“வேலையைவிட்டுப் போகாதீங்க டீச்சர்..!”- போராட்டத்தில் குதித்த மாணவர்கள்!

தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி விருப்ப ஓய்வு அளித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து அவர் மீண்டும் பணிக்குத் திரும்பக்கோரி அப்பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம் அடுத்த கோ.ஆதனூர் கிராமத்திலுள்ள தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக இருப்பவர் தமிழ்ச்செல்வி. இவர் தனது சொந்த விருப்பத்தின் காரணமாக தனது ஆசிரியைப் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றுக்கொள்வதாக நேற்று மாவட்டக் கல்வி அதிகாரியிடம் அதிகாரபூர்வ மனு அளித்தார். ஆனால், ‘எங்கள் தலைமை ஆசிரியை எங்களுடன் எப்போதும் இருக்க வேண்டும்” என அவர் பணியாற்றும் தொடக்கப் பள்ளியின் மாணவர்கள் தங்களது வகுப்புகளைப் புறக்கணித்து அவரவர் பெற்றோருடன் விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாவட்டம் முழுவதும் பதற்றம் அதிகரித்தது. இதனால் காவல்துறை அதிகாரிகள், கல்வித்துறை அதிகாரிகள் எனப் பலரும் வந்து சமாதானம் கூறியபோதும் தங்களது போராட்டத்தைக் கைவிட மாணவர்கள் மறுத்துவிட்டனர். பின்னர் உடனடியாகப் பணி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்விக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஆசிரியை தமிழ்ச்செல்வி மாணவர்களை சமாதானம் செய்ய முயன்றார்.

ஆனால், மாணவர்கள் விடாமல் ஆசிரியைப் பணிக்குத் திரும்ப வேண்டும் என்ற கோஷத்தைக் கைவிடாமல் இருக்கவே, மீண்டும் பணியில் சேர்வதாக உறுதி அளித்தார் தமிழ்ச்செல்வி. இதன்பின்னர் மாணவர்கள் அவரவர் வகுப்புக்குத் திரும்பினர்.

இதுகுறித்து தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி கூறுகையில், “எனது சொந்த விருப்பத்தின் காரணமாகவே பணி ஓய்வு பெறுவதாகத் தெரிவித்தேன். ஆனால், மாணவர்கள் என் மேல் இவ்வளவு அன்பு வைத்திருக்கிறார்கள் என்பதை இப்போதுதான் நேரடியாகக் கண்டேன்.

சாலை மறியலில் ஈடுபட்ட என் மாணவர்களிடம் பலமுறை எடுத்துக்கூறியும் அவர்கள் என்னை விடுவதாக இல்லை. அதனால் என் மாணவர்களுக்காக எனது விருப்ப ஓய்வை திரும்பப்பெறுவதாக மாவட்டக் கல்வி அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டேன். அவர்களும் என் முடிவை வரவேற்றனர். தற்போது மீண்டும் பணிக்குத் திரும்பி என் மாணவர்களைத் தொடர்ந்து ஊக்குவிப்பேன்” என்றார் மகிழ்வுடன்.

Leave a Reply