​குரங்கு கேட்கிறது

‘‘ஓ, மனிதா என்னையும், என் குட்டியையும் சேர்ந்தாற்போல் எங்கேயாவது பார்த்திருக்கிறாயா நீ?
அய்யோ குழந்தைக்கு ஒன்றும் தெரியாதே தவறிக் கீழே விழுந்து விடுமே’ என்று நான் அதை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கமாட்டேன். அதுதான் என்னை வளைத்துப் பிடித்துக் கொண்டிருக்கும். 

அதுவும் எப்படி? என் முதுகை தன் கால்களால் சுற்றி வளைத்து பிடித்தபடி, நானே அதைக் குனிந்துகூடப் பார்க்காமல் கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் இரை தேடி தாவிக் கொண்டேயிருப்பேன். அப்படித் தாவும்போது ‘பத்திரம் கெட்டியாய்ப் பிடித்துக் கொள்’ என்றோ, ‘விழுந்துவிடப் போகிறாய் ஜாக் கிரதை’ என்றோ அதனிடம் சொல்லி, அதை எச்சரித்தாவது வைப்பேன் என்கிறீர்களா? மாட் டேன். 

தன்னைத் தானேதான் அது காப்பாற்றிக் கொள்ளவேண்டும். என்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்ளலாமென்ற எண்ணம் அதற்கு எழுந்துவிட்டால், பிற்காலத்தில் அது தன்னைக் கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொள்வது எப்படி?‘

இப்படிச் செய்வதால் எனக்கு அதன்மேல் அன்பே கிடையாது’ என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். உண்டு. நானும் உங்கள் வீட்டுப் பெண்களைப்போல அதை என் முன்னங்கால்களால் அணைத்துப் பிடித் துக் கொண்டு பால் கொடுப்பது உண்டு. ஆனால், எதுவரை? அதற்கு இந்த உலகம் தெரியும் வரை. தெரிந்த பின்? எதற்கும் பிறரை அது ஏன் எதிர்பார்க்க வேண்டும்? ஏன் எதிர்பார்க்கவிட வேண்டும்?
மனம் விட்டுச் சொல்கிறேனே! 

இயற்கையாக இல்லாத பந்தத்தையும், பாசத்தையும் உங்களைப் போல் அவ்வப்போது விலை கொடுத்து வாங்கிக் கொண்டு, அவற்றுக்காக ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருந்து கொண்டு, சதா தொல்லையில் உழன்றபடி வாழும் வாழ்வு எங்களுக்குப் பிடிப்பதே இல்லை.

அப்படியிருக்க, எங்களிலிருந்து வந்ததாக நீங்கள் எப்படித்தான் சொல்லிக் கொள்கிறீர்களோ, அதுதான் எங்களுக்குத் தெரியவில்லை.’’

Leave a Reply