முப்பத்திரண்டு மூளைகள்!

அதிசய அட்டைகள்!

அட்டைப் பூச்சிகள், ஓரங்குலம் முதல் 3 அடி வரை பல அளவுகளில் உள்ளன. அட்டைகள் அவற்றின் உடல் எடையைப் போல 10 மடங்கு அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சக் கூடியவை. தொடர்ந்து ரத்தம் உறிஞ்சுவதற்கும், மனிதனின் உடலிலிருந்து ரத்தம் உறிஞ்சப் படுவதை உணராமல் இருப்பதற்கும் அட்டையின் எச்சிலில் ‘ஹிருடின்’ என்ற வேதிப் பொருள் சுரக்கிறது. இது ரத்தம் உறையாமல் பார்த்துக் கொள்கிறது; வலி தெரியாமலும் பார்த்துக் கொள்கிறது

போதிய அறிவியல் வளர்ச்சி இல்லாத மிக முந்தைய காலங்களிலேயே இந்த அட்டைகளுக்கு நிறைய அங்கீகாரம் லோகத்தின் பல நாடுகளில் இருந்து வந்திருக்கிறது. கடுமையான காய்ச்சல், வயிற்று உப்புசம் போன்ற நோய் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த அட்டைகளைக் கடிக்க விடுவதன் மூலம் நோய் சுலபத்தில் குணமாவதை கிரேக்கர்களும் பிரிட்டிஷாரும் பெரு மளவில் நம்பினார்கள். 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளில் இருந்து வந்த இந்த நம்பிக்கையில் சத்தியமாக அறிவியலும் கலந்திருக்கிறது. மூத்தோர் ஞானம்!

20ம் நூற்றாண்டிலும் கூட இந்த அட்டைகளின் உபயோகம் நீடித்துக் கொண்டிருப்பது ஒரு வியக்க வைக்கும் ஆச்சரியமே. ஆம், இன்றைய நவீன உச்சத்தில் இருக்கும் மருத்துவத் துறையில் பலதரப்பட்ட அறுவை சிகிச்சைகளுக்கு. இந்த அட்டைகள் பயன்படுகின்றன என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? நம்பித்தான் தீர வேண்டும். இயற்கையின் விந்தை!

நிஜத்தில் நுணுக்கமான அறுவை சிகிச்சைகளான துண்டிக்கப்பட்ட கை கால் விரல்கள், ஆணுறுப்பு, காது மடல்கள், மற்றும் கை, கால்கள் போன்றவற்றின் இணைப்பில் இவை பெரிதும் பயன்படுகின்றன. அதாவது இந்த அட்டைகளின் பிரத்யேக எச்சிலில் ‘ஹிருடின்’ என்னும் ரத்த உறைதலைத் தடுக்கும் வஸ்து இருக்கிறது.

எனவே இவை கடிப்பதன் மூலம், ரத்தம் உறையாமல் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்யும் பகுதிக்கு – அதாவது புண்ணிற்கு – பாய்ந்து கொண்டே இருக்கிறது. இதன் மூலம் ரத்தத் தமனிகள் வேகமாக வளர்ந்து ஒரிஜினல் ரத்த ஓட்டத்தைப் பெறும் வரை இணைக்கப்பட்ட திசுக்களை இறந்து விடாமல் காக்கின்றன. உயிர் ரத்தம்!

உடலின் இரு முனைகளிலும் வட்ட வடிவத்தில் ‘சக்கர் எனப்படும் உறிஞ்சும் உறுப்புகள் இருக்கும். முகத்தில் பளிச் பார்வைக்குப் பத்து கண்கள்!

குஜராத் ஸ்வீட் போல மினுமினுக்கும் இதன் சருமத்தில் ஒருவித மியூக்கஸ் சுரப்பதால் எப்போதும் வழவழாதான். தொட்டால் குமட்டும். உவ்வே! அட்டைகள் எத்தனை நீளத்தில் இருந்தாலும் அதன் உடல், மடிப்புகளுடன் கூடிய 32 கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.

இப்படி உடல் கண்டங்களைக் கொண்ட பிற ஜீவராசிகளைப் போல் அல்லாமல், இந்த அட்டைகளுக்கு மட்டும் வெளிப்புறக் கண்டங்களுக்கும் உட்புற உடலுறுப்புகளின் அமைப்பிற்கும் எவ்விதமான தொடர்பும் இருப்பதில்லை. இந்த 32 மடிப்புகளிலும் இருக்கும் மூளை போன்ற நுட்பமான உணர்ச்சி ரிஸப்டார்கள்தான் ‘மேற்கொண்டு நகரலாமா’ என்று யோசனை சொல்லுகின்றன. நிஜத்தில் இவற்றிற்கு முப்பத்திரண்டு மூளைகள்!

அட்டைகளின் பிரதான உணவு, பிற ஜீவராசிகளின் ரத்தம்தான். இதை உறிஞ்சுவதற்கு கிண்ணம் போன்ற பிரத்யேக ஆயுதம் வைத்திருக்கிறது. வாய்! முகத்தின் முன் பகுதியில் ஷேவிங் பிளேடு மாதிரி மூன்று ஷார்ப்பான பிளேடுகள், ஒன்றையொன்று பார்க்கும் வகையிலான கோணத்தில் அமைந்திருக்கும்.

இவற்றைப் பயன்படுத்தி மனிதனையோ அல்லது ஏதேனும் ஒரு பிராணியைக் கடிக்கையில் தோலில் ‘ஒய்’ வடிவில் பிசிறில்லாத காயம் உண்டாகும். இந்தப் பிளேடுகளுக்குப் பின்னால் சற்றே கீழமைந்தவாறு வாயிருக்கும். எமகாதக வாய்!

அட்டைகள் இப்படி சர்ஜரி காயத்தை உருவாக்கும்போது யாருக்கும் வலிப்பதில்லை. பின்னர் உண்டாக்கிய காயத்தில் மிகச்சரியாக தன் வாயைப் பொருத்திக் கொண்டு ரத்தத்தை உறிஞ்ச ஆரம்பிக்கிறது. இப்படி வெளிவரும் ரத்தம் உறைந்து விடாம லிருக்க, இதன் எச்சிலில் இருக்கும் ஹிருடின் என்னும் ஆண்டிகுவா குலன்ட் வஸ்து உதவுகிறது.

இதை அந்த விலங்கின் ரத்த ஓட்டத்தில் செலுத்திவிட்டு ஹாயாக ரத்தத்தை உறிஞ்சுகிறது. டோனாருக்கு கண்களால் பார்த்தால் மட்டுமே அட்டை கடிப்பது தெரியும். மற்றபடி அது ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டிருப்பதை உணர்வதில்லை. அட்டை விலகிய பின்பும் காயத்தின் வழியே நீண்ட நேரத்திற்கு ரத்தம் வழிந்து கொண்டிருக்கும். ரகசிய ரத்தக்கசிவு!

இப்படியாக அட்டைகள் ஏராள ரத்தம் குடித்துத் தம் தட்டையான உடலை உருளை போல் பெருத்துக் கொள்வது சகஜம். சில நேரங்களில் மூன்று அங்குல நீளமுள்ள அட்டை, அதிகப்படியான ரத்தம் குடித்து ஒரு அடி நீளத்திற்கு நீண்டு விடுவதுமுண்டு.

சமயத்தில் இவை கண் மண் தெரியாமல் குடித்துவிட்டு ஒரு வருடத்திற்குக் கூட உண்ணாவிரதம் இருப்பதுண்டு. இண்டைஜெஷன்! இந்த உபரி ரத்தத்தை முன் வயிற்றுப் பையில் உறைந்து போகாமலும், கெடாமலும் நீண்ட காலத்திற்கு அட்டையால் பத்திரப்படுத்திக் கொள்ள முடியும். ரிஸர்வ் ஃபுட்!

(தொடரும்)

டாக்டர் ஆர்.கோவிந்தராஜ்

Leave a Reply