மாற்றலாம்

மனசே ரிலாக்ஸ்..

டிராபிக் லைட்டில் பச்சை விழும் முன்பே இச்சையை அடக்க முடியாமல் முந்திப் பறப்பார்கள். போலீசாரைக் கடந்தவுடன் ஹெல்மெட்டை தூக்கி பெட்டியில் ஒளிப்பார்கள்.

இலவசத்தை ஒழிக்கணும்னு உதார் விட்டு விட்டு, ஏழைகளுக்காக அரசு தந்த இலவச வண்ணத் தொலைக்காட்சியை அரை விலைக்குக் கேட்பார்கள்.

பிளாட்பார விபத்து வழக்கில் சல்மான் கான் விடுதலையை விமர்சித்துவிட்டு, சாலையில் பார்க்கும் விபத்துகளை சலனமின்றிக் கடப்பார்கள்.

காரியங்கள் சாதித்துக்கொள்ள கையூட்டு தருவார்கள்.

புகழ்கிறேன் என சொல்லி பொய்யூத்தி வைப்பார்கள்.

குழந்தைத் தொழிலாளி பற்றி பேசிக்கொண்டே பத்து வயதுக்காரன் பரிமாற, வாழையிலையில் வயிறார விருந்துண்பார்கள்.

ரத்த உதவி கேட்டு வரும் மெசேஜ்களை வாட்ஸ்அப் குரூப்பில் போட்டுவிட்டு புண்ணியம் தேடுவார்கள்.

பேஸ்புக்கில் பத்தாயிரம் பேரை நண்பர்களாக்கிக்
கொண்டு பக்கத்து ப்ளாட்காரர் பெயரைக் கேட்டால் முழிப்பார்கள்.

கோக்கை குடித்துக்கொண்ட. கையேந்தி பவனின் சுகாதாரம் அளப்பார்கள்.

டாக்கிங் டாமை கொஞ்சும் நேரத்தில் கொஞ்ச நேரம் குழந்தைகளைக் கொஞ்சுவதில்லை.

கேட்பது நண்பனாக இருந்தாலும், கடனைப் பற்றி கதைகள் பேசிவிட்டு கை விரிப்பார்கள்.

பின்னால ஃப்ளைட்டே வந்தாலும், நினைத்தவுடன் இண்டிகேட்டர் போட்டு நினைத்த இடத்தில் திரும்புவார்கள். போக்குவரத்து நெரிசல் எனத் தெரிந்தும் ஓயாமல் ஹாரன் அடிப்பார்கள்.

தவறாக யாரேனும் குறுக்க வந்தால் கூட, மனசுக்குள் கெட்ட வார்த்தை சொல்லிப் பார்ப்பார்கள்.

குறுக்கு வழிகளை குழந்தைகளுக்கும் சொல்லித் தருவார்கள். பிள்ளைகள் மனதில் போட்டி, பொறாமைகளைப் பதிய வைப்பார்கள்.

நீண்ட நெடிய வரிசையில் இடையில் நுழைய வாய்ப்பிருக்கா என பார்ப்பார்கள். கர்ப்பிணியோ கிழவியோ நின்றே பயணிப்பதைப் பார்த்தாலும், தூங்குவது போல பாசாங்கு செய்வார்கள்.

கவுன்சிலரைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டுவிட்டு காந்தியையும் காமராஜரையும் கக்கனையும் கிழிப்பார்கள்.

வீட்டுக்குள் வெள்ளம் வராவிட்டால் கூட, நிவாரண நிதிக்கு பேர் கொடுப்பார்கள்.

பெரியாரின் பேரன் போல பேசினாலும், ஜாதி தெரிந்த பின்தான் பழகுவார்கள்.

நேர்மை, நாணயம் பேசிக்கொண்டே, சிபாரிசு கிடைக்குமா என தேடிப் போவார்கள்.

மன அமைதிக்கு யோகா சென்றுவிட்டு, வெளியே டூ வீலரில் யாராவது உட்கார்ந்திருந்தால் சண்டைக்குப் போவார்கள்.

திரையுலகம் தவறான வழியில் செல்கிறதென விமர்சித்து விட்டு திருட்டு டி.வி.டியில் படம் பார்ப்பார்கள்.

– – – இப்படியாக எல்லாவற்றையும் மறக்காமல் மாறாமல் செய்துகொண்டே, மாற்றம் வேண்டுமென, ஒழுங்காகப் பணியாற்றும் அதிகாரிகளை அரசியலுக்கு அழைப்பார்கள்.

மாற்றங்கள் மற்றவர்கள் கொண்டு வருவதல்ல;

என்னை நானும் உன்னை நீயும் மாற்றிக் கொண்டால், நாம் உலகை மாற்றலாம்.??

Leave a Reply