வாழ்த்தி கோஷம் போட ரூ.500, கத்தி கதற ரூ.1000…! 

அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவிற்கு தொண்டர்களிடமும், மக்களிடமும் எழுந்துள்ள எதிர்ப்புகளை சமாளிக்க, பணம் கொடுத்து கூட்டத்தை கூட்டும் ஏற்பாடுகளில் நிர்வாகிகள் தீவிரம் காட்ட துவங்கி உள்ளனர்.

கட்சி தலைமை அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இரண்டாவது நாளாக நேற்று, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாத புரம், சேலம், நாமக்கல் மாவட்ட நிர்வாகிகளை சசிகலா சந்தித்தார்.

ஜெயலலிதா கட்சி தலைமை அலுவலகத்திற்கு வரும்போது, அவரை வரவேற்க, கட்சி தொண்டர்கள் திரண்டு வருவார்கள். தாரை தப்பட்டை முழங்க, அவருக்கு உற்சாக வரவேற்பு அளிப்பார்கள்.

அதே போன்ற வரவேற்பும், ஆதரவும், தற்போது சசிகலாவுக்கும் இருப்பதாக காட்ட, ஆண்களும், பெண்களும் பணம் கொடுத்து, அழைத்து வரப்படுகின்றனர். கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வரும் பெண்களில் பெரும்பாலானோர் மூதாட்டிகள்.

காலை, 10:45 மணிக்கு சசிகலா வந்தார். அவர் கார் உள்ளே நுழைந்ததும், அங்கு கூடியிருந்த பெண்கள், சசிகலாவை வாழ்த்தி கோஷமிட்டனர். சசிகலா அலுவலகத்தின் முதல் மாடிக்கு சென்று, ‘போர்டிகோ’வில் நின்று, அவர்களை பார்த்து, இரட்டை விரலை காட்டினார்.

அவர் உள்ளே சென்றதும், அழைத்து வரப்பட்ட பெண்கள் வெளியேற முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தினர். சசிகலா செல்லும் வரை, உள்ளேயே இருக்கும்படி வலியுறுத்தினர். அதைஏற்றுக் கொள்ள மறுத்த பெண்கள், போலீசாரை மீறி வெளியேற முயன்றனர். இதனால், இரு தரப்பினருக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கட்சி அலுவலகத்திற்கு வெளியே வந்ததும், அந்த பெண்கள் வரிசையாக அமர வைக்கப்பட்டனர். பின், அழைத்து வந்த நிர்வாகிகள், ஒவ்வொருவருக்கும் 500 ரூபாய், என்கிற விதம் வழங்கினர். சில பெண்கள் பணம் போதாது எனக் கூறி, சண்டை போட்டனர். பணம் கிடைத்ததும், கிளம்பிச் சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள், பணத்துக்காக கையேந்துபவர்கள் இருக்கும் வரை, பதவியால் பணம் பறிப்பவர்கள் இருக்கத்தான் செய்வார்கள் என்றும் புலம்பியபடியே சென்றனர்.

liveday

Leave a Reply