மாவு

அரிசிமாவு
அரிசியை பொடித்து செய்யப்படும் மாவு பல வித பலகாரங்கள் பட்சணங்கள் செய்ய உதவும். அரிசி மாவு, உளுந்து சேர்த்து செய்யப்படுபவை, தோசை, இட்லி, ஆகும். தோசை பித்தத்தையும், வாய்வையும் போக்கும். இட்லியும் திரிதோஷங்களை பெருக்காது. ஆவியில் வேக வைக்கப்படும் இட்லி மற்றும் இடியாப்பங்களை எளிதில் ஜூரணமாகும் எனப்பட்டாலும், இவை பத்திய உணவு ஆகாது. அரிசிமாவால் பணியாரங்கள், நல்ல ஜீரண சக்தி உடையவர்களுக்கே ஏற்றவை.
சில ஆயுர்வேத மருத்துவர்கள், வயிற்றில் வாய்வு இருந்தாலும், தோலில் சொறி, சிரங்கு இருந்தாலும் இட்லி, தோசை, இதர அரிசிமாவு தயாரிப்புகள் ஏற்றவையல்ல என்கின்றனர்கள். அரிசி மாவால் செய்யப்படும் பிட்டு உடலுக்கு வன்மை தரும். பெண்களின் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும்.
முறுக்கு, கொழுக்கட்டை, தேன்குழல் போன்றவை வாய்வை அதிகரிக்கும், பசியை மந்தப்படுத்தும் என்கிறது சித்த வைத்தியம்.
சத்துமாவு
அரிசியை வறுத்து இடித்த மாவு இது. கோதுமை, பார்லி, கடலை இவைகளாலும் சத்துமா செய்வது உண்டு. இந்த மாவை நீருடன் சேர்த்து பிசைத்து சாப்பிட பசியடங்கும். மோருடன் சேர்த்து உண்டால் வயிற்று வாய்வு நீங்கும். சத்துமா எளிதில் சீரணமாகும். களைப்பு நீங்கும்.
அரிசி மாக்களி
அரிசியை நீரில் ஊறவைத்து எடுத்து, இடித்து மாவாக்க வேண்டும். இதை தீப்புண்கள், கொப்புளங்கள் மேல் தூவ, புண்கள் ஆறும் வேர்க்குரு, கரப்பானால் ஏற்படும் சினப்பு, அரிப்பு இவற்றின் மேலும் அரிசி மாவை தூவலாம். நீர்க்கசிவும் அரிப்பும் அடங்கும்.
தேவையான மாவை வாயகன்ற சட்டியிலிட்டு அடுப்பிலேற்றி, சிறிது தண்ணீர் விட்டு களியாக கிண்டிக் கொள்ளவும். இதை வெள்ளைத் துணியில் 1 அங்குல கனத்திற்கு தடவி, கொஞ்சம் தேங்காய் எண்ணை அல்லது விளக்கெண்ணையை அதன்மேல் பூசி, கட்டிகள், சீழ்க்கட்டிகள் இவற்றில் மேல் வைத்து கட்டவும். கட்டிகள் பழுத்து உடைந்து போகும். வலிமிகுந்த கட்டிகளுக்கு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து கொள்ளலாம்.
கிண்டும் போது கால் பங்கு கடுகுத் தூள் சேர்த்து, இறக்கி, வேப்பெண்ணைய் சேர்த்து மார்பிலும், முதுகிலும் 1-2 மணி நேரம் கட்டி வைத்தால் கரையாத மார்புச் சளியும் கரையும்.
அவல்
நெல்லை சிறிது நனைத்து உலர்த்தி, சிறிது வறுத்து, லேசாக இடித்தால், தட்டையாகி அரிசி வேறு, உமி வேறாக பிரியும். தட்டையான அரிசிக்கு அவல் என்று பெயர். அவலை ஊறவைத்து வெல்லத்துடன் சாப்பிடலாம். குழைய வேகவைத்த அவலுடன் தயிர் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
அவலுடன் பால், சர்க்கரை சேர்த்து உண்ண உடல் பலம் பெறும். அரிசி அன்னத்தை விட அவலால் வலிவு அதிகம் உண்டாகும்.
அவல் ஊறவைத்த நீரை மட்டும் பருகினால், வயிற்றில் வாய்வு உண்டாகி, வலி கூட ஏற்படலாம்.
நெற்பொரி
நெல்லை பொரித்து, உமியை நீக்கி எடுத்தால் நெற்பொரி கிடைக்கும். இதை கஞ்சியாக தயாரித்து. வயிற்று நோய், சுரம், நீர்ச்சுருக்கு உள்ள நோயாளிகளுக்கு கொடுக்கலாம். சூடான பால் அல்லது தயிர், பழச்சாறு இவற்றில் ஊறவைத்து சாப்பிடலாம். நாவரட்சி, வாந்தி, வயிற்றுப்புண், விக்கல் மயக்கம், பேதி இவற்றுக்கும் நெற்பொரி கஞ்சி பயன்படும்.
இதில் பாகு சேர்த்து உருண்டையாக பிடித்து சாப்பிடுவது குமட்டல், வாந்தி இவற்றுக்கு நல்லது. பண்டிகை காலங்களில் பொரி உருண்டை செய்வது நம் நாட்டு வழக்கம்.

Leave a Reply