யானைக் கற்றாழை

இது ஒரு வேலித் தாவரம் ஆகும்.

கடும் வறட்சியையும் தாங்கி வாடாமல் வளரக் கூடியது.

அனைத்து மண் வகைகளிலும் நன்கு வளரக் கூடியது.

இதன் மடல்கள் ஐந்தடி நீளம் வரை வளரக்கூடியது.

அவற்றின் இரு பக்கமும் ரம்பம் போல முட்கள் இருக்கும்.

நுனியில் ஒரு கனமான நீளமான முள் இருக்கும்.

இதன் முற்றிய மடல்களை அறுத்துத் தண்ணீரில் ஊறவைத்துச் சில நாட்களுக்கும் பின் எடுத்துத் துவைத்தால் அருமையான வெண்மை நிறமான நார் கிடைக்கும்.

அந்த நார் மிகவும் வலிமையானதும் நீடித்து உழைக்கக்கூடியதும் ஆகும். முன்னோர் காலத்தில் இதன் நாரைக் கொண்டுதான் விவசாயத்துக்குத் தேவையான கயிறு வகைகள் திரிக்கப் பட்டன.

நாடகம் மற்றும் கூத்துக் கலைஞர்கள் இந்த நாரைப் பயன்படுத்தி வெண்தாடி உடைய கிழவர் வேடம் போடுவார்கள்.

இதன் மடல்களை ஒரு அங்குல அளவுள்ளதாக நீள நீளமாகக் கிழித்துக் காயவைத்து அந்த நாரைக் கொண்டு கூரை வீடுகள், பந்தல்கள், படல் என்று சொல்லக்கூடிய தட்டிகள் ஆகியவற்றை ஓலைகளுடன் இணைத்துக் கட்டப் பயன்படுத்துவார்கள்.

இதன் மடல்களில் இருந்து வெளிப்படும் சாறு உடம்பில் பட்டால் எரிச்சலாகவும் நமைச்சலாகவும் இருக்கும்.

இந்த மடல்களில் மேல் பத்தாகப் பயன்படக்கூடிய மருத்துவப் பண்புகள் உண்டு.

இது பக்கக் கன்றுகளுடன் வாழையடி வாழையாக என்றென்றும் அழியாமல் வளரக்கூடிய தாவரம் ஆகும்.

இதன் அடித்தண்டை ஒட்டியுள்ள கிழங்குப் பாகத்தை முற்காலங்களில் கொடும் பஞ்ச காலங்களில் வெட்டி எடுத்துச் சமைத்து உண்டு உயிர் பிழைத்தார்கள்.

குறிப்பிட்ட வருடங்களுக்கும் பின் கற்றாழையின் மத்தியில் பாக்குமரம் போன்று தோன்றி மரமாக வளரும். குறிப்பிட்ட காலத்தில் அது மட்டும் காய்ந்து விடும்.

அந்தக் காய்ந்த மரம் உறுதியாகவும் எடை குறைவானதாகவும் இருக்கும்.

அதனால் விவசாயிகள் தங்கள் குடிசைகளை அமைப்பதற்கும் மாட்டுக் கொட்டகை அமைப்பதற்கும் பட்டிகள் அமைப்பதற்கும், வெங்காயம், சோளத்தட்டுப்போர் போன்றவற்றுக்கு அடியில் பட்டறைகள் அமைப்பதற்கும் இந்த மரங்களைப் பயன்படுத்துவார்கள்.

எடை குறைவான இதன் மரக் கட்டைகளை முதுகில் மிதவையாகக் கட்டிக்கொண்டு சிறுவர்கள் நீச்சல் பழகுவார்கள்.

 

இதன் அருமையை உணர்ந்திருந்ததால் முன்னர் விவசாயிகள் தங்களின் நிலங்களுக்கு வேலியாக இதை நட்டு வளர்த்தார்கள். அது அவர்களுக்குப் பலவகையிலும் பயன்பட்டதோடு நிலத்தின் பாதுகாப்பு அரணாகவும் விளங்கியது.

ஆனால் இப்போதைய விவசாயத்தில் அதன் பயன்பாடு ஒழிந்துபோனதால் அதை ஒரு தேவையற்ற ஒன்றாகக் கருதி அழித்து ஒழித்து வருவதால் அது அழிந்துகொண்டிருக்கும் தாவரங்களில் ஒன்றாக உள்ளது.

கயிறுகளில் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகமாகி வரும் நிலையில் இதன் அருமை உணர்வதற்கான வாய்ப்பு சுத்தமாக அடைபட்டு விட்டது!

இந்ததப் பாரம்பரியத் தாவரத்தின் அருமை உணர்ந்த யாராவது தங்களின் நிலத்தைச் சுற்றி வேலியாக இதை வளர்த்தால் இயற்கை அன்னைக்குச் செய்த சேவையாகவே கருதலாம்!

அப்படி இல்லாவிட்டால் வருங்காலத்தில் இதன் அழிவைத் தவிர்க்க முடியாது!

ஆனால் விவசாயியின் உற்ற துணையாக விளங்கிய இந்தத் தாவரத்தை அழிய விடுவது இயற்கைக்குச் செய்யும் மன்னிக்க முடியாத தீங்கு ஆகும்.
— with Adarsh Ayyappa.

2 comments

Leave a Reply