வெட்டுக்குத்துக்கு வேலை இல்லை… உலகுக்கே பாடம் சொல்லும் பரம்பூர் ஏரி!

‘வாய்க்கா தகராறு… வரப்புத் தகராறு… பாசனத் தகராறு…‘ இதுக்கெல்லாம் புகழ்பெற்றதுதான் தமிழகக் கிராமங்கள். இதற்காக கொலைகள் நடப்பதும் இங்கே சர்வ சாதாரணம். இதற்கு நடுவே, பாசன நீருக்காக வெட்டுக்குத்து நடத்தியே பாடம் படித்திருக்கும் புதுக்கோட்டை மாவட்டம், பரம்பூர் கிராமம், இன்றைக்கு பாசனத்துக்காக உலகுக்கே பாடம் எடுக்கும் அளவுக்கு கட்டுக்கோப்பாக மாறியிருக்கிறது!

‘கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக…’, கிராமங்களில் இருக்கும் ஏரிகளும், குளங்களும் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. தாராளமாக நீர் கிடைக்கும்போதே தகராறுகள் சொல்லி மாளாது. இழுத்துக்கோ… பிடிச்சுக்கோ… என்று தண்ணீர் தட்டுப்பாடு வந்துவிட்டால், சொல்லவே தேவையில்லை. வாய்க்கால்களில் ரத்தம்தான் ஓடும். ஆனால், இதில் பாடம் படித்த பரம்பூர் கிராமத்தினர், தங்கள் கிராமத்துக்குச் சொந்தமான ஏரியை முறையாகப் பராமரித்து, இதன் மூலம் கிடைக்கும் ஏரி நீரை முறையாக பங்கிட்டு, ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்’ எனும் மூத்தோர் வாக்குக்கு உதாரணமாக நிற்கிறது!
முப்பத்தைந்து ஆண்டு காலமாக விவசாயத்தைச் செழிப்பாக்கிக் கொண்டிருக்கும், இந்த பரம்பூர் ஏரி மற்றும் தங்களின் பாசன முறை பற்றி பேசினார், பரம்பூர் நீர்ப்பாசனச் சங்கத்தின் தலைவர் சீனா. தானா. சுப்பிரமணியன்.

‘‘265 ஏக்கர்ல அமைச்சிருக்குற இந்த ஏரி மூலமா, மொத்தம் 275 ஏக்கர் நிலத்துக்குப் பாசனம் நடக்குது. ஆரம்ப காலத்துல இந்த நிலம் முழுக்கவே 9 குடும்பங்களுக்கு மட்டும் சொந்தமானதா இருந்துச்சு. ஒவ்வொருத்தரும் ஒரு கரைக்காரர்ங்கிற அடிப்படையில (ஏரியின் கரை அடிப்படையிலான பாகம்), ஏரியில இருந்து பாசனம் செய்திட்டிருந்தாங்க. ஒரு கட்டத்துல நிலத்தை அவங்கள்ல சிலர் விற்பனை பண்ண ஆரம்பிச்சாங்க. இதுல நிலம் வாங்கினவங்க, அந்தந்த கரைகாரங்களுக்கு ஏற்கெனவே இருக்கிற பாசன முறை வரும்போதுதான் பாசனம் செய்துக்கணும். ஒரு கட்டத்துல கரைகாரங்ககிட்ட நிலமில்லாம போகவும், பாசன முறையில பிரச்னை வந்து, வெட்டுக்குத்து வரைக்கும் நடந்துச்சு.

ஊர்ல இருக்குற முக்கியஸ்தர்கள், கலெக்டரைப் பார்த்து, நீர்ப்பாசன சங்கம் அமைச்சோம். சங்கத்தோட உறுப்பினர்கள் எல்லாரும் ஒண்ணாகூடி, ஏரி தண்ணியைப் பாய்ச்சுறதுல சண்டை வருது. அதனால, ஒவ்வொரு மதகுக்கும் ஒரு நீராணியை (தண்ணீர் பாய்ச்சுபவர்), 5 மதகுக்கும், 5 நீராணியை நியமிச்சு, பாசனத்தை அவங்ககிட்ட ஒப்படைப்போம்னு முடிவெடுத்தோம். இந்த நீராணிகள்தான் எல்லா நிலத்துக்கும் தண்ணீர் கட்டுவார். எந்த விவசாயிக்கும் தண்ணீர் கட்டுற வேலை கிடையாது. தண்ணீர் குறைவா இருக்குறப்ப, நீராணியே முடிவெடுத்து தண்ணியைப் பாய்ச்சுவார். அதாவது, நாற்றுப் பறிப்பு, நடவு, கருகும்பயிர்’னு அவசரமா எங்க தண்ணீர் தேவையோ, அந்தப் பயிருக்கு முதல்ல பாசனம் செய்வார்.

ஒண்ணரை ஏக்கர் வரைக்கும் வெச்சுருக்குற குறுவிவசாயிகளோட நிலத்துக்கு முழுக்க பாசனம்; ஒண்ணரை ஏக்கர்ல இருந்து ஐந்து ஏக்கர் வரைக்கும் இருக்கிற சிறு விவசாயிக்கு பாதியளவு பாசனம்; ஐந்து ஏக்கருக்கு மேல இருக்கிற பெரிய விவசாயிகளுக்கு மூணுல ஒரு பங்கு பாசனம்னு நீராணி செய்துகொடுப்பார். முதல்போக சாகுபடி முடிஞ்ச பிறகு, மீதம் இருக்குற தண்ணியை கடலை, எள், உளுந்து மாதிரியான பயிர்கள் செய்றதுக்காக நிலத்தோட வாய் மடையில நீராணி விடுவார். அதுக்கு பிறகு சின்ன வாய்க்கால்ல விவசாயிகளே பாய்ச்சிக்கணும்.

நீராணி தண்ணீர் கட்டுறதுக்கு கூலியா ஏக்கருக்கு 15 படி நெல்ல விவசாயி கொடுக்கணும். எல்லா விவசாயிகிட்ட இருந்து கூலி நெல்லை சேகரிச்சு, ஒவ்வொரு நீரணிக்கும் கூலியா 10 மூட்டை (63 கிலோ மூட்டை) நெல்லை கூலியாக கொடுப்போம். மீதி நெல்லை விற்பனை செஞ்சு, சங்கத்தோட கணக்குல சேர்த்துடுவோம். இதன்படி எந்த பிரச்னையும் இல்லாம பாசனம் நடந்துட்டிருக்கு என்று சொன்ன சீனா. தானா. சுப்பிரமணியன், ‘‘இந்த வருஷம் மழைக் குறைவா இருக்கிறதால முழுசா எல்லா நிலத்துக்கும் பாசனம் செய்ய முடியல. ஆனாலும், கிடைச்ச தண்ணியை பங்கீட்டுப் பாசனம் செய்துகிட்டோம்‘‘என்றார் புன்னகையுடன்!

இந்த ஏரியின் புகழை, தான் செல்லுமிடங்களில் எல்லாம் பெருமையோடு பேசத் தவறியதில்லை, ‘இயற்கை வேளாண் விஞ்ஞானி‘ கோ. நம்மாழ்வார்!

-காசி.வேம்பையன்

படங்கள்: என்.ஜி.மணிகண்டன்

Leave a Reply