யாரை எப்படிக் கையாள்வது?

பேருந்துப் பயணத்தின்போது நான் சந்திக்க நேர்ந்த சில மனிதர்களின் பெர்சனாலிட்டி பற்றிக் கடந்த வாரங்களில் பார்த்தோம். இத்தகைய வேறுபட்ட ஆளுமை உடைய மனிதர்கள் தான் நம்மைச் சுற்றித் தினம் தினம் வலம் வருகிறார்கள். நமது வீட்டில், சாலைகளில், அலுவலகங்களில், அண்டை வீடுகளில் , நாம் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் என எங்கெல்லாம் மனிதர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களுடைய தனித்தன்மையும், நிழல்போல் நம்மோடு ஒன்று கலந்து இருக்கிறது.

மனிதர்களோடு வாழ்க்கையில் பயணிக்க விரும்பும் நாம், அவர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளிப்பதும் சுலபமாகிவிடும், வாழ்க்கைப் பயணமும் இனியதாகிவிடும்.

கல்லும் கைகளும்

ஒருவர் சிறந்த ஆளுமை அல்லது பர்சனாலிட்டி என்பது அந்த மனிதர் உலக அளவில் பேமஸ் என்பதாலோ அவருக்குச் சிக்ஸ் பேக் பாடி என்பதாலேயோ, பெரும் பணக்காரர் என்பதாலேயோ அமைவதில்லை.

ஒவ்வொருவருடைய தனித்தன்மைகளை வைத்தே அது தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு கல் காக்கா கிட்டக் கெடச்சா பானையிலேர்ந்து தண்ணி மேலே வரும். அதே கல் ஒரு குழந்தைக்குக் கெடச்சா பந்து மாதிரித் தூக்கிப்போட்டு விளையாடும். அந்தக் கல் ஒரு சமூக விரோதி கையில் கெடச்சா வன்முறை வெடிக்கும். ஆனா அந்தக்கல் ஒரு சிற்பியின் கையில் கெடச்சா அதுவே ஒரு சிலையா மாறிடும்.

இன்றைய சூழலில் நடைமுறை வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தேவைக்கு அதிகமாகவே நம்மிடம் புரையோடிக் கிடக்கிறது. அவற்றைக் கையாளும் முறையிலும் நாம் கை தேர்ந்தவராகவே இருக்கிறோம். ஆனால் நம்மைச் சுற்றியுள்ள சக மனிதர்களைக் கையாள்வதில் நாம் சற்றே பின்தங்கியுள்ளோம்.

பழகுவதன் விதிகள்

எப்படிப்பட்ட குணாதிசயம் உள்ள மனிதரானாலும் அவரோடு நட்புடன் பழகவும், அவரைச் சமாளிக்கவும் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்:

நம்மைப் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். முந்தைய வாரங்களில் கூறிய பெர்சனாலிட்டியில் நமது வகை எது?

நாம் கையாள வேண்டிய நபர் எந்த வகை பெர்சனாலிட்டியைச் சேர்ந்தவர்?

நாம் எந்த மாதிரியான சூழலில் அந்த வகை பெர்சனாலிட்டியுடைய நபரிடம் செயல் பட்டுக்கொண்டிருக்கிறோம்?

ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நாம் எத்தனை முறை அவருடன் சேர்ந்து செயல்பட வேண்டியிருக்கிறது?

மொழி என்னும் படம் அனைவராலும் ரசிக்கப் பெற்றது. அதில் ஒரு முக்கியமான கேரக்டரை நம்மால் மறக்க முடியாது.

தன் மகன் இறந்த அதிர்ச்சியில் பழையன மட்டும் அவருக்கு நினைவில் இருக்கும். சீரியஸான காட்சிகளில்கூட அவர் பழையதைப் பேசிக்கொண்டிருப்பார். அந்தத் தருணத்தில் அவரைச் சரி செய்ய முயலும் ஹீரோ தான் சந்திக்கும் பர்சனலான இக்கட்டான சூழ்நிலையை மறந்து அவருடைய குணாதிசயம் தெரிந்து அவருக்கு அமைதியாகவும், ஜாலியாகவும் ரியாக்ட் செய்வார்.

கடமை தவறாத பெர்சனலிட்டி

ஒரு நடைமுறை உதாரணத்தைப் பார்க்கலாம். என் நண்பனின் வாழ்வில் நடந்த சம்பவம். ஒரு முறை அவன் தன் நண்பர்களோடு சேர்ந்து ஒரு ப்ராஜெக்ட் செய்தான். அந்த ப்ராஜெக்டை வழிநடத்திச்செல்லும் தலைமைப் பொறுப்பு அவனுடையது. அதில் ப்ராஜெக்ட்டுக்குத் தேவையான சில குறிப்புகளைச் சேகரிக்கும் பணியில் ஒருவர் அமர்த்தப்பட்டார். ஏதோ காரணத்தால் அவரால் குறிப்புகளைச் சரியாகச் சேகரிக்க முடியவில்லை. ப்ராஜெக்ட் அவன் எதிர்பார்த்த அளவுக்குப் பெரிதாக வரவில்லை. அப்போது அவன் அவரிடம் ஒரு உயர் அதிகாரி போல் பேசியிருந்தால் அவன் அவரை இழக்க நேர்ந்திருக்கும். அதற்குப் பதிலாக அவன் அவரை அணுகிய முறையே வேறு.

அவன் அவரிடம் சொன்னது இதுதான்: “பாஸ் உங்க பேர்ல நான் நிறைய நம்பிக்கை வச்சிருந்தேன். என்னைப் பொறுத்தவரை சரியான ஒருவரிடம் ஒரு பொறுப்பைக் கொடுத்துவிட்டால் அந்த வேலையைப் பற்றி நான் யோசித்துக்கொண்டிருக்க மாட்டேன். இதுவரை என் எதிர்பார்ப்புக்கு ஒரு படி அதிகமாகவே செஞ்ச நீங்க இந்தப் ப்ராஜெக்ட்ல கொஞ்சம் கம்மி பண்ணீட்டிங்க. நீங்க எந்த அளவு கடமை தவறாது வேலை செய்றவர்னு எனக்குத் தெரியும். பெட்டெர் ல நெக்ஸ்ட் டைம்” என்று சொல்லி விஷயத்தை முடித்தான்.

அவரை வேலையில் தக்கவைத்துக் கொள்வதற்காக அவர் செய்த தவறுகளைச் சுட்டிக்காட்டாமல் இருந்திருந்தால் அடுத்த ப்ராஜெக்டில் ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வேலையில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உண்டு. அல்லது அவன் அவரிடம் கோபத்தைக் காட்டியிருந்தால் அவர் வேலையை விட்டுச் செல்ல நேர்ந்திருக்கும்.

இந்த இரண்டு முறையையும் கையாளாமல் அவன் தன் மனதில் தோன்றியதை வெளிப்படையாகப் பேசியதால் அவருக்குத் தன் தவறை உணர்ந்து திருத்திக்கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதே நேரத்தில் அந்தத் தப்பு திரும்ப நேராமல் பார்த்துக்கொள்ள ஒரு இந்த அணுகுமுறை ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்தது.

அதன் பிறகு அவர் எந்தப் ப்ராஜெக்ட் எடுத்தாலும் தன் கடமையைச் சரியாகச் செய்து இன்றும் அவனுடன் பயணித்துக்கொண்டிருக்கிறார்.

கடமையைத் தவறாமல் செய்து முடிக்கும் பெர்சனலிட்டியை நீங்கள் கையாள வேண்டும் எனில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை,

அவரிடம் வியாபாரரீதியாகப் பேசாதீர்கள்.

அவர் செய்ய வேண்டிய வேலையில் அவருடைய பொறுப்புகள் பற்றி மட்டும் அவரிடம் பேசுங்கள்.

அவர் செய்யும் வேலையின் வெளிப்பாடு எந்த அளவு இந்த ப்ராஜெக்டை பாதிக்கும் என்பதைப் பற்றி அவரிடம் தெளிவாகப் பேசுங்கள்.

அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரம் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி அவர் உணர்ந்துகொண்டாரா என்பதைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்.

இத்தகைய பெர்சனாலிட்டி கொண்ட மனிதரின் குடும்பம் மற்றும் நண்பர்களைச் சந்திக்க நேர்ந்தால் அவரின் கடமை தவறாத பண்பை மனதாரப் பாராட்டுங்கள். இவர்கள் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதை மிகவும் எதிர்பார்ப்பவர்கள்.

வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதரும் எதிர்பார்ப்பதும், ஏங்கியிருப்பதும் அங்கீகாரத்திற்கும் பாராட்டுதல்களுக்கும்தான். இது கிடைக்காதவர்கள்தான் பெரும்பாலான நேரங்களில் விரக்தி அடைகிறார்கள்.

நிறுவனத்தின் பார்வையில் இருந்து ஒரு தலைவராக அவருடைய தேவைகளை அவர் கேட்கும் முன்பே பூர்த்தி செய்து விடுங்கள்.

http://tamil.thehindu.com

Leave a Reply