மாடித்தோட்ட வெள்ளாமை

‘எங்களுக்கும் வயல்வெளிகளில் உழைக்கத்தான் ஆசை. ஆனால், எங்கே உழைப்பது என்றுதான் தெரியவில்லை’ நிலமற்றவர்களின் இந்தக் குரல், சிற்றிதழ் ஒன்றில் பதிவாகி இருந்தது. இதேபோல… ‘எங்களுக்கும் விவசாயம் செய்ய ஆசைதான்… ஆனால், எங்கே போய் விதைப்பது?’ என்கிற ஆதங்கம், விவசாய ஆர்வமுள்ள நகர்ப்புறவாசிகளிடம் நிறையவே இருக்கிறது. இவர் களுக்கெல்லாம் வழிகாட்டுவது போல… வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், சமையலறைத் தோட்டம் என்று பலரும் காய்கறி உற்பத்தியில் கலக்கிக் கொண்டுள்ளனர்!

ஈரோடு, திண்டல், காரப்பாறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார், மாடித்தோட்டத்தில் வெற்றிக்கொடி நாட்டிக் கொண்டிருக்கிறார். அம்மா சரஸ்வதி, மனைவி கல்பனா சகிதம் மாடித்தோட்டப் பராமரிப்பிலிருந்தவரைச் சந்தித்தபோது… தகுந்த இடைவெளியில் வரிசையாக அணிவகுத்து நின்ற தொட்டிச் செடிகளை வருடியபடியே பேசினார்.

”எனக்குச் சொந்த ஊர் சத்தியமங்கலம். படிச்சு முடிச்சு அமெரிக்காவுல ஐ.டி. கம்பெனியில வேலை பார்த்தேன். பிறகு, ஈரோடு வந்து இந்த இடத்துல வீடு கட்டி குடியிருக்கேன். கம்ப்யூட்டர் சம்பந்தமான பயிற்சி நிறுவனத்தை வீட்டுலயே நடத் திட்டுருக்கேன். ரெண்டு வருஷமா மாடியில தோட்டம் அமைச்சு காய்கறி, கீரை, மூலிகைனு வளர்த்துட்டிருக்கேன்.

ஆரம்பத்துல எட்டு கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற மார்க்கெட்டுக்கு போய்தான் காய்களை வாங்கிட்டு வருவோம். சில நேரத்துல நாம விரும்புற காய்களைவிட, கிடைக்கற காய்களைத்தான் வாங்க வேண்டி யிருக்கும். விலையும் கட்டுப்படியா இருக்காது. இந்த சமயத்துலதான், மாடித்தோட்ட ஆசை வந்துச்சு. தங்கைகளோட வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருக்காங்க. அதை யெல்லாம் பாத்துட்டு வந்து, இயற்கை முறையில வீட்டுத்தோட்டம் அமைச் சுட்டோம்” என்று முன்னுரை கொடுத்த சிவக்குமார், தோட்ட அமைப்பு முறைகளை விளக்கினார்.

”மொத்தம் 1,500 சதுர அடியில தோட்டம் இருக்கு. 600 சதுர அடி பரப்புல நிழல் வலைப் பந்தல் போட்டிருக்கோம். மாடித் தோட்டம் அமைக்கறதுக்கு முதல்கட்டமா, காலி டப்பா, டின்கள், பழைய பக்கெட்டுக்கள், கிரீஸ் டப்பாக்கள், மண்தொட்டிகள்னு பயன்பாடு முடிஞ்ச பொருட்களா சேகரிச் சோம். 150 சட்டி செம்மண், 30 மூட்டை தேங்காய் மஞ்சி ரெண்டையும் சரிசமமா கலந்து, தண்ணீர் தெளிச்சு கலக்கி, நிழல்ல காய வெச்சு… அதுல நாலு சட்டி, ஒரு கிலோ சாணம், அரை கிலோ ஆட்டு எரு, கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு கலந்து, தொட்டிகள்ல நிரப்பி செடிகளை நட்டு வெச்சோம்” என்று தொழில்நுட்பங்களோடு சொன்னார்.

தரை சேதமாவதில்லை!

மகனைத் தொடர்ந்த சரஸ்வதி, ”சிறுசு, நடுத்தரம், பெருசுனு 350 தொட்டிகள்ல செடிகளை வளர்க்கிறோம். மொட்டை மாடியில மழைநீர்ச் சேமிப்புத் தொட்டியும் அமைச்சுருக்கோம். அதுல சேகரமாகற தண்ணி, வீட்டுக் கழிவு நீர் ரெண்டையும்தான் செடிகளுக்கு ஊத்து றோம். வீட்டுக்கு வாங்கற லாரி தண்ணியையும் ஊத்துவோம். நீளமான மரப்பலகைய வெச்சு, அது மேல தொட்டிகளை வெக்கறதால, தரை ஈரமாகி சேதாரம் ஆகற தில்லை. ஒவ்வொரு செடியோட வளர்ச்சியைப் பொறுத்து, தொட்டிகளோட உயரத்தை அமைச்சுக் கணும். காலையில ஒரு மணி நேரம் சாயங் காலம் ரெண்டு மணி நேரம் மாடித் தோட்டத்துல குடும்பத்தோட வேலை பார்க்கிறோம். சாயங்காலம் எங்க வீட்டுக் குட்டிகளும் தோட்ட வேலையை ஆர்வமா செய்றாங்க. முழுக்க இயற்கை இடுபொருட் களையே பயன்படுத்துறோம்.

களைகள் முளைச்சா, அப்பப்போ எடுத்துடுவோம். கொடிப்பயிர்கள் படர்றதுக் காக ரீப்பர் குச்சிகளை தொட்டிக்குள்ள பதிச்சுருக்கோம். அறுவடை முடிஞ்ச தொட் டில செடிகளைப் பிடுங்கி அப்புறப்படுத்திட்டு, தொட்டி மண்ணை சுத்தமான தரையில் கொட்டி வெயில்ல காய விடுவோம். தொட்டியையும் சுத்தமாக கழுவி உலர வெச்சுட்டு, காய வெச்ச மண்ணை நிரப்பி, ஒரு கிலோ மண்புழு உரம், ஒரு கிலோ எரு, ஒரு கைப்பிடி வேப்பம் பிண்ணாக்கு எல்லாத்தையும் போட்டு புதுசா செடிகளை நடுவோம். இங்க, மூலிகைச் செடிக அதிகமா இருக்கறதால, பூச்சிகள் வர்றதில்லை. அதையும் மீறி வர்ற பூச்சிகளை, நீம் மருந்து அடிச்சு விரட்டிடுவோம்’’ என்றார்.

இங்க இல்லாததே இல்லீங்க..!

மாமியாரைத் தொடர்ந்த கல்பனா, ”தக்காளி, கத்திரி, முள்ளங்கி, பீட்ரூட், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், மிளகாய், வெண்டை, பொரியல்தட்டை, ‘கோழி’ அவரை, கொத்தவரை, ‘பெல்ட்’ அவரை, பீர்க்கன், பாகல், மிதிப்பாகல், சுரைக்காய், அகத்தி, புளிச்சக்கீரை, வல்லாரை, தவசி முருங்கை, மணத்தக்காளி, தூதுவளை, சிறுகீரை, தண்டுக்கீரை, வெந்தயக்கீரை, பொன்னாங்கண்ணிக்கீரை,  இஞ்சி, பூண்டுனு வகை வகையா காய்களை நட்டு வெச்சுருக் கோம். அப்புறம்… அக்ரகாரம், அப்பக்கோவை, ஆடாதொடா, இன்சுலின் (சர்க்கரைக் கொல்லிச் செடி), கற்பூரவல்லி, கானாவாழை, சிறியாநங்கை, சிறுகுறிஞ்சான், சீந்தல், பிரண்டை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, தொட்டால்சிணுங்கி, நித்யகல்யாணி, வெற்றிலை, நொச்சி, மென்தால், முசுமுசுக்கை, லெமன் கிராஸ், ஆகாச கருடன், சோற்றுக்கற்றாழைனு மூலிகைகள்; அரளி, ரோஜா, முல்லை, மல்லிகை, செண்டுமல்லி, நந்தியாவட்டை, இட்லிப்பூனு பூச்செடிகள்; பூவாழை, தேன்வாழை மரங்களும் மாடியில இருக்கு. தனியா அசோலாவையும் வளர்க்குறோம்’ என்று பட்டியல் போட்டுக் கொண்டே போக, அசந்து நின்றோம்.

ஆண்டுக்கு 15 ஆயிரம் லாபம்!

நிறைவாகப் பேசிய சிவக்குமார், ”எங்க குடும்பத்துல 5 பேர். எங்களுக்கான காய்கறி தேவையில 70% இந்த மாடியிலேயே கிடைச்சுடுது. அந்த வகையில வருஷத்துக்கு காய்கறிக்காக செலவழிக்கிற 15 ஆயிரம் ரூபாய் எங்களுக்கு மிச்சம். காஸ்மோபாலிடன் சிட்டி, வெளிநாடுனு நல்லா வாழ்ந்தாலும், பரம்பரைத் தொழிலான விவசாயத்தை விட்டுட்டோமேங்கிற வருத்தம் முன்ன இருந்துச்சு. இப்போ அது போயேபோச்சு” என்றார், மகிழ்ச்சியுடன்.

 

தொடர்புக்கு,
சிவக்குமார்,
செல்போன்: 95000-58591

-vikadan

Leave a Reply