மதுரை கிச்சன்‬

வெங்கடேஷ் ஆறுமுகம்- பதிவு

சென்னை புரசைவாக்கம் அபிராமி மால் ஃபுட் கோர்ட்டில் மதுரை கிச்சன்‬ என்ற புதிய கடை ஆரம்பித்துள்ளார் என் மனைவி. கடந்த மாதமே திறப்புவிழா என்ற போதிலும் இது பற்றி எழுத ஒரு மாதம் எடுத்துக் கொண்டதற்கு காரணம் இருக்கிறது.

மக்களின் வரவேற்பை பொறுத்து எழுதக் காத்திருந்தேன் ஏனெனில் உணவு வகைகளுக்கு சாப்பிடுபவர் திருப்தி தான் மிகப் பெரிய விளம்பரம்.. இரண்டாவது பர்கர், பீட்சா, தந்தூரி, சாக்லெட் பவுன்டன் போன்ற நவ நாகரீக ஜங்ஃபுட் உணவுக்கடைகளுக்கு நடுவே…

நாங்கள் பருத்திப்பால், பணியாரம்,புட்டு, ஆப்பம், சூப் என்று விற்க வேண்டும் அதை மக்கள் விரும்ப வேண்டும்.. ஆரோக்கியமான உணவு தான் என்றாலும் கோட் சூட் போட்ட கனவான்களுக்கு நடுவில் வேட்டி கட்டியவர் நின்றது போல நாங்கள். ஆனாலும் இந்த வேட்டி வெற்றி பெற்றிருக்கிறது.

ஆரம்பித்த முதல் மூன்று நாட்களில் எங்கள் கடையை அலட்சிய பார்வை வீசி கடந்து சென்றார்கள் இன்றைய நாகரீகர்கள்.. வியாபாரமே இல்லை.. கொண்டு போனதெல்லாம் அப்படியே திரும்பியது.. முதல் 3 நாட்களின் மொத்த வியாபாரம் 200 ரூபாயைக் கூட தாண்டவில்லை.

நானும் சோர்ந்து போக என் மனைவி மட்டும் தைரியமாக இருந்தார்.. கொஞ்சம் இருங்க மாத்தி யோசிப்போம் என்றவர் தன் யோசனையை சொன்னார்.. பணியாரம் என்பது டிரடிஷன் அதை இந்த காலத்தவர் ஏற்கும் படி மாற்றலாம் என்றார் எப்படி என்றேன்.. சொன்னார்..

வெறும் பணியாரமாக இன்றி ட்டூட்டி ஃபுரூட்டி பணியாரம், டேட்ஸ் திராட்சை பணியாரம், சாக்லேட் பணியாரம், ஹார்லிக்ஸ் பணியாரம், பூஸ்ட் பணியாரம் என ஐடியா தந்தார். பரபரப்பாக செயலில் இறங்கினோம்.. டெஸ்ட் செய்து பார்த்தோம் எல்லாம் பிரமாதமான சுவையில் வந்தது.

5வது நாள் களத்திலிறங்க கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் கடையை மொய்க்க ஆரம்பித்தார்கள்.. பிறகு எக் பணியாரம் பெப்பர் இட்லி, மினி இட்லி என விரிவு படுத்தினோம்.. 15 நாட்களில் வியாபாரம் சூடு பிடித்தது.. 16 வது நாள் மால் முதலாளி அழைத்தார்..

சிறிது பயத்துடன் போய் நின்றோம்.. அடுத்த வாரம் மாலில் ஒரு பிசினஸ் மீட்டிங் 200 பேரு வருவாங்க நீங்க தான் ஸ்நாக்ஸ் தரப்போறிங்க என 200 பேருக்கு ஆர்டர் தந்தார்.. அதற்கு அடுத்த வாரமே அவரது வீட்டு விசேஷத்திற்கு 100 பேருக்கு ஆர்டர்.. தந்தார்.

நேற்று கூப்பிட்டு இன்னும் பல புதிய உணவு வகைகளை அறிமுகப்படுத்துங்க.. எனக் கூறி பெரிய கடை வேண்டுமானாலும் எடுத்துக்கோங்க எனக் கூறியிருக்கிறார். இதெல்லாம் வெறும் 25 நாளில்… சோர்வு இல்லாமல் தோல்வியை எதிர்கொண்ட என் மனைவிக்கே இப்பெருமை எல்லாம் போய்ச் சேரும்.

-வெங்கடேஷ் ஆறுமுகம்

 

Leave a Reply