மகத்தான தொழில்

மத்த வேலைகளைப் போல இல்ல நெசவு.

தறி குள்ள இறங்கிட்டா ஐம்புலனும் வேலை செய்யனும்.

ஒரு நூல் இழை மாறாம கண்ணு பார்க்கணும்.

தறியோட ஒவ்வொரு சத்தத்தையும் காது கேட்கணும்.

குழந்தையைப் போல  தறில துறுதுறுன்னு கை விளையாடணும்.

தறியின் வாசத்தை மூக்கு சுவாசிக்கிட்டே இருக்கணும்.

இது மட்டும் இருந்தா பத்தாது. கலை ரசனையும் வேணும்.

அலுவலத்தில் மின்விசிறிக்கு கீழே வேலை பார்ப்பதுபோல் கிடையாது.வியர்வை புழுக்கம் தாங்காமல் கோவணமோ அல்லது துண்டோ கட்டிக்கொண்டுதான் வேலை பார்க்கணும்.தறிகட்டை மிதிக்கும் இடத்தில் இரண்டு கால்களுக்கும் இடையில் கொசுவர்த்தி புகைந்து கொண்டிருக்க வேலை பார்க்கணும்.முறையாக வேலை பார்த்தால் ஒரு நாளைக்கு கூலி ரூபாய் 80 அல்லது 100 கிடைக்கும்.

 கோயில் கட்டுமானமும், கலை நுட்பமும் நம் கண்ணை கவரும் நேரம், அதில் ஈடுபட்டோரின் உழைப்பும் வலியும் உயிர் பலியும் நாம் அறியோம்.அப்படித்தான் மனிதர்களின் மானம் காக்கும் ஆடை நெய்வோர்களாகிய நெசவாளியும் வாழ்க்கையும் யாரும் அறிவதில்லை.

குரங்கிலிருந்து தோன்றி அம்மணமாக திரிந்த மனித குலத்தின் நாகரிக வளர்ச்சியில் உடையும் முக்கியமானது,அதனால்தான் உழவும் நெசவும் எல்லா நாடுகளிலும் முக்கியத்துவம் பெறுகிறது.உழவன் ஏர் பிடித்தான்.நெசவாளன் தறி பிடித்தான்.

ஆண்டிகளின் கோவணமாணாலும் அரசனின் பட்டாடையானலும் சரி. அடிப்படையில் மனிதனின் மானம் காக்கும் மகத்தான தொழிலாக நெசவு இருந்துவருகிறது.

Leave a Reply