‘ப்ளீஸ்… ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க…’

‘ப்ளீஸ்… ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க…’ – அரசு அதிகாரிகளிடம் பட்டாசு ஆலை அதிபர்கள் ‘கெஞ்சல்’!
விருதுநகர்: “சீனா பட்டாசு வருகையால் சிவகாசி பட்டாசுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால், ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீங்க!” என்று அரசு துறையினருக்கு ‘பொட்டில் அறைந்தது மாதிரி’ பட்டாசு ஆலை அதிபர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிவகாசி மற்றும் அதைச் சுற்றி ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த பகுதியில், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக பட்டாசு தொழில் விளங்கி வருகிறது. சிவகாசியில் தயாராகும் பட்டாசுகள்,  தமிழகம் மட்டுமின்றி வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்தத்தில் இந்தியாவில் 80 சதவீதம் பட்டாசு உற்பத்தி சிவகாசியில்தான் நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இருந்து ஒவ்வொரு தீபாவளிக்கும் சென்னை தலைமைச்செயலகம் உள்பட பல்வேறு இடங்களில் பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு சிவகாசி பட்டாசு ஆலைகளில் இருந்து  ஓ.சி. பட்டாசுகளை வாங்கி அனுப்பி, அவர்களை குளிரூட்டும் பணி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஓ.சி. பட்டாசு வாங்குவதில் வெடி பொருள் கட்டுப்பாட்டுத்துறை, தீயணைப்புத்துறை, வணிகவரித்துறை என்று பல துறைகள் தீவிரம் காட்டினாலும் இவை அனைத்தையும் காட்டிலும் இந்த விவகாரத்தில் பெரும் பங்காற்றுவது மாவட்ட வருவாய்த்துறையும், போலீஸ் துறையும்தான்.

வருவாய்த்துறை மற்றும் போலீஸ் துறை ஆகியவற்றில் ஏதோ வெள்ளப்பெருக்கு, சட்டம் ஒழுங்கு பிரச்னையை கையாள்வதுபோல் ஓ.சி. பட்டாசு வாங்குவதற்கு என்று ஒரு தாசில்தார் தலைமையில் தனி டீம் அமைப்பார்கள். போலீஸ் துறையிலும் ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் ஸ்பெஷல் டீம் அமைப்பார்கள். இவர்களது வேலை ஜீப்பை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு பட்டாசு ஆலைகளுக்கும் சென்று ஓ.சி. பட்டாசுகளை கலெக்‌ஷன் பண்ணுவதுதான். பெரிய பட்டாசு ஆலைகள் என்றால் கெஞ்சி கூத்தாடி வாங்குவார்கள். அதே நேரத்தில் சின்ன பட்டாசு ஆலைகள் என்றால் மிரட்டி வாங்குவார்கள்.

கலெக்‌ஷனான மொத்த ஓ.சி. பட்டாசுகளையும் சேகரித்து வைத்துக் கொண்டு வருவாய்த்துறையில் இருந்து ஒரு ஸ்பெஷல் டீம் லாரிகளில் இந்த ஓ.சி., பட்டாசுகளை பண்டல் பண்டலாக ஏற்றிக் கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் ஏற்கனவே பணியாற்றிய கலெக்டர் மற்றும் தலைமைச்செயலகத்தில் உள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் வீடுகளுக்கு சென்று நேரடியாக டோர் டெலிவரி செய்யும். இதற்கான போக்குவரத்து செலவு மற்றும் இதர செலவு விவகாரங்களை வருவாய்த்துறையின் கீழ் இயங்கும் கனிம வளத்துறை ஏற்றுக்கொள்வது வழக்கம். போலீஸ் துறையிலும் இதே கதைதான்.

மேலும், தீபாவளிக்கு 5 நாட்களுக்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் இருந்து வருவாய்த்துறை மற்றும் போலீஸ்துறையில் இருந்தும் ஓ.சி. பட்டாசுகளை ஏற்றிக் கொண்டு சென்னையை நோக்கி லாரிகள் கிளம்பும். ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் இந்த ஓ.சி., பட்டாசுகளை தங்களுக்கு கிடைக்கும் கவுரவம் என்று கருதி வாங்கிக்கொள்வார்கள். இதுதான் காலம் காலமாக நடந்து வரும் ஓ.சி. பட்டாசின் கதை.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சீனா பட்டாசு வருகையினால் சிவகாசி பட்டாசு தொழில் நலிவடைந்து வருகிறது. அதனால், ஓ.சி. பட்டாசு கேட்டு அரசுத்துறை அதிகாரிகள் வர வேண்டாம் என்று பட்டாசு ஆலை அதிபர்கள் பத்திரிகைகள் வாயிலாக வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனாலும் இது செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் இருக்கிறது. இதேபோல் இந்த ஆண்டும், சிவகாசியில் உள்ள தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப்வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) இன்று “ஓ.சி. பட்டாசு கேட்டு வராதீர்கள் ப்ளீஸ்…” என்று பத்திரிகை வாயிலாக கெஞ்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதில் மேலும், ”சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் ‘பொட்டாசியம் குளோரைடு’ என்ற ஆபத்தான வேதிப்பொருள்களால் தயாரிக்கப்படும் சீனப் பட்டாசுகள் சட்ட விரோதமாக இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்டு நாடு முழுவதும் விற்கப்படுவதால் சிவகாசி பட்டாசுகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தொழிலாளர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை கொடுப்பது என்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. மூலப்பொருள்கள் விலை உயர்வால் சிவகாசி பட்டாசு தொழில்,  பெரிய ஆபத்தை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

இந்நிலை தொடர்ந்தால், பாரம்பரியமிக்க பட்டாசு தொழில் முழுவதும் நசிந்து விடும் என்று பட்டாசு தொழில் அதிபர்களும், பட்டாசு தொழில் நசிந்து விட்டால் நாம் வேலைக்கு எங்கே செல்வது என்று தொழிலாளர்களும் அனுதினம் மனம் நொந்து கொண்டிருக்கின்றனர். இந்த இக்கட்டான வேளையில் பலமுறை தெரிவித்தும்,  வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்னும் தொடர்ந்து இலவச பட்டாசு கேட்டு வரும் நபர்களை பற்றி நாம் என்னவென்று சொல்வது?

எனவே, அன்பார்ந்த அதிகாரிகளே! எங்கள் கஷ்டங்களை புரிந்து கொண்டு இலவச பட்டாசு கேட்டு வருவதை அடியோடு நிறுத்துங்கள். எந்த தொழிலிலும் இல்லாத ஒ.சி. கேட்கும் பழக்கத்தை பட்டாசு தொழிலில் மட்டும் எதிர்பார்க்க வேண்டாம். நசிந்து வரும் பட்டாசு தொழிலை காத்திட உறுதுணையாக இருங்கள்” என்று கூறி உள்ளனர்.

– எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

-Thanks-Vikatan

Leave a Reply