மொட்டை மாடி திராட்சை

​எதிர் வீட்டுக்கு, பக்கத்து வீட்டுக்கு, மேல் வீட்டுக்கு வந்த, ‘டேபிள் மேட்’ மாதிரி, எதிர் வீடு, பக்கத்து வீடு, மேல் வீடு, நம்ம வீடுன்னு எல்லா இடத்துக்கும் வந்திருச்சு அந்த பாழாய் போன நோய். ‘தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டா ஆயுள் கூடும்’னு சொன்ன மருத்துவர்கள், ‘தினமும் திராட்சை சேர்த்துக்கோங்க. புற்றுநோய் அண்டாம ஆரோக்கியத்தோட இருக்கலாம்‘னு சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க.

‘அடி ஆத்தி… பன்னீர் திராட்சை அவ்வளவு நல்லதா?’ அட ஆமாங்க! அதனாலதான் வீட்டு தோட்டத்துலேயே திராட்சை விளைச்சலுக்கு பலர் இடம் ஒதுக்கிட்டாங்க.

‘அய்யய்யோ… அம்புட்டு பெரிய வீடு எங்ககிட்டே இல்லையே’ன்னு பதற வேண்டாம். மொட்டை மாடி இருக்குதுல்ல, அது போதும். அதை வைச்சு நலமும் பெறலாம்; வளமும் பெறலாம்!

(ஹலோ… நீங்க அபார்ட்மென்ட்வாசின்னா, ச்சீ… ச்சீ… உங்களுக்கு இந்த பழம் புளிக்கும். ஆமாங்க, திராட்சை கொடி அவ்வளவு உசரத்துக்கெல்லாம் வளர்ந்து வராது!)
விதை வளர…

வீட்டைச் சுத்தி, 2 அடி அகலத்துக்கு இடம். அதுல, தேவைக்கு தகுந்த மாதிரி, 5 அடி இடைவெளியில, ஒன்றரை அடி ஆழ குழிகள். ஒவ்வொரு குழிக்கும் அரை அடிக்கு வண்டல் மண் நிரப்பி, அது மேல மாட்டு சாணம், ஆட்டு புழுக்கை, புண்ணாக்கு, மண்புழு உரம் அடங்கிய குப்பை எருவை தூவி, அதுல முதிர்ந்த திராட்சை கொடி காம்பை நட்டு வைக்கணும். அதுக்கப்புறம் செம்மண் போட்டு குழியை நிரப்பணும். அதிகபட்சம் இரண்டு அடி நீளத்தை தாண்டாத திராட்சை கொடி வேர்களால, வீட்டு சுவர்களுக்கு எந்த பிரச்னையும் வராது.

ஒரு நாளைக்கு இரண்டு தடவை தண்ணீர் தெளிக்கிறதும், ஆறு மாசத்துக்கு ஒரு தடவை கடலை புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு கரைசல் தெளிக்கிறதும் நல்ல விளைச்சல் தரும்.அதேமாதிரி, வேரோட ஈரத் தன்மையை தென்னை நார் கழிவு பாதுகாக்கும்!

கொடி படர…

தரையில இருந்து மொட்டை மாடியை எட்டிப் பிடிக்க, திராட்சை கொடி தோராயமா ஆறு மாசம் எடுத்துக்கும். அதுக்குள்ளே, மாடியில பந்தல் அமைச்சிடுறது நல்லது. பந்தலோட உயரம் குறைஞ்சபட்சம், 5 அடி இருக்கணும். மொட்டை மாடி 600 சதுர அடின்னா, 500 சதுர அடிக்கு பந்தல் இருக்கணும். 10 அடி இடைவெளியில இரும்பு பைப்புகள் அல்லது மரக்கட்டைகளை நிற்க வைச்சு, இரும்பு கம்பிகளை இணைச்சு கட்டினா பந்தல் தயார். இதுக்கு செலவுன்னு பார்த்தா, அதிகபட்சம், 25 ஆயிரம் ரூபாய்.

பழம் உதிர…

பந்தல்ல கொடி ஏறிடுச்சுன்னா பராமரிப்பு பக்காவா இருக்கணும். குறிப்பா, திராட்சை காய்ச்சு முடிச்ச கொடியை கிள்ளி எறிஞ்சுட்டு, புது கொடிக்கு உயிர் தரணும். அப்போதான் மகசூல் நல்லாயிருக்கும். முதல் மகசூலுக்கு அதிகபட்சம், 11 மாசம். அப்புறம், 5 மாசத்துக்கு ஒருதடவை மகசூல். ஒரு கொடிக்கு, 25 கிலோ திராட்சை. நம்ம வீட்டு மாடியில விளையுறதால நமக்கு ஆரோக்கியம் உறுதி. நம்ம தேவைக்கும் அதிகமா விளையுறதால ஐஸ்வரியமும் உறுதி!

திராட்சை கொடி காம்பு, மணல், குப்பை எரு அனைத்தும் நர்சரி கார்டன்களில் கிடைக்கும்.

தகவல் உதவி:சவுடீஸ்வரி செல்வராஜ், திண்டுக்கல். 96557 35497

நன்றி: தினமலர்

Leave a Reply