விழலுக்கு இறைத்த நீர்

விழல் என்பதற்கு ‘வீணான நிலப்பகுதி’ என்று பொருள்

பாரதி விழலுக்கு நீர்வார்த்து மாய மாட்டோம் (விழல்- நீர் வார்த்தல் – வீண் பாடுபடல்) என்று எழுதியிருப்பதால், பலரும் விழல் என்பதையே ஒரு பயனில்லாமை எனும் பொருள் தரும் வினைச்சொல்லாகக் கொள்வர். ஆனால், பாரதியின் வரியை மீண்டும் கவனியுங்கள் – அது ஒரு பெயர்ச்சொல். ஒரு வகை நிலத்தைக் குறிக்கிறது. அந்த வகை நிலத்துக்கு நீர் வார்ப்பது ஒரு வீண் செயல் என்கிறார். அடுத்தவரியில், அது, வெறும் வீணர்களுக்கு உடல் உழைப்பு செய்வதைப் போல என்கிறார்.

விழல் என்பது, நீர் தேங்கி, கோரைப்புற்கள் தவிர, வேறு பயன்தரு பயிர்கள் விளைய முடியாத பாழ்நிலம். வீணர்களின் உடல் போல, சோம்பலால் வலுகூடி, பயன் தரு செயல்கள் நிகழாத நிலை. வேலை செய்யாமல் காலனி ஆதிக்கத்தால் உடல் வளர்க்கும் வெள்ளையர் வீணர்களுக்காக நாம் உழைப்பதா? பணம் அதிகம் சேர்ந்து ஏற்கனவே பாழ்பட்டு நிற்கும் இங்கிலாந்துக்கு நாம் நமது செல்வங்களை வார்த்துக் கொடுப்பதா? அது, நீர் தேங்கிய விழல் நிலத்துக்கு, நாம் பாடுபட்டு நீர்வார்ப்பது போல அல்லவா? இப்படிப்பட்ட செயல் செய்து நாம் மாய மாட்டோம் என்கிறார் பாரதி. எனவே, விழல் என்பது, ஒரு நீர் தேங்கிய பாழ்நிலம். விழலுக்கிறைத்தல் என்பது வீண் பாடுபடல் என்ற பொருள் தரும்.

தமிழகராதியிலிருந்து விழல் என்ற சொல்லுக்கான பொருள்: விழுதல் என்னும் வினையாக வரும் (கீழே விழல்); விழல் எனும் நிலமாக வரும்; விழல் எனும் நிலத்தில் வளரும் புல்லாக (ஆகு பெயர்) வரும்.

Leave a Reply