வேண்டும். கோடைக்காலத்தில் கோழிகளுக்கு கழிச்சல் நோய் வர வாய்ப்புகள் அதிகம். 
அதனால், தடுப்பூசியை முன்னரே போட்டுக் கொள்ள வேண்டும். கோழிகளுக்குக் கொடுக்கும் தண்ணீர் குளிர்ச்சியாக இருக்க வேண்டும். வெயில் நேரத்தில் கோழிகள் அதிக தீவனம் எடுத்தால் ஜீரணிக்க அதிக வெப்ப ஆற்றல் உடலுக்குள் ஏற்படுகிறது. வெப்பத்தைத் தவிர்க்க, எல்லா உணவுகளையும் காலையில் கொடுக்காமல், காலை, மாலை என இரு வேளைகளாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். தண்ணீரையும் அதிகமான அளவு கொடுக்க வேண்டும். ஒரு நாளைக்கு நான்கு முறையாவது கோழிகளுக்கு தண்ணீர் வைக்க  வேண்டும்.
கோழிகள், சுணக்கமாகவோ அல்லது எப்போதும் உறங்கிய நிலையிலேயே காணப்பட்டால் நோய் எதிர்ப்பு மருந்துகளை ஐந்து நாட்கள் தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். செம்மறியாடுகளுக்கு அவற்றின் கம்பளத்தோல் வெயிலிலிருந்து உண்டாகும் புண்களிலிருந்து பாதுகாக்கிறது. வெயில் காலங்களில் செம்மறியாடுகளுக்கு முடிவெட்டுவதைத் தவிர்க்க வேண்டும். கால்நடைகளின் கொட்டகையை சுற்றிலும் புற்கள், மரங்கள் அதாவது சுற்றிலும் பசுமையாக இருந்தால் வெயிலின் தாக்கத்திலிருந்து கால்நடைகள் தப்பிக்கலாம்.
அத்துடன், ஒரு மாட்டுக்கு தினமும் இரண்டு மொந்தன் வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் எளிதாகக் கிடைக்கக்கூடிய பெருநெல்லிக்காய் வற்றலை தண்ணீரில் ஊற வைத்து, அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் தீவனத்தோடு கலந்து கொடுக்க வேண்டும். வெந்தயத்தை தண்ணீரில் ஒருநாள் இரவு ஊற வைத்து, மறுநாள் காலையில் அரைத்து, ஒரு மாட்டுக்கு 50 கிராம் வீதம் கொடுக்க வேண்டும். தினமும் இதுபோல் ஒருவேளை கொடுக்க வேண்டும். மொந்தன் வாழைப்பழம், நெல்லி முல்லி, வெந்தயம் இவை மூன்றுமே மாடுகளின் உடல் உஷ்ணத்தைத் தணிக்கக்கூடிய அற்புத மருந்துகள்

நம் நாட்டுக் கால்நடைகள் வெயில் காலங்களில் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வெளிநாட்டு இன கால்நடைகள் வெயிலைத் தாக்கு பிடிக்காது. பொதுவாக ஹால்ஸ்டியன் பிரிசியன் கலப்பினப் பசுக்கள், ஜெர்சி பசுக்கள் வெயிலால் அதிகமாகப் பாதிப்படையும். கோடையில் கால்நடைகளுக்கு உணவளிக்கும்போது அதிக எரிசக்தியும், புரதச்சத்தும் உள்ள உணவாக அளிக்க வேண்டும். ஏனெனில் வெயில் காலங்களில் உணவு உட்கொள்ளுதல் குறைந்து, நீர் அருந்துவது அதிகமாகும். உணவில் உள்ள சத்துக்கள் வளர்ச்சிக்கும், உற்பத்திக்கும் ஏற்றவாறு இருத்தல் வேண்டும். மேய்ச்சலுக்குச் செல்லும் கால்நடைகள் விடியற்காலையிலும், மாலையிலும் மேய்ச்சலுக்குச் செல்வது நல்லது. மதிய வேளைகளில் நிழலான இடங்களில் அவற்றை வைத்திருக்க வேண்டும். 
கால்நடைகளுக்கு எப்போதும் சுத்தமான நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒட்டுண்ணிகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்பட்ட கால்நடைகளை மற்ற கால்நடைகளிலிருந்து தனியாகப் பிரித்து அவற்றில் அதிக கவனம் செலுத்த வேண்டும். நல்ல சத்தான உணவு, மருத்துவம் ஆகியவற்றோடு வெப்பம் அதிகம் பாதிக்காமல் பராமரிக்க வேண்டும். கோடையில் கால்நடைகளை கவனமாகப் பராமரித்து பயனடைய வேண்டும்.

Leave a Reply