வாள் போய் கத்தி வந்தது.. பீட்டாவுக்கு சப்போர்ட் கியூப்பா

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ள விலங்குகள் நல அமைப்பின் பெயர் கியூப்பா (CUPA).

இந்த அமைப்பு ஏன் திடீரென வழக்கிற்குள் வந்தது என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். நடிகர் கமல்ஹாசன் நேற்று அளித்த பேட்டியில் கூறிய ஒரு தகவலை இதில் இணைத்து பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும்.

பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டுமா என்ற கேள்விக்கு, தான் தடைக்கு எதிரானவர் என்றும், ஜனநாயக நாட்டில் அதற்கு இடமில்லை என்றும் கூறினார் கமல். மேலும், தடைக்கு பதிலாக முறைப்படுத்துவதே அழகு என்றார் அவர். பீட்டா என்ற அமைப்பை தடை செய்துவிட்டால் வேறு பெயரில் உள்ளே வரமாட்டார்களா என்பதும் அவரது கேள்வி.

 நுழைஞ்சிட்டாங்கய்யா
 தமிழகத்தின் நாஸ்டர்டாமஸ் என கமலை அவரது ரசிகர்கள் அழைப்பார்கள். பல விஷயங்களை முன்கூட்டியே கணித்து தனது திரைப்படங்களில் காட்சியாக வைத்தவர். நேற்று கமல் அளித்த பேட்டி இன்று நிஜத்தில் நடந்துள்ளது. கியூப்பா என்ற பெயரில் சீனுக்குள் நுழைந்துள்ளது, ஒரு அமைப்பு.
 
பெங்களூர் அமைப்பு

பெங்களூர் அமைப்பு

இந்த அமைப்பு பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்குகிறது. இதில்தான் ஒரு சிக்கல். இனிமேல் பீட்டாவை எதிர்த்ததை போல தமிழர்களால் இந்த அமைப்பை எதிர்க்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பெங்களூரின் முக்கிய சந்திப்பான மடிவாளா, சில்க்போர்டு பகுதியில் இந்த அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ளது.

 சிக்கல்

அமெரிக்காவிலுள்ள பீட்டாவின் தலைமையத்தின் முன்பு நின்று கோஷமிட்டு தமிழர்கள் தங்கள் ஒற்றுமையை பறைசாற்றியதை கடந்த வாரத்தில் நாம் பார்த்தோம். ஆனால் பெங்களூரில் கியூப்பா அமைப்புக்கு எதிராக அதை செய்வது சாத்தியமில்லாத ஒன்று. அப்படி செய்தால், ‘பெங்களூரை சேர்ந்த அமைப்பு’ என்ற போர்வையில் தமிழர்களுக்கு எதிராக உள்ளூர் அமைப்புகளை தூண்டுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்ததை போல ஆகிவிடும்.

கவனம் தேவை

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியை பார்த்து, கர்நாடகாவும் இப்போது கம்பாலா போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த சூழ்ந்நிலையில், இரு மாநில உறவை சீர்குலைக்கும் விதமாக மறைமுக நடவடிக்கைகளில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரில் சில ஊடுருவுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. அரசியல் மற்றும் சட்ட ரீதியான தீர்வை நோக்கிய கவனத்தோடு நகர வேண்டிய தருணத்தில் உள்ளனர் தமிழர்கள்.

Leave a Reply