முள்ளாநங்கை இலை

Monday, February 27, 2012
முள்ளாநங்கை இலை

மூட்டு பலவீனத்தின் ஆரம்ப நிலையில், முறையான பயிற்சிகளை செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் ஒற்றடம் செய்து வந்தால் பலன் உண்டாகும். ஒற்றடம் இட, மூலிகை எண்ணெய்களை பயன்படுத்துவதால் தோல், சதை மற்றும் இணைப்பு வரை மருந்துச் சத்துகள் ஊடுருவி, வலி நீங்கி குணமுண்டாகிறது. மூட்டுகளில் தோன்றும் கடுமையான வலி மற்றும் இறுக்கத்தை குறைத்து மூட்டை பாதுகாக்கும் அற்புத மூலிகை முள்ளாநங்கை. பார்லேரியா லுபிலினா என்ற தாவரவியல் பெயர் கொண்ட, அகான்தேசியே குடும்பத்தைச் சார்ந்தது. கூரிய முட்களையும் சிவப்புநிற இலைக்காம்புகளையும் உடைய முள்ளாநங்கை செடிகளின் இலைகள், சித்த மருத்துவத்தில் பயன்படுகின்றன. இதன் இலைகளிலுள்ள, அசிட்டைல்பார்லரின், பீட்டாகுளூக்கோபைரோனுசல் மற்றும் போர்னியால் ஆகிய வேதிச்சத்துகள், மூட்டு எடை வீக்கங்களை குறைத்து, வலியை நீக்குகின்றன. அதுமட்டுமின்றி, திசுக்களின் இறுக்கத்தை குறைத்து, மூட்டுகளின் அசைவை எளிதாக்குகின்றன. வெளிநாடுகளில் மசாஜ் நிலையங்களில் போர்னியால் என்ற முள்ளாநங்கை வேதிச்சத்து சேர்க்கப்பட்ட கிரீம் உடம்பில் தேய்க்கப்பட்டு, வலி நீக்கும் மசாஜ் செய்யப்படுகிறது.
முள்ளாநங்கை இலைகளை நீரில் வேகவைத்து, நீர் வற்றியதும் வெள்ளை துணியில் முடிந்து, ஒற்றடமிட வலி நீங்கும். ருமடாய்டு ஆர்த்தரைட்டிஸ், சர்வாங்கி வாதம் போன்ற வாத நோய்களில் தோன்றும் மூட்டுவலி நீங்க முள்ளாநங்கை இலைகளை இடித்து, சாறெடுத்து, நல்லெண்ணெயிலிட்டு காய்ச்சி, பதத்தில் வடிகட்டி, வலியுள்ள இடங்களில் தடவிவரலாம். முள்ளாநங்கை இலைச்சாறு– 500மிலி, ஓமம்-100 கிராம், தேங்காய் எண்ணெய்-500மிலி சேர்த்து கொதிக்கவைத்து, சாறு வற்றியதும் வடிகட்டி இளஞ்சூட்டில் 20 கிராம் பூங்கற்பூரத்தை போட்டு கரைந்ததும் மூடி வைத்துக்கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வலியுள்ள இடங்களில் தடவி வர, பல்வேறுவகையான மூட்டுவலிகள் கட்டுப்படும்.

Leave a Reply