விவசாயத்தை மட்டுமல்ல… பறவைகளையும் பாதிக்கும் வறட்சி

ம் தமிழ்நாட்டில் விலங்குகளையும், பறவைகளையும் காக்க வனவிலங்கு காப்பகங்கள், சரணாலயங்கள், பறவைகள் சரணாலயங்கள் என பல இருக்கின்றன. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம், இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, பறவைகளுக்கும்தான். கோடை, குளிர் என  சீசன் ஆரம்பித்துவிட்டால் வெளிநாட்டு பறவைகளும், அண்டை மாநில பறவைகளும் அதிக அளவில் தமிழ்நாட்டுக்கு வருகை தரும். ஆனால், என்னவோ இயற்கையை நாம் மறந்த காரணத்தால்தான் இன்று பறவைகளின் வருகை எண்ணிக்கை குறைந்து வருவதோடு நம் நாட்டுப் பறவைகளின் எண்ணிக்கையும் குறைய ஆரம்பித்து விட்டது.

ஈரோடு மாவட்டத்தில் பறவைகளின் சொர்க்கபுரியாக விளங்குவது ‘வெள்ளோடு பறவைகள் சரணாலயம்‘. ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் 77 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான பருவத்தில் இந்த சரணாலயத்துக்கு அதிகமான பறவைகள் வந்து செல்லும். குறிப்பாக இந்திய நாட்டு அரிய பறவைகளான மஞ்சள்மூக்கு நாரை, நத்தைக்குத்தி நாரை, கரண்டிவாயன், கூழைக்கடா, வெள்ளை அரிவாள் மூக்கன் போன்ற பறவைகளும், ஆஸ்திரேலியா மற்றும் ஆஸ்திரியா நாடுகளில் இருந்து பெலிகன் பறவைகளும் இங்கு வருகை தரும்.

அந்தந்தப் பருவ காலங்களில் பலவகை பறவைகளால் இந்த சரணாலயம் நிரம்பி வழிந்து மனதினை மயக்கும் ரம்மியமான சூழல் நிலவும். மிகப்பெரிய நிலப்பரப்பும் அதிகமான மரங்களையும் கொண்ட காரணத்தால்தான் இங்கு பறவைகளின் வருகை அதிகம். ரம்மியமான சோலையாக காட்சியளிக்கும் இந்த சரணாலயம் இப்போது பறவைகளும், பார்வையாளர்களும் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதற்கு காரணம் இங்கு போதிய அளவு நீர் இல்லாததுதான். இந்த முறை இரண்டு பருவமழைகளும் ஏமாற்றியதன் காரணமாக தமிழகமே வாடி, வறண்டுபோய்க் கிடக்கிறது. இந்த நிலைதான் இந்த சரணாலயத்திலும் எதிரொலித்து சிறு குட்டைபோல தண்ணீர் காட்சியளிக்கிறது.

மாலை வேளையில் பறவைகளின் ஒலியினையும், மரங்களின் மீது தொட்டுத்தடவி வரும் தென்றலையும் ரசித்தபடி அந்த சரணாலயத்துக்குள் சென்றோம். உள்ளே சென்றபோது மனம் மேலும் இறுக்கமாகியது. அதற்கு காரணம், கடந்த வருடங்களில் இதே நாட்களில் இருந்த கூட்டமோ, பறவைகளோ அதிகளவில் இல்லாமல் வெறிச்சோடி காட்சியளித்தது. வறட்சியான சூழல் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை ஓரளவு இருக்கிறது. ஆனால் அவர்களுக்குமே அந்த சூழல் மகிழ்ச்சியை தரவில்லை என்பதை அவர்களது முகங்கள் உணர்த்தின. இன்னும் சிலரோ பறவைகளை வேடிக்கை பார்ப்பதையும், நீந்தும் பறவைகளின்மீது கல் எறிந்து துன்புறுத்துவதுமாக இருந்தனர். இப்படி துன்புறுத்தினால் இருக்கும் பறவைகளும் அந்த இடத்தை விட்டுச் சென்றுவிடும்.

 

பறவைகள் அதிகமாக இல்லாமைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பொதுவாக பறவைகளுக்கு காடுகளும், மரங்களும் மிக முக்கியம். இன்று பெரும்பாலும் நகரமயமாக்கல் மற்றும் வியாபார நோக்கங்களுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. காடுகளே ஒரு நாட்டின் சீதோஷ்ண நிலையையும், நாட்டினை வளப்படுத்துவதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த இயற்கை வளங்களை அழிப்பதால் இயற்கை சமநிலை மாற்றங்கள், சூழ்நிலை மாற்றங்கள் மட்டுமல்லாமல் பறவைகளின் வாழ்க்கையும் மாற்றத்தை கண்டு வருகிறது. இயற்கை வளங்களை அழிப்பதை விட்டுவிட்டு இயற்கையை காப்பதில் இனியாவது கவனம் செலுத்தலாமே...

இந்த ஆண்டு வறட்சியானது விவசாயத்தை மட்டுமல்ல… பறவைகளையும் கூட பாதித்துள்ளது.

விகடன்

Leave a Reply