​மழை வேண்டாம் தண்ணீர் கொடு.

​மழை வேண்டாம் தண்ணீர் கொடு..

=================


காலடியில் தேங்கி நின்றது 

     சாக்கடை என்று ஒதுங்கினோம்.

பாலம் மேலாக கடந்தது 

     பேரிடர் என்று வருந்தினோம்.

மாடியில் தேடி வந்து கொட்டியது,

ஓடிப் போ என தெருவிற்கு விரட்டினோம்.

கூவத்தை பெருக்கெடுக்கச் செய்தது

பாவம் மக்கள் என்று சபித்தோம்.

தவளை நண்டு பாம்பும் கூட

கவலை கொண்டு வெறுக்க வில்லை,

மழையில் தன் வாழ்விடத்தை

தொலைத்த போது.

தவறைக் கொண்டு வாழும் நாமோ

கவனம் இன்றி மழையை

விவரம் அறிந்தும்

விரயம் செய்கின்றோம்.
குடை வந்து கையில் நின்றதால் 

நடைமுறை ஆனதா மழையிடம் வெறுப்பு?

மழையையும் நம்மையும் பிரிக்க

இடையில் குடை வந்ததாலா

தடைபட்டது அன்பு?

சாராய போதையில் மிதக்கும் நமக்கு

ஆராய கூட மிச்ச  நேரமில்லை.
நெஞ்சை நிமிர்த்தி மேகத்தை முட்டி

பஞ்சம் தீர்க்க நினைத்த மலைகள்,

நொந்து கொண்டன

வந்த மழையை வீணடித்த போது.

தலை குளித்து குளிர்ந்த மரங்கள் நம்

நிலை கண்டு வெட்கப்பட்டன,

அலைக்கழித்து நீரைக்

கொலைக் களத்தில் கொன்ற போது.
இன்று..

உபரி நீர் இருந்தால் திறந்து

உபகாரம் செய்வாயா என

உதவி கேட்டு நிற்கின்றோம்.

பதவி வகித்தவர் நல்லதே செய்யாமல்

தவறி வழி நடந்த காரணத்தால்

இடரி சேற்றில் இருக்கின்றோம்.

மொழி மாறிய நிலமானதால் நீரை

வழி மறிக்க காரணம் சுலபமானது.

எல்லையதை மொழியால் வரைந்ததால்

இல்லை என்று ஏய்ப்பதற்கு வாய்ப்பானது.
அணை திறந்தால்

அன்பு மிகுதியால் நம்மை

மழை நீர் தேடி புரண்டு வரும்.

நாம் தேவைக்கு எடுப்போம் ஒரு குடம்.

அது போக நாம் வழிக் காட்டும் இடம்

கடலாகத் தானே இருக்கும்.
நீர்ப் பிள்ளையை

அள்ளி அணைத்து 

சேர்க்க நினைத்த

குளம் ஏரியின் கைகள்

முடம் ஆக்கப் பட்டன.

ஆற்றுக் குமரி மணல் திருட்டால் கற்பை,

தோற்றுக் குமுறிக் கொண்டிருக்கிறாள்.

குளக் குழந்தைக்கு ஊட்ட நீர்ப் பாலின்றி

புலம்புகிறாள் மண் தேவதை.

ஏரிப் பிள்ளை பாரி வள்ளல்

வாரித் தர நீரில்லாமல் முகம்

மாறிப் போயிருக்கிறான்.

அம்மாவாய் தாகம் தீர்த்த

கம்மாய் சும்மா வறண்டு போனாள்.

கால்வாய் நண்பன் நீர் சுமந்தும் 

கால்வாசியே உயிர் தப்பியுள்ளான்.
நல்ல திட்டம் மழை நீர் சேகரிப்பு

உள்ளம் ஏற்காமல் செய்தோம் அவமதிப்பு,

குள்ள நரிகளால் இன்றோ அபகரிப்பு.

கார் ஓடி மகிழ தடையின்றி

தார் சாலை போட தவற வில்லை.

நீர் ஓடி வடிய வகை செய்ய

யார் ஆட்சியும் மடிய வில்லை.
பாட்டி காலத்தில் தாய் மார்பு போல 

பார்க்கும் நிலமெல்லாம் நீர் சுரந்தது.

பாட்டில் நீர் குடிப்பதாலோ தமிழ்நாடு,

பக்கத்து மாநிலத்தை நீருக்காக இரந்தது.
மழை விழாதா பூமியா நம் நிலம்.

மழை விழாதா என்று முன்னேற்பாடுடன்

அழையாமல் வருபவளை காப்பதே நலம்.

ஆனால்..

தொலைத்து விட்டோம் விழுந்த துளிகளை.

தொலைந்து போனோம் மறந்து,

தலைச்சிறப்பாய் வாழ்ந்த வழிகளை.

நிலை கெட்டு தண்ணீருக்கு சண்டையிட்டு,

சுமத்துகிறோம் மற்றவர் மேல் பழிகளை.
காலமும் தவறு செய்யும் நம்மிடம்

காவிரியை திறந்து விட்டால் கூட

நீர் இறங்கி வருமா என்றால்

சந்தேகமே !

வந்தாலும் நம் ஊர் எட்டும் முன்

குறைந்து விடும் 

அதன் வேகமே !
எழுதியவர்

– ஜெயராஜ் மணி

Leave a Reply