ரஜினிக்கு எதிராக பொங்கிய சரத்: பின்னணியில் சசிகலா

சென்னை: தமிழக அரசியலில் அசாதாரண சூழல் நிலவுகிறது என, சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் நடிகர் ரஜினி பேசியதன் பின்னணியில், பெரும் அரசியல் இருக்கிறது என்பதை, சசிகலா தரப்பினர் கண்டறிந்துள்ளனர். அதன் பின்பே, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரை அழைத்து, ரஜினிக்கு எதிராக அறிக்கை விடவும்; பேட்டி அளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக, அ.தி.மு.க., வட்டாரங்களில் கூறப்படுகிறது.
ரஜினி கருத்து:

ஜெயலலிதா மறைவு மற்றும் அவரது மரணத்தில் உள்ள சந்தேகங்கள் குறித்தெல்லாம், சில நாட்களாகவே மிகுந்த வருத்தத்தோடு, நண்பர்களிடமும், பல அரசியல் தலைவர்களிடமும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வந்தார் ரஜினி. இந்த விவரங்கள் அனைத்தும், சசிகலா தரப்புக்கு வந்து கொண்டே இருந்தன. உடனே, ரஜினியை எப்படியாவது ‛கார்னர்’ செய்ய வேண்டும் என, சசிகலா தரப்பினர் ஆலோசித்தனர். ஆனால், ரஜினி, நேரடியாக எதுவும் பேசாததால், அமைதியாக இருந்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், தமிழக அரசியலில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதாக ரஜினி பேசியது, சசிகலா தரப்பினரை கொந்தளிக்க வைத்துவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், சசிகலா, அ.தி.மு.க.,வின் பொதுச் செயலர் ஆனதையும்; முதல்வர் பன்னீர்செல்வத்தை இறக்கி விட்டு, முதல்வர் பதவியில் தன்னை அமர்த்திக் கொள்ள சசிகலா எடுக்கும் நடவடிக்கைகளைத்தான், ரஜினி இப்படி விமர்சிப்பதாக கூறி கொந்தளித்தனர்.

சரத் ஆவேசம் ஏன்?

இது குறித்து, சமத்துவ மக்கள் கட்சியினர் கூறியதாவது:
எப்பவுமே ரஜினி என்றால், சரத்குமாருக்குப் பிடிக்காது. சரத்குமார், எம்.எல்.ஏ.,வாகவும்; நடிகர் சங்கத் தலைவராகவும் இருந்த போது, அவரை, ரஜினி மதித்ததில்லை. அதோடு, நடிகர் சங்கத் தேர்தலில், தன்னை ஆதரிக்காமல், ரஜினி, மறைமுகமாக விஷால் டீமை ஆதரித்தார் என்ற கோபமும் சரத்குமாருக்கு இருந்ததோடு, அதனாலேயே, தான் நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வி அடைந்ததாகவும் கருதுகிறார். இதெல்லாம் ரஜினி மீது சரத்குமாருக்கு உச்ச கட்ட கோபத்தை ஏற்படுத்தி இருந்தது. ரஜினியை எதிர்க்க சரியான நேரம் பார்த்துக் கொண்டிருந்தார். இந்நிலையில், தமிழக அரசியலில் அசாதாரண் சூழல் நிலவுவதாக கூறிய ரஜினி, ஜல்லிக்கட்டு முன்னோர் நடத்திய பாரம்பரிய விளையாட்டு. அதை நடத்துவதற்கு என்ன கட்டுப்பாடுகள் வேண்டுமானாலும் விதிக்கட்டும்; ஆனால், விளையாட்டை நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதிக்க வேண்டும் என்றும், திடீரென ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

ரஜினி, அரசியலில் களம் இறங்க முடிவெடுத்தே இப்படியெல்லாம் பேசுகிறார் என, சசிகலா தரப்பு கருதியதோடு, இந்த பேச்சின் பின்னணியில் பா.ஜ., இருக்கிறது எனவும் கணக்குப் போட்டனர். அதனால், ரஜினிக்கு பதிலடி கொடுக்கத் தயாராயினர். ஏற்கனவே ரஜினி மீது கடும் அதிருப்தியில் இருக்கும் சரத்குமாரை அதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்து, அவரிடம் சொல்ல, அவர், ரஜினிக்கு எதிராக கொந்தளித்து விட்டார். இதற்கு ரஜினி தரப்பு பதிலளிக்க விரும்பவில்லை; ஆனால், அடுத்தடுத்து அரசியல் அரங்கில் காய் நகர்த்த, ரகசிய திட்டங்களை தீட்டி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave a Reply