வலைதளங்களில் பெண்கள் ஜாக்கிரதை

ஐதராபாத் : ஆன்லைன் மூலமாக, குறிப்பாக பேஸ்புக் மூலம் 200 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் இவர் ஐதராபாத்தை சேர்ந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் என தெரிய வந்துள்ளது.

அப்துல் மஜித் என்ற 21 வயது இளைஞன், பேஸ்புக்கில் தன்னை ஒரு அழகான இளம்பெண் போல் காட்டிக் கொண்டு, ஐதராபாத்தின் முன்னணி பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட இளம்பெண்களை தனது வலையில் விழ வைத்துள்ளார். முதலில் தனது நண்பர்கள் வட்டத்திற்குள் அவர்களை சேர்க்கும் மஜித், அப்பெண்களின் நம்பிக்கையை பெற்ற பிறகு அவர்களுடன் ஆபாசமாக பேச துவங்கி உள்ளார். அவர்களுடன் அந்தரங்க விஷயங்களை பகிர்ந்து கொள்வதை வாடிக்கையாக வைத்து பழகி வந்துள்ளார்.

ஒரு கட்டத்தில் அந்த பெண்களிடம் , எனக்கு பணம் அனுப்பு , மறுத்தால், அந்த பெண்ணின் அந்தரங்க ரகசியங்களை ஆன்லைனில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். அந்த மிரட்டலுக்கு பயந்து பல பெண்கள் தங்களின் அந்தரங்க படங்களை அனுப்பி வைத்துள்ளனர். சில பெண்கள் ரூ.86,000 வரை பணம் அனுப்பி உள்ளனர். இவர்களில் ஜனனி என்ற பெண், மஜித்தின் மிரட்டலுக்கு அடிபணியாமல் தனது தாயின் உதவியுடன் போலீசிற்கு சென்றுள்ளார்.

ஜனனி அளித்த புகாரின் பேரில், மஜித் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து போலீசார் கூறுகையில், மஜித்தின் மொபைல் போனில் நூற்றுக்கணக்கான பெண்களின் ஆபாச படங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஆபத்தான பேர்வளிகள் பலர் ஆன்லைனில் உலா வருகின்றனர். அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் சைபர் நிபுணர்களை அழைத்து வந்து இளைஞர்களுக்கு இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதுகாப்பான முறையில் ஆன்லைனை பயன்படுத்த கற்று கொடுக்க வேண்டும் என்றார்.

ஜனனியின் தாய் கூறுகையில், இது போன்ற விழிப்புணர்வு இளைஞர்களுக்கும் பெற்றோருக்கும் மிகவும் அவசியம். இது போன்று நடந்தால் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை பெற்றோர்கள் தான் தங்கள் பிள்ளைகளிடம் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Leave a Reply