மரத்துக்கு அழிவில்லை

ஆலமரம்

ஆலமரம் ஆதிகாலம் தொட்டே இந்தியாவில் இருந்து வருகிறது. குறிப்பாக, இமய மலைச்சாரல் காடுகளிலும், இந்திய தீபகற்பத்தின் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலைச்சரிவுகளிலும் காணப்படுகிறது. சாலை ஓரங்களிலும், ஆலயங்களின் அருகிலும், ஆறுகளின் கரை ஓரங்களிலும் காணப்படுகிறது.

கிராமங்களில் பெருமளவு ஆலமரங்கள் வளர்கின்றன. பரந்து விரிந்து நிழல் தருவதால் கிராம மக்கள் கூடும் இடமாகவும், கிராம வாணிபம் நடைபெறும் இடமாகவும், கால்நடைகளின் உறைவிடமாகவும், கிராம சங்கங்களின் கூட்டம் நடத்தும் இடமாகவும் ஆலமரங்கள் திகழ்கின்றன. இந்திய நாட்டின் வெப்ப பகுதிகளில் கடும் வெப்பத்தில் இருந்து தங்களை காத்துக் கொள்ள ஆலமரங்களை நடுகிறார்கள். இந்த மரத்திற்கு ஆங்கிலத்தில் பன்யான் ட்ரீ என்று பெயர் வந்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. பெர்சியா வளைகுடாவில் பனியாக்கள் எனப்படும் வியாபாரிகள் இறைவணக்கத்திற்காகவும், வியாபாரத்துக்காகவும் இந்த மரத்தின் அடியில் அடிக்கடி கூடுவார்கள். எனவே அந்த மரத்துக்கு ஆங்கிலேயர்கள் பனியாக்களின் பெயரையே அந்த மரத்துக்கு வைத்து விட்டார்கள்.

ஆல மரங்களை கட்டுப்படுத்தாமல் விட்டு விட்டால் இவை தொடர்ந்து பல மீட்டர் அளவுக்கு அகலமாக விழுதுகள் விட்டுச் செல்லக் கூடியவை. பொதுவாக பல சந்தர்ப்பங்களால் ஆல மரங்கள் முழுமையாக வளர முடிவதில்லை. பல இடங்களில் குழந்தைகள் ஆல மரத்தின் விழுதுகளை ஊஞ்சலாக உபயோகிப்பதால் விழுதுகளும், வேர்களும் சேதம் அடைகின்றன. அதனால் அவை நிலத்தினை வந்து அடைவதில்லை. சில இடங்களில் கால்நடைகள் தங்களின் உணவாக ஆல மரத்தில் இருந்து கீழே தொங்கும் இளம் விழுதுகளை உண்கின்றன. இதனாலும் அந்த விழுதுகள் பூமியை வந்து அடைய முடியாமல் தடுக்கப்படுகின்றன.

சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீதையில் ஆல மரத்தின் பெருமை கூறப்பட்டிருக்கிறது. எவ்வளவுதான் தடுத்தாலும் ஆல மரங்களின் பழங்களை பறவைகள் விரும்பி உண்பதால் அவை பறவைகளால் எடுத்துச் செல்லப்பட்டு நாட்டில் விதைகள் பரவி மரங்கள் மீண்டும், மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கின்றன. எனவே ஆல மரத்துக்கு அழிவில்லை என்கிறார்கள்.

Leave a Reply