வாரன் பஃபெட்

நேற்று ஆகஸ்டு 30

பிறந்த நாள் வாழ்த்துக்கள் …. வாரன் பஃபெட்!!!

அவரைப்பற்றி சில வரிகள்….

பஃபட் அவர்கள் 1930ல் அமெரிக்காவின் ஒமாஹா என்ற இடத்தில பிறந்தார். அவரது தந்தை பங்கு முதலீட்டுடன் அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். சிறு வயதிலிலே பஃபட் பணம் சம்பாதிக்கவும், அதனை சேமிக்கவும் அதீத ஈடுபாடு காட்டினார். இளவயதில் வீடு வீடாக சென்று பத்திரிக்கைகள், கோகோ-கோலா போன்ற பொருட்களை விற்று வந்தார்.

அத்துடன் தனது தாத்தா நடத்தி வந்த கடையில் வேலை பார்த்து சம்பாதித்தும் வந்தார். தன்னுடைய 14 வயதில் முதல் வருமான வரியைக் கட்டினார். எனக்கெல்லாம் அந்த வயதில் வருமான வரி என்றால் என்ன என்று கூட தெரியாது.
தன்னுடைய பதினோரு வயதில் “Cite Service” என்ற நிறுவனத்தின் பங்குகளை 38$க்கு வாங்கினார். அது 27$ க்கு சென்று மீண்டும் 40$ வந்த போது விற்று விட்டார். ஆனால் அதே பங்கு 200$ க்கு செல்ல இவருக்கு பெரிய ஏமாற்றம். அப்பொழுது தான் பங்கு முதலீட்டின் அடிப்படையானது ‘பொறுமை’ என்பதை உணர்ந்து கொண்டார்.

1947ல் தன்னுடைய பள்ளி வாழ்க்கையை முடித்த பிறகு விருப்பமில்லாமல் அவரது தந்தை வற்புறுத்தலால் கல்லூரி சென்றார். அந்த சமயத்தில் பங்கு வர்த்தகம், பகுதி நேர வேலை என்று 5000$ சம்பாதித்து இருந்தார். அதனால் அவரது மனம் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதிலே ஆர்வமாக இருந்தது.

அங்கு இளநிலை படிப்பை முடித்த பிறகு ஹார்வர்ட் பல்கலை கழகத்தில் மேலாண்மை படிப்பிற்காக விண்ணப்பித்தார். ஆனால் இவரது குறைவான வயதைக் காட்டி இவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

இந்த சமயத்தில் பென் கிரகாம் என்ற பங்கு முதலீட்டாரை சந்திக்கிறார். இவர் தான் பஃபட்டின் குருவாக கருதப்படுகிறார். அவர் எழுதிய ‘Security Analysis’ மற்றும் ‘The Intelligent Investor’ புத்தகங்களை படித்து பங்கு அடிப்படைகளை நன்கு கற்று கொள்கிறார். இந்த புத்தகங்கள் தாம் “பங்கு மதிப்பீடு” அடிப்படையில் வந்த முதல் புத்தகங்கள்.

பென்னுடன் இணைத்து சில காலம் பணி புரிகிறார். பின்னர் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக “Berkshire Hathaway” என்ற பெயரில் நிறுவனம் ஆரம்பித்து சுயமாக வர்த்தகம் செய்கிறார்.

அடுத்த ஐந்து வருடங்களில் மட்டும் அவரது பங்கு மதிப்பு 251% அதிகரித்தது. ஆனால் அதே காலக்கட்டத்தில் அமெரிக்க பங்குச்சந்தை 74% மட்டுமே அதிகரித்தது. இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். பங்குகள் முழுமையாக பங்குச்சந்தையை சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. நல்ல நிறுவனங்களின் பங்குகள் நீண்ட காலப் பார்வையில் ஏற்றம் கண்டே வருகின்றன.

இப்படி Berkshire Hathaway நிறுவனம் தொடங்கி அடுத்த பத்து ஆண்டுகளில் வாரன் பஃபட் முதலீடு மதிப்பு 1100% சதவீதம் அதிகரித்தது. இப்படி தொடர்ந்து ஏறுமுகமாக இருந்தது.

இதிலிருந்தே அவர் பின்பற்றிய ‘மதிப்பு முதலீடு’ (Value Investing) தத்துவத்தின் சக்தியை அறிந்து கொள்ளலாம். இப்பொழுது நமது பங்கு சந்தையிலும் இறக்கம் தான் அதிகமாக காணப்படுகிறது. ஆனால் நல்ல பங்குகள் நன்றாகவே செயல்படுகின்றன.

அடுத்த கட்டமாக நலிந்த நிலையில் செயல்பட்ட See’s Candy, National Indemnity போன்ற பல நிறுவனங்களை வாங்க தொடங்கினார். அந்த சமயங்களில் வியட்நாம் போர் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் முடங்கி கிடந்தது. எல்லோரும் விற்று வந்த சூழ்நிலையில் இவர் அதனை வாங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

பங்கு மதிப்பீடல், நிறுவன மேலாண்மை மற்றும் எதிர்கால வாய்ப்புகள் இந்த மூன்றுமே இவரது முதலீட்டின் தாரக மந்திரம். இதனைப் பின்பற்றி வெற்றிகளை குவித்தார்.

இவ்வாறு 1965லிருந்து 1975 வரை உள்ள இடைவெளியில் மட்டும் இவரது நிறுவன முக மதிப்பு (Book Value) 20$லிருந்து 95$ஆக கூடியது. 2002ல் $11 பில்லியன் அமெரிக்க டாலருக்கு “forward trading” செய்தார். இந்த முதலீட்டில் மட்டும் 2 பில்லியன் டாலர் சம்பாதித்தார்.

இதனால் பஃபட் ஒரு பங்கை வாங்குகிறார் என்றால் பங்குச்சந்தையில் ஒரே நாளில் அந்த பங்கு 10% மதிப்பு கூடி விடும். அந்த அளவுக்கு செல்வாக்கு பெற்று திகழ்ந்தார்.

இவர் வருடந்தோறும் நிறுவன ஊழியர்களுக்கு எழுதும் கடிதம் மிக பிரபலம். அந்த அளவுக்கு அவருடைய கணிப்புகள் சரியாக இருந்தன.

இவரிடம் ஏன் நீங்கள் ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய மாட்டீர்கள் என்று கேட்ட போது. பங்கு வர்த்தகம் மிக எளிதாக இருக்கும் போது நான் ஏன் ரியல் எஸ்டேட் முதலீடு செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார்.

சந்தை கீழே விழும் போது சற்றும் கவலைப்பட மாட்டார். ஒரு நாளில் ஒரு தடவை பங்கு விலையை பார்த்து விட்டு வேறு வேலை பார்க்க போய் விடுவார். அந்த அளவுக்கு நீண்ட கால முதலீட்டில் நம்பிக்கை கொண்டிருந்தவர்.

அவருடைய மொத்த சொத்து மதிப்பு 2008ல் 62 பில்லியன் டாலராக உயர்ந்தது. இதன் மூலம் உலகின் மிகப் பெரிய பணக்காரன் ஆனார்.

பஃபட் அவர்களின் எழுத்துகள் மற்றும் பேச்சு வெறும் பணத்தை மட்டும் பற்றி இல்லாமல் அதிக மனிதத் தன்மையும் கலந்து இருக்கும்.

தன்னுடைய உயிலில் தான் மற்றும் மனைவி இறப்பிற்கு பிறகு அணைத்து சொத்துகளும் அறக்கட்டளைகளுக்கு செல்லும் என்று எழுதி வைத்துள்ளார். அந்த அளவுக்கு வாரிசு சொத்து பங்கிடுதலை விரும்பாதவர்.

நன்றி : revmuthal.com

 

Leave a Reply